சனி, 15 மார்ச், 2014

பெண்ணின் உடலும் ,சமூகமும் (ச.பாலமுருகன்)

பெண்ணின் உடலும் ,சமூகமும்
(ச.பாலமுருகன்)

சென்னை அருகில் கேளம்பாக்கத்தை அடுத்த சிறுசேரி சிப்காட்டில் உள்ள டி.சி.எஸ். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார் உமாமேஸ்வரி . கடந்தபிப்ரவரி 13–ந் தேதி அன்று இரவு காணாமல் போன அவர் பின் 22–ந் தேதி சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா அருகே உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் .சேலம் ஆத்தூரிலிருந்து வந்து அவர் பணி புரிந்து வந்தார்.

எண்ணற்ற இளம் பெண்கள் தங்களின் குடும்பங்களை விட்டு தனியே பணி புர்ந்து சுமரியாதையுடன் வாழும் இன்றைய சூழலில் இது போன்ற வன்முறைகள் சமூகத்தில் பெரும் அவநம்பிக்கையையும் பெண்களை வேலைக்கு அனுப்பாது வீட்டிலேயே வைத்துக்கொள்ளவேண்டும் என்ற கருத்தாக்கத்தக்கும் விவாதத்திற்கும் இட்டு செல்லக்கூடிய ஆபத்தும் உள்ளது. தொலைக்காட்சிகளில் இந்த கொலை தொடர்பான விவாதங்களில் பெண்களின் உடைகள் என்பது இது போன்ற பாலியல் வன்முறைக்கு காரணமாக இருப்பதாகவும், அவர்கள் கவர்ச்சிகரமாக உடை அணிவதாக சிலரும் மேலும் சிலர் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் தனியே செல்லும் போது துணைக்கு ஆட்களை அழைத்துசெல்லவேண்டும் எனவும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இது குறித்த விவாததத்தில் பெரும்பாலன கருத்துக்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிவுரை கூறுவதாகவும் அவர்கள் தங்களை திருத்திக்கொள்ளவேண்டும் என்பது போன்றும் இருந்தது.இந்த மனநிலை என்பது நமது சமூகத்தில் ஆழமாக கட்டமைக்கப்பட்ட எண்ணத்தின் வெளிப்பாடு.இந்த உலகம் சிறப்பானதாக உள்ளது நம்மை நாம் திருத்திகொண்டால் எல்லாம் நல்லதே நடக்கும் என்பதே அது . இதன் தொடர்ச்சியாக பல சமயம் நாம் பாதிக்கப்பட்டோரை குற்றவாளிகளாக பார்க்கின்றோம். குறிப்பாக பெண்கள் மீது நிகழும் பாலியல் வன்முறைகளுக்கு பெண்களே காரணம் என எந்த கூச்சமுமின்றி கம்பீரத்துடன் விவாதிக்ககூட முடிகின்றது. நமது சமூகத்தின் ஆண் மேலண்மை கலாச்சாரத்தில் ஒரு வெளிப்பாடகவும் இது உள்ளது.இது நமது சமூகத்தில் உள்ள பாலியல் சமத்துவமின்மையினையே வெளிப்படுத்துகின்றது. பாலியல் வன்முறை குறித்து சமூகத்தின் பொது புத்தியில் பலவேறு கற்பிதங்கள் உள்ளன.

பாலியல் வன்முறை என்பது நம்மைச்சார்ந்தோறுக்கு நிகழாது என்றும்,பெண்களின் உடைகள் பாலியல் வன்செயல்கள் நடைபெற காரணமாக உள்ளதாகவும்,பெரும்பாலான பாலியல் வன்முறைகள் வெளி நபர்களாலேயே நடத்தப்படுகின்றது என்வும் ,இருட்டு போன்ற தனித்த இடங்களிலேயே இந்த வன்செயல்கள் நடக்கின்றது என்பதும் நமமிடையே பொது புத்தியில் உள்ள கற்பிதங்கள் . சமூகத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் மனிதர்கள் கூட இந்த கற்பிதங்கலை நம்பியே வருகின்றனர். 109 பல தரப்பட்ட நீதிபதிகள் மத்தியில் 1996 ஆண்டு சக்சி என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் அவர்களில் 68 சதவிகிதத்தினர் பெண்களின் உடைகள் அவர்கள் மீதான பாலியல் வன் செயலுக்கு காரனமாக அமைந்துள்ளது என கருதுவதாக கூறியது.பாலியல் வன்முறை வெறும் பாலியல் கவர்ச்சியால் மட்டும் நிகழ்ந்து விடுவதல்ல அது பெண்களின் உடலின் மீது செலுத்தப்படும் வன்முறை தாக்குதல் சார்ந்த ஆதிக்கம் ஆகும். பெண்களில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இத் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் . கலக சூழல்களில் போர்களில் பாலியல் வன்முறை மந்த மாணபை சிதைக்கவும் ,தண்டனை தரும் நோக்கிலும் அரங்கேற்றப்படுகின்றது. நமது நாட்டில் தேசிய குற்ற பதிவு ஆணையத்தின் பதிவின் படி 2012 பதிவான 24,923 பாலியல் வன்முறைகளில் 24,470 வன்முறைகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிமுகமான நபர்களாலேயே நடந்துள்ளது. பாலியல் வன்முறைக்கு உள்ளானவர்களை கண்ணியத்துடன் நடத்தும் பண்பு நமது சமூகத்தில் அரிதாகவே உள்ளது. பல சமயம் பாதிக்கப்பட்டோர் இந்த பாதிப்புக்கு பின் சமூகத்தில் இழிவாக நடத்தப்படுவதால் முந்தைய பாலியல் பாதிப்பினை விட கூடுதல் பாதிப்பினை எதிர் கொள்ளவேண்டியுள்ளது.

வள்ளியின் கதை அதற்கு சிறந்த ஓர் உதாரணம் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிபடை காவலர்களால் மேட்டூர் அருகில் உள்ள மேட்டுப்பழையூரைசார்ந்த வள்ளியும் அவள் கணவன் சம்புவும் வீரப்பனுக்கு உதவியதாகக்கூறி கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கர்நாடகாவின் மாதேஸ்வரன் மலையில் உள்ள ஒர்க் ஷாப் என அழைக்கப்பட்ட சித்திரவதை முகாமில் அடைக்கப்பட்டனர். அங்கு வள்ளியின் கண் எதிரே அவளின் கணவனை அதிரடிபடையினர் சுட்டுக்கொன்றனர்.பின் வள்ளியினை ஒன்னரை ஆண்டுக்கு மேல் முகாமிலேயே அடைத்து வைத்து நாள்தோறும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர். அதன் பின் தடா வழக்கு பதிவு செய்யப்பட்டு மைசூர் சிறையில் அவள் ஒன்பதாண்டுகள் அடைக்கப்பட்டாள். அவளின் குழந்தைகள் அவள் மாமியாரின் பராமரிப்பில் வளர்ந்தார்கள். நீதிமன்றம் அவளை விடுதலை செய்த பின்னர் அவள் தனது குழந்தைகளை காணன சென்றாள். அங்கு அவளின் மாமியார் அவளை வீட்டினுள் அனுமதிக்க மறுத்துவிட்டாள். அதிரடிபடை முகாமில் அவள் பலரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதால் அவளை வீட்டில் விட்டால் சொந்த பந்தங்கள் மத்தியில் தனக்கு அவப்பெயர் ஏற்படும் எனக்கூறி அவளிடம் குழந்தைகளையும் ஒப்படைக்க மறுத்துவிட்டாள். அவள் கணத்த இதயத்துடன் தனது தாயரிடம் அடைக்கலம் கேட்டாள் ,தாயரும் கூடஅவளை கெட்டுப்போனவள் என ஆதரவு தர மறுத்துவிட்டாள். ஆதரவற்ற நிலையில் ஊருக்கு வெளியே தனியே குடிசை போட்டு உழைத்து வாழ்ந்து வந்தாள். ஆனால் சில ஆண்டுகளில் அவளசில கொடியவர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.வள்ளியினை கொன்ற குற்றவாளிகளின் பட்டியலில் நமது சமூகமும் உள்ளது. வள்ளியினை போன்றே அதிரடிபடையினரால் கனவன் கொல்லப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாகி ஒன்பதாண்டு சிறைக்கு பின் விடுதலையான சின்னப்பொன்னுவும் தனது குடும்பத்தாரால் கைவிடப்பட்டாள். அவளுக்கு நடந்த பாலியல் வன்முறை என்பது அவளின் மீது உள்ள இழிவு என சின்னப்பொண்ணுவை துரத்தியது.அவள் வேறு திருமணம் செய்து சுய மரியாதையுடன் வாழ முடிவு செய்தாள். வாய் பேசும் எல்லா மனிதர்களும் தன்னை இழிவாக பேசுவதை சகிக்காது ஒரு காது கேளாத, வாய் பேசாத ஒருவனை மணமுடித்தாள்.ஆனால் அவளின் புதிய கணவனோ செய்கையின் மூலம் அவளின் கடந்த கால பாதிப்பை குத்திக்காட்டத்துவங்கினான். சூழ்ந்திருக்கும் சமூகத்தின் வன் கரங்களிலிருந்து இப் பெண்கள் தப்பிக்கவழியின்றி நிர்கதியாக நிருத்தப்படுகின்றனர். 
பாலியல் வன் செயலுக்கு ஆளான பெண்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் இந்த பாதிப்பை எதிர்கொண்டே ஆக வேண்டி உள்ளது. பாதிக்கப்பட்டவரிடம் ஆறுதல் தரும் பக்குவப்பட்ட நாகரீக சூழலும் , ஆண் பெண் சமத்துவத்தை போதிக்கும் கல்வியும் நம்மிடம் இல்லை. பெண் உடல் மீதான பார்வை ஆரோக்கியமற்றதாகவே உள்ளது.பெண்ணின் சுய மரியாதை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மதிக்கவும் ,அவர்களின் மாண்பை மதிக்கவும் நாம் நமது குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டும்.நமது சமூகத்தில் பாலியல் வன்முறை என்பது பிற வன்முறைகளைப்போன்ற ஒன்றே என பேசவேண்டிய நேரம் இது.கற்பு என்ற கற்பித்தத்தின் நீட்சினால் பாலியல் வன்முறைக்கு உள்ளானவர்கள் கூடுதல் சமூக அவலங்களையும், இழிவுகளையும் எதிர் கொள்ள நேர்கின்றது. பாதிக்கப்பட்டோரை குற்றவாளியாக சித்தரிக்கும் சூழலில் போது எழும் நமது மெளனம் , நாமும் குற்றத்தில் ஏதோ ஒருவகையில் ஈடு படுவதாகவே பொருள் படுத்துகிறது.