சனி, 27 அக்டோபர், 2018

மாணவர்களின் அரசியல் செயல்பாடு குற்றமா?
 ( ச.பாலமுருகன்)

கோயமுத்தூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.ஏ. வரலாறு பயிலும் மாணவி எஸ்.மாலதி என்பவர் கடந்த 28.9.2018 அன்று கல்லூரி வளாகத்தில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி பகத் சிங் பிறந்த நாள் கூட்ட்த்தை பிற மாணவர்களைக்கூட்டி நட்த்தியதாகவும் எனவே அந்த மாணவியின் செயல் ஒழுங்கீனம் என முடிவு செய்து அவரை விசாரணை அறிக்கை பெறும் வரை இடை நீக்கம் செய்வதாக அந்த கல்லூரி முதல்வர உத்தரவிட்டார். அந்த உத்தரவின் நகல் ஒன்றை அப் பகுதி
 காவல்துறை ஆய்வாளருக்கும் ஆய்வாளருக்கும் அனுப்பியது கல்லூரி. பின்னர் அந்த மாணவி தற்போது மீண்டும் எச்சரிக்கப்பட்டு கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நமது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எது போன்ற ஒரு செயல்பாடுகளை நோக்கி முன்னேறுகின்றது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. மாணவர்கள் நாட்டுப்பற்றும் ,சமூக அக்கரையும் பெற்று விடக்கூடாது என்பது ஒரு புறம் , மற்றொன்று பகத் சிங் போன்ற தலைவர்களை மாணவர்கள் அறியக்கூடாது என்ற அரசியல் மறுபுறம். மேலும் இவையின்றி மாணவர்கள் ஆளும் ஆட்சிக்கு எதிராக ஒன்று சேராமல் இருக்க கல்லூரியில் காவல்துறை கண்காணிப்பு இருக்கின்|றது அல்லது காவல்துறை அறிவுறுத்தல் இதன் பின்னனியில் உள்ளது என்பதன் வெளிப்பாடாய் மாணவியின் இடைநீக்க நகல் அப் பகுதி காவல்துறை ஆய்வாளருக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படுள்ளது.

கல்லூரிகள் வெறும் ஏட்டு கல்வியை மட்டும் பெறும் இடமல்ல சுதந்திர சிந்தனை ,பொது அறிவு, நாட்டுப்பற்று மற்றும் மக்களின் சனநாயக உரிமை சார்ந்த உணர்வுகளையும் பெறும் இடமாகும்.கல்வி வளாகத்தில் நடைபெறும் ஆரோக்கியமான பொது உரையாடல் நல்ல சமூகத்தை உருவாக்க வல்லது. அதுவும் வரலாற்றுப்பாடத்தை முதுகலைப்பிரிவில் படிக்கும் மாணவி பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடியது குற்ற செயல் என கருதும் மனநிலை நமது கருத்துரிமைக்கு விடப்பட்ட பெரும் அச்சுறுத்தல் ஆகும். மேலும் வெறுப்பு அரசியலின் மற்றுமொரு வடிவமும் ஆகும்.

சில ஆண்டுகளுக்கு முன் விடுதலைப்போராட்ட தியாகி இலட்சுமண அய்யர் பற்றிய ஆவணப்படம் எடுக்க அவரின் சம காலத்தவரான பவானியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் தியாகி நல்லசாமியை பேட்டி எடுத்தோம். அவர் தன் நேர் காணலில் அவர்1930 களில் கல்லூரியில் படிக்கும் போது நிகழ்ந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்தார். சென்னை லயோலா கல்லூரியில் படித்த சமயம் பேராசிரியர்கள், முதல்வர் என ஆங்கிலேயர்கள் இருந்த சமயம் ஒரு கூட்டம் நடைபெற்ற போது திரண்டிருந்த மாணவர்கள் எல்லோரும் தங்கள் சட்டை பைகளில் மறைத்து வைத்திருந்த காந்தியின் குல்லாவை திடீரென ஒரு சேர எடுத்து அணிந்து கொண்டதையும், அது ஆங்கிலேயருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதையும் குறிப்பிட்டார். தடை செய்யப்பட்ட காந்தி குல்லாவை மாணவர்கள் அணிவது அந்நாளில் கல்லூரியை பொருத்து குற்றம் என்ற போதும் ஆங்கிலேயர்கள் அதை தேச விடுதலை போராட்டத்தின் பாதிப்பு கல்லூரிக்குள்ளேயும் இருக்கும் என அமைதியாக ஏற்றுக்கொண்டிருந்தனர். விடுதலைப்போராட்ட்த்தில் 1920 ஒத்துழையாமை இஅய்க்கத்தின் போது பல மாணவர்கள் கல்லூரிகளை புறக்கணித்து விடுதலை போராட்ட்த்தில் பங்கேற்றனர். 1930 சட்டமறுப்பு இயக்கம் பல மாணவர்களை தேச தலைவர்களாக அடையாளப்படுத்தியது. இதன் பின்ன்னியில் 1936 ஆண்டு அணைத்திந்திய மாணவர் பெருமன்றம் உதயமானது.அதே போன்று 1940 வெள்ளையனே வெளியேறு இயக்கம் மாணவர்களை தேச விடுதலையில் சிறைவாசம் என்ற தியாகத்தை செய்ய தூண்டியது. விடுதலைக்கு பின் நாட்டின் சனநாயகத்திற்கு பெரும் ஆபத்தாய் கருதப்பட்ட 1975 நெருக்கடி நிலை சமயம் பல மாணவர்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடினர். டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் சிறையில் வாடினர். டெல்லி பல்கலைக்கழக மாணவ தலைவர் உட்பட பல மாணவர்கல் பெரும் சித்தரவதையை எதிர்கொண்டனர். கேரளத்தில் இராஜன் என்ற பொறியியல் மாணவர் மர்ம்மாக கொல்லப்பட்டார். நெருக்கடி நிலையை எதிர்த்த்தாலும் மாற்று அரசியலை முன் வைத்த்தாலும் பல மானவர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்திய சமூகத்தில் அரசியல் சிந்தனையிலிருந்து மாணவர்களை பிரித்து பார்க்க முடியாது.

அரசியல்   நாடு விடுதலையடைந்து இவ்வளவு காலத்திற்கு பின்பு விடுதலை வீரரான பகத் சிங்கை நினைப்பது குற்ற செயலாகவும் ஒழுங்கீனமாகவும் கருதும் குறிப்பிட்ட கல்லூரி நிர்வாகத்தில் உள்ள கல்வியாளர்களின் அறிவு மட்டம் மற்றும் காவல்துறைக்கு அதனை தெரியப்படுத்தும் செயல் ஆகியவை அவர்கள் கல்வி விதிகளுக்கு புறம்பாக அடக்குமுறை நிர்பந்தங்களுக்கு உட்பட்டு செயல்படுவதாகவே கருத முடிகின்றது. அடிமை இந்தியாவைக் காட்டிலும் கார்பரேட்டுகளின் செல்வாக்கு பெற்ற இந்தியா சுதந்தரமற்றதாய் மாறி வருகின்றது.

இது குறிப்பாக கல்வியை வியாபார பொருளாகவும், அதை திறந்த சந்தை மற்றும் போட்டிக்கு களமாகவும் மாற்றும் தாராள பொருளாதார கொள்கையின் வெளிப்பாடு. கல்விக்கூடங்களில் மத அரசியலை புகுத்துவது என்ற செயல்பாடுகளின் பின்னனியில் தொடர்ந்து கல்விக்கூடங்களில் அதன் சுதந்திர சிந்தனைக்கு பின்னடைவு வந்துள்ளது. அச்சமின்றி , கண்ணியத்துடன் கல்வி பயிலும் நிலையை கல்விக்கூடங்கள் ஏற்படுத்த வேண்டியது அடிப்படை கடமை. .ஆனால் மாணவர்களை அரசியலற்றவர்கலாக (depoliticisation ) செய்வதையும் அதை நோக்கி மொத்த கல்வி பண்பாட்டு சூழலை நகர்த்துவதிலும் அதற்க்காக கல்வி வளாகத்திற்குள் கட்டுப்பாடு, காவல்துறையின் அடக்கு முறை, சுதந்திர சிந்தனையை குற்ற செயலாக கருதுவது தண்டிப்பது மேலும் முன்னனி செயல்பாட்டாளர்களை தண்டிப்பதன் மூலம் பிற மாணவர்களை அச்சுறுத்துவது, முற்போக்கு சிந்தனையை தடுப்பது என சனநாயக பண்புகளுக்கு கல்லூரிகளில் திட்டமிட்ட அச்சுறுத்தல் நிகழ்ந்து வருகின்றது. ஒரு வகையில் இந்த செயல்பாடு வெறுமனே மாணவர்களை அரசியல் அற்றவர்களாக மாற்றுவதல்ல, மாறாக அவர்களை சாதிய, மதவாத வலதுசாரி அரசியல் நோக்கி திசை திருப்பும் முயற்சி. இது கல்வி கூடத்தை மட்டுமல்ல ,கல்வி சூழலையும் சீரழித்துவிடும் அரசியல் செயல்பாடு ஆகும்.

நாடு முழுதும் கல்வி மீது நடத்தப்படும் தாக்குதலின் ஒரு வடிவமே கல்வி பயிலும் மாணவர்களை அரசியல் சிந்தனையற்றவர்களாக மாற்றுவது. அது போன்ற சூழலில் உருவாகும் மணவர்கள் எதிர்காலத்தில் நாட்டில் நிலவும் எந்த கொடுமையையும் எதிர்த்து போராடும் தகுதியற்றவர்களாகவும் அதை ஏற்று கடந்து போகும் மனிதர்களாகவும் மாறுவார்கள்.அவர்கள் தங்கள் சுதந்திர சிந்தனையை இழந்து நிற்பார்கள். சனநாயகத்தை அவர்கள் ஒரு போதும் பாதுகாக்க முன் வரவும் மாட்டார்கள். அது நாட்டை ஏய்ப்பவர்களுக்கும் ,சுரண்டுபவர்களுக்கும் வசதி.

 எனவேதான் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் பெரியார், அம்பேத்கார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது.

 கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை அரசு சட்டக்கல்லூரியில் ஆணாதிக்கம் என குறிப்பிட்டு வகுப்பில் உரையாற்றிய மாணவி பிரியா என்பவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கல்விக்கூடங்களில் சுதந்திர சிந்தனை விவாதங்களை உத்திரவாதப்படுத்தாமல் சமூக முன்னேற்றமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக