வியாழன், 9 மே, 2019

எங்கே போனது எங்கள் வாக்கு
(ச.பாலமுருகன்)
ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பது அவர்களின் சனநாயக கடமை என்ற முழக்கம் பரவலாக்கப்பட்ட சூழலில் எனது ஊருக்கு பவானியில் வாக்களிக்க சென்ற போது வாக்காளர் பட்டியலில் எனது பெயர் மட்டும் இல்லை. எனது குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் பெயர் உள்ளது. எனது பெயர் நீக்கப்பட்டோர் பட்டியலிலும் இல்லை அதே சமய்ம் வாக்காளர் ,பட்டியலிலும் இல்லை. எனக்கு வேறு பகுதியில் வாக்கு கிடையாது. எங்கே போனது எனது வாக்கு? பதில் சொல்லும் இடத்தில் இருப்பதோ தேர்தல் ஆணையம். தேர்தல் தினத்தில் எங்கே போனது எங்கள் வாக்கு? என கேள்வி எழுப்பிய வாக்கை பறிகொடுத்த பலரை நான் காண முடிந்தது. எல்லா பாராளுமன்ற தொகுதியிலும் இது போல பலரின் பெயர்கள் விடுபட்டுள்ளது இந்த பாராளுமன்ற தேர்தலில் முக்கியமானதாய் இருந்த்து.
. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் சுமார் நாற்பதாயிரம் வாக்காளர் பெயர் விடுபட்டு போயுள்ளதாக தகவல் வந்துள்ளது. தூத்தூர் கிராமத்தில் சுமார் 1,200 பெயர்களும், கலியபட்டிணத்தில் 920, ,இணையம் கிராமத்தில் 500 என மொத்தம் 48 மீனவ கிராமங்களில் சுமார் நாற்பதாயிரம் வாக்காளர்கள் பெயர் விடுபட்டுள்ளது என்பது அப் பகுதி மக்களின் குற்றச்சாட்டு. ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கடற்கரை மீனவ கிராமங்கள் இவை. பெரும்பாலும் கத்தோலிக்க கிருத்துவ மீனவ மக்கள் நிறைந்த பகுதி இவை.
தேர்தல் நாளில் எனது வாக்கு மறுக்கப்பட்ட்தை அநீதி என கருதினேன். விரலில் மை வைத்து முகநூலில் படம் பதிவும் நிகழ்வுகள் பார்த்தபோது அந்த அந்த பெரும்பான்மையில் நானில்லை என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் வேதனையையும் ஏமாற்றத்தையும் கொடுத்த்து.. தேர்தல் ஆணையம் சொல்வது போல மக்கள் எச்சரிக்கையாக இருந்து வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டுள்ளதா? என பார்த்திருக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக அல்லது சோம்பேறியாக .சித்தரிக்கும் போக்கின் ஊடே ஒரு கேள்வி எழுந்தது. இத்தனை வருடமும் பல தேர்தலில் தானாக சோதிக்காமலேயே வாக்காளர் பட்டியலில் இருந்த பெயர் தற்போதைய தேர்தலில் நீக்கப்பட்ட்து தற்செயலானதா? இதன் பின்ன்னியில் உள்ள அரசியல் என்ன?
கன்னியாகுமரியில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெரும்பாலான மக்கள் கடந்த காலங்களில் புயல் உதவி உள்ளிட்ட செயல்பாடுகளில் ஆளும் கட்சியின் மீது கசப்புணர்வு கொண்டவர்கள். அவர்களின் நன்மதிப்பை பெற முயற்சிப்பதை விட பட்டியலிலிருந்து பெயரை நீக்குவது ஆள்பவர்களுக்கு எளிய வழி. தனக்கு எதிரான வாக்குகளை இல்லாமல் செய்துவிடுவது. இந்த யுக்தியானது கடந்த காலங்களில் அமெரிக்கா தேர்தலில் கடைபிடிக்கப்பட்டதுதான். அந் நாட்டில் “களையெடுப்பு” என்ற பெயரில் நீக்கப்படும் வாக்காளர்கள் பெரும்பாலும் அரசோடு முரண்படுவோராக இருப்பதை காண முடியும் குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ,ஆசிய அமெரிக்கர்கள் , தென் அமெரிக்காவிலிருந்து குடி பெயர்ர்ந்தவர்கள் என் பட்டியல் நீளும். கடந்த தேர்தலில் சுமார் 1,25000 ஜனநாயக கட்சி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.. 2016 வருடம் நியூயார்க் சிட்டி வாக்காளர் போர்டில் சுமார் இரண்டு லட்சம் வாக்காளர் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எதிர்மறையான வாக்குகளை சுலபமாக தேர்தல் ஊழியர்கள் உதவியுடன் நீக்கிவிடுவது ஒரு வழிமுறை. அமெரிக்க தேர்தல் கம்பெனிகளின் ஆலோசனைகளுடன் தேர்தலை எதிர்கொள்ளும் நமது அரசியல்வாதிகள் இந்த பெயர் நீக்க தந்திரத்தை கடைபிடிக்கின்றார்களோ என்ற ஐயம் எழுகின்றது.
நாட்டின் பல பகுதிகளிலும் தகுதியான பல கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர் பட்டியலிலிருந்து விடுபட செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் விடுபடும் வாக்காளர்கள் பெயர்கள் குறித்து ஹைதிராபாத் ரே லேப் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை அதிகாரி காலித் சைபுல்லா என்பவர் பிற 17 ஆய்வாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து நடத்திய கள ஆய்வை முடிவானது பல அதிர்ச்சியான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையுடன் வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு ஆய்வு செய்த போது கடந்த வருடம் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மட்டும் சுமார் பதினைந்து இலட்சம் இஸ்லாமிய வாக்காளர்கள் பெயர் விடுபட்டதை கண்டனர். மேலும் உத்திரபிரதேசம், மகாராஷ்ரா மற்றும் உத்திராகாண்டு உள்ளிட்ட மாநிலங்களை சேர்த்து சுமார் 800 சட்டமன்ற தொகுதிகளில் ஆய்வு செய்த போது 12.7 கோடி தகுதி வாய்ந்த வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது..
கடந்த 2017 குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கோத்ரா சட்டமன்ற தொகுதியில் வெறும் 258 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி கொண்டது. ஆனால் அந்த தொகுதியில் சுமார் 1000 முஸ்லீம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. பொதுவில் சட்டமன்ற தேர்தல்களில் பெரும்பாலும் மூன்றில் ஒரு பங்குதொகுதிகளில் சுமார் 2000 வாக்குகளில் வெற்றி தோல்வி முடிவு செய்யப்படுவதை காணலாம்.
ஊடகவியலாளர் பிரனாய் ராய் மற்றும் தோரப் சபரிவாலா இணைந்து எழுதிய புத்தகத்தில்( The Verdict: Decoding India’s Elections )சுமார் இரண்டு கோடியே இருபது இலட்சம் தகுதி வாய்ந்த பெண் வாக்காளர் பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் சுமார் 40,000 வாக்காளர் பெயர் விடுபடுவதற்கு இணையானது. மேலும் மேற்கண்ட எண்ணிக்கையில் உத்திரபிரதேசத்தில் மட்டும் 68 இலட்சம் பெண்கள் விடுபட்டதாக கருதப்படுகின்றது. இந்த வாக்காளர் பட்டியலிருந்து எடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்கள் ஆவர். வாக்காளர் பெயர் நீக்கத்தில் சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் அரசியல் காழ்புணர்வு பெரும் பங்காற்றுகின்றது.
கடந்த 2015 ஆண்டு தேசிய வாக்காளர் பட்டியல் தூய்மை செய்தல் திட்டம் என்ற அடிப்படையில் ஆதார் கணக்கெடுப்பு செயலி மூலம் தேர்தல் ஆணையம் ஊரை விட்டு சென்றவர், ஆதார் எண் இல்லாதவர், இரண்டு இடங்களில் வாக்கு உள்ளவர் என பல காரணங்களை சொல்லி பலரின் பெயர்களை நீக்கியுள்ளது. இது வெளிப்படை தன்மையற்றதாகவும் விருப்பு ,வெறுப்பு சார்ந்தும் குறிப்பிட்ட மக்களை புறக்கணிக்கவேண்டும் என்ற பார்வையின் அடைப்படையிலும் அமைந்த்தாக பல அரசியல் கட்சிகள் குரல் எழுப்பினர்.
உரிய வயது வந்த அனைவரும் வாக்களிக்கும் உரிமையை அரசமைப்பு சட்டம் உறுதி செய்கின்றது. அந்த உரிமை பெற மக்கள் நீண்ட போராட்ட்த்தை நடத்தினார்கள். வயதுவந்த தகுதியானவர்களை வாக்களிக்காமல் தடுக்கும் செயல் அரசமைப்புக்கு எதிரானது.ஆனால் தேர்தல் ஆணையம் இது குறித்து எந்த உறுதியான நிலைபாட்டையும் எடுக்கவில்லை. கன்னியாகுமரி போன்ற தொகுதிகளில் விடுபட்ட மக்களின் வாக்குகளை பதிவு செய்ய நடவடிக்கை தேவை. அதன் பின்பே வாக்கு எண்ணிக்கை நடத்துவதே சரியானதாக இருக்க முடியும். பெயர் விடுபட்ட தகுதியான வாக்காளர்கள் பெயர்களை சேர்த்தே சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும். விடுபட்ட வாக்காளர் பெயர்கள் சேர்க்க நடவடிக்கை தேவை.
Image result for missing vote india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக