வியாழன், 1 ஜனவரி, 2015

எழுத்தாளர் பெருமாள் முருகனின் படைப்பு சுதந்திரம் காப்போம்!

எழுத்தாளர் பேராசிரியர். பெருமாள் முருகனின் 2010 ல் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த நாவலான மாதொருபாகன் என்ற நாவலை தடை செய்யவேண்டும் என இந்துத்துவா சார்பு அமைப்பு நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோட்டில் ஆர்பாட்டம் செய்தும் , பெருமாள் முருகனின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறி அவரின் புகைப்படத்தை கிழித்து அவமரியாதை செய்துள்ளது. மேலும் அவரின் தொலைபேசியில் அவரை அழைத்து இழிவாக பேசி அவருக்கு பலவகையில் அச்சுறுத்தல் செய்துள்ளனர். இந்த நடவடிக்கையினை மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் 28.12.2014 தேதி காரைக்குடியில் கூடிய மாநில செயற்குழுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் திருச்சங்கோடு பகுதியில் பிறந்தவர் . திருச்சங்கோடு பகுதியில் உள்ள மக்களின் கதைகளை தனது புனைவுப்படைப்புக்கு ஆதரவாக வைத்து திருச்சங்கோடு பகுதிக்கு பெருமை சேர்த்து வருபவர். மேலும் சமூக சனநாயக இயக்கங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர். இவர் சமீபத்தில் நாமக்கல் ஆட்சியராக இருந்த திரு.சகாயம் அவர்களின் சீறிய மக்கள் பணியினை தனது சகாயம் செய்த சகாயம் என்ற கட்டுரை படைப்பில் வெளிப்படுத்தியும் உள்ளார். மேலும் பல்வேறு நாவல்கள், சிறுகதைத்தொகுப்புகள் என அவரின் படைப்பு உலகம் அமைந்துள்ளது.
நாவல் வெளிவந்து நான்கு வருடங்களாக அதனை படித்த எந்த வாசகருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத திருச்சங்கோடு தேர்திருவிழா சமயம் முன்னொரு காலத்தில் குழந்தையில்லாத பெண் சூல் கொள்ளவேண்டி ஒரு தொன்மம் சார்ந்த பதிவுவான , திருச்செங்கோடு தேர் நோம்பியின் பதினாலாவது நாள் திருவிழாவிற்கு அனுப்பப்படுவது, அது நிலபிரபுத்துவ சமூகத்தினால் அவளுக்கு அளிக்கப்பட்ட மறைமுகமான சலுகையாகவும். அதனால் உருவான பிள்ளை தெய்வத்தின் குழந்தை என்று நம்பப்பட்டதாகவும் நாவலில் போகின்ற போக்கில் உள்ள பழங்கால தொன்மத்திற்காக பிற்போக்கு இந்துத்துவ அடிப்படைவாத கூட்டம் வேண்டுமென்றே உள் நோக்கத்துடன் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு அச்சுருத்தல்களை உருவாக்கியுள்ளது. எழுத்தாளரின் முழு படைப்பையும் படிக்காமல் ,அந்த முழு படைப்பு வெளிப்படுத்தும் கருத்தை உள் வாங்காது, துண்டாக அவசர கதியில் ஒரு சிறு தகவலை எடுத்துக்கொண்டு கருத்து கூறக்கூடாது என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் சுட்டிக்காட்டியுள்ளது. ( Director General, Directorate General of Doordarshan v Anand Patwardhan AIR 2006 SC 3346,) எழுந்துள்ள இந்த பிற்போக்காளர்களின் எதிர்ப்பு கருத்து சுதந்திரம் ,படைப்பு சுதந்திரத்திற்கு மற்றும் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது. கருத்து சுதந்திரம்,மாற்று கருத்து என்பதே நமது சனநாயக சுதந்திரத்தின் அடிப்படையாகும்.
நமது சமூகம் பல்வேறு தரப்பட்ட கலாச்சாரம் மற்றும் தொன்மங்களை கொண்டது. இந்த தொன்மங்களின் கூறுகளை மறைத்து ஒற்றை இந்துத்துவா அரசியல் கருத்தாக்கத்தை உருவாக்க எண்ணுவது நமது வேர்களை இழப்பதற்கு சமமானதாக கருதவேண்டும்.
எழுத்தாளர்கள் , ஓவியர்கள் மற்றும் கலைஞர்களை அச்சுருத்தி அதன் மூலம் மலிவான விளம்பரம் பெற பிற்போக்கு சக்திகள் தொடர்ந்து இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. எழுத்தாளரின் படைப்பிற்கு மாற்று கருத்து உள்ளவர்கள் உரிய தரவுகளுடன் தங்களின் மறுப்பை தெரிவிக்கலாம் அல்லது அந்த படைப்பை அவர்கள் புறக்கணிக்கலாம் ஆனால் சனநாயக சமூகத்தில் எழுத்தாளரை அச்சுருத்துவதும் அச்சுருத்துகின்றவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்ப்பதும் கண்டணத்திற்குரியது.
மக்கள் சிவில் உரிமைக்கழகம் எழுத்தாளர் பெருமாள் முருகனின் சனநாயக உரிமையினை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகின்றது. மேலும் படைப்பாளர்கள் மீதான இந்துத்துவ பிற்போக்கு சக்திகளின் இந்த அச்சுருத்தல்களுக்கு அடிபணியாது கருத்துரிமையினை நிலை நிறுத்த , அது தனது தோழமை மற்றும் ஆதரவினை வழங்குகின்றது.

ச.பாலமுருகன்