ஞாயிறு, 21 அக்டோபர், 2018

படைப்பின் வழி அச்சத்தை உடைப்போம் (ச.பாலமுருகன்)

படைப்பின் வழி அச்சத்தை உடைப்போம்
(ச.பாலமுருகன்) 



சனநாயக சமூகம் என்பது மனித நாகரீகத்தின் ஓர் உயர்ந்த சமூக வடிவம். நாடு இந்த அரசியல் நிலையை அடைய பல தியாகங்களை எதிர் கொண்டு வந்திருக்கின்றது. ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ததால் மட்டும் உருவானதல்ல விடுதலை போராட்டம். அது சுதந்திரம் மற்றும் சம உரிமை என்ற தேவையின் அடிப்படையில் உருவானது. விடுதலை உணர்வு உயிர்களின் அடிப்படையான உணர்வு. எல்லா உயிர்களும் சுதந்திரமான வாழ்வை விரும்புகின்றவையே. அச்சமின்றி கருத்தை வெளிப்படுத்துவது மனித உரிமை சார்ந்தது. உலகலாவிய மனித உரிமை சாசனமும் இதை அங்கீகரிக்கின்றது.

சனநாயக சமூகத்தில் அச்சம் என்ற உணர்வு தவறு செய்யாத மக்களின் உள்ளத்தில் அரசியல் காரணங்களுக்காகவும், ஆட்சியின் பொருட்டும் ஏற்படுத்தப்படுவது. இது ஒருவகை வன்முறை. இந்த வன்முறையானது அடக்குமுறை சட்டத்தின் வழியில் நியாயப்படுத்தப்படுவதும், அந்த சட்டங்களின் வழியில் நீதியின் பெயரால் உரிமை பறிப்பு கட்டமைக்கப்படுவதும் சனநாயகம் என்ற நாகரீக தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது. ஆனால் ஆட்சி புரிவோருக்கு இந்த அத்துமீறல், அதனால் சாமனியர்களுக்குள் உருவாகும் அச்ச உணர்வு அவசியமானதாக கருதப்படுகின்றது. இந்த அச்சத்தின் மீதே ஆட்சி, அதிகாரம் நடைபெறுகின்றது.

மேலும் மாற்றுக் கருத்துக்கள் என்பது சனநாயக சமூகத்தின் மிக அடிப்படை. ஆனால் மாற்றுக் கருத்து கூறுபவர்கள் குற்றவாளியாக பார்க்கப்படுகின்றனர். அவர்களின் குரல்களை நசுக்க தொடர் முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. படைப்பாளர்கள், கலைஞர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் மற்றும் உரிமைகளை நேசிப்பவர்கள் என அனைவரும் அச்சப்படுத்தப்படுகின்றனர்.

காவல்துறையின் அடக்குமுறை முன் எப்போதும் இல்லா அளவுக்கு அதிகரித்துள்ளது. அமைதியாக கூடுவது, வன்முறையின்றி போராடுவது, தங்களின் அரசியல் கருத்துக்கள் வழியே அரசினை பணிய வைப்பது போன்ற செயல்பாடுகளுக்கு தங்களை எதிர்த்தோருக்கு ஆங்கிலேய அரசாங்கம் கொடுத்த இடம் கூட சனநாயக சமூகத்தில் தற்போது இல்லை. காவல்துறையின் அதிகார எல்லைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நீதித்துறை நேரிடையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இதனை அங்கீகரிக்கின்றது அல்லது காவல்துறையின் அதிகார ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணருகின்றது. காவல்துறையினர் மக்களுக்கு அடிப்படை உரிமை உண்டு என்பதை ஏற்க மறுத்து தொடர்ந்து அமைதியான வழியில் போராடும் உரிமையினை கூட மறுக்கின்றனர். ஆளும் கட்சினரைத் தவிர அரசாங்கத்தை விமர்சிக்கும் எல்லா பொதுக் கூட்டங்களும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என தமிழ்நாடு போலீஸ் சட்டம் 30(2) மூலம் தடை விதிக்கப்படுகின்றது. இது வெகு அசதாரண சூழலில் நடைமுறப்படுத்தப்படுவதற்கு புறம்பாக எல்லா நாளும் அசாதாரண நிலை இருப்பதாக காவல்துறை முடிவு செய்கின்றது. ஒரு பொது கூட்டம் நடத்தவோ அல்லது ஆர்ப்பாட்டம் நடத்தக்கூட உயர்நீதிமன்றத்தில் வழக்குபோட்டு அனுமதி பெற வேண்டும் என்பதே தமிழகத்தில் தற்போது எழுதப்படாத விதி. ஆளும் கட்சியினருக்கு சம்மாக உள்ள எதிர் கட்சியினரின் பொதுக் கூட்டங்களும் இதே நிலைதான். நீதிமன்றங்களும் காவல்துறையின் அதிகார மீறலை கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து தடுக்க முயற்சிப்பதில்லை. நூற்றுக்கணக்கான வழக்குகள் வெறும் கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி கேட்டே தாக்கல் செய்யப்படுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு சில புரட்சிகர சிறு இயக்கங்களுக்கு அனுமதி மறுப்பதை வாடிக்கையாகவும், எழுதப்படாத விதியாக காவல்துறை கடைபிடித்து வந்ததை சனநாயக பார்வையில் வெகுசன இயக்கங்கள் தட்டி கேட்க தவறியதன் விளைவு தற்போது எதிர் கட்சிக்கே அந்த நிலை. அரசாங்கத்திற்கு அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவேண்டிய கடமை உள்ளது என்பதை அவர்கள் மறந்து பல வருடங்களாகிவிட்டது.
நமது சமூகத்தில் ஒரு முறை ஏதோ காரணங்களுக்காய் உள்ளே வந்த கொடுங்கோன்மை மற்றும் அடக்குமுறை திரும்ப வெளியேற்றப்பட்டதாக நடைமுறை இல்லை. அது சில சமயம் நீரு பூத்த நெருப்பாய் இருக்கும். தேவைப்படும் போது அது தன் கோரத்தை வெளிப்படுத்தும். கடந்த காலத்தில் ரோமபுரி சாம்ராஜ்ஜியத்தில் இருந்த சனநாயக வடிவிலான அரசு வீழ்ந்து சர்வாதிகாரம் தலைதூக்க கி.மு 67ஆம் ஆண்டு மத்திய தரைப்பகுதியில் இருந்த அமைதியின்மையை சரி செய்ய அதிக அதிகாரத்தை வழங்கிய சட்டமான lex Gabinia தளபதியாக இருந்த பம்பி மேக்னஸ் என்பருக்கு வழங்கப்பட்டது.

போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்கிய பின் அங்கு அமைதி நிலவியதாக கருதப்பட்டது. ஆனால் அது தற்காலிகமானது. அதன் பின் சிறு காலத்தில் நிரந்தர அமைதியின்மை ஏற்பட்ட்து. சனநாயக என்ற அமைப்பு முடிவுக்கு வந்து சர்வாதிகாரிகளின் பிடியில் ரோம சாம்ராஜ்ஜியம் வீழ்ந்தது.

இந்திய வரலாற்றில் 1975 ஆண்டுகளில் நெருக்கடி நிலை அதிகார அத்துமீறலின் உச்சமாயிருந்தது. அந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பல அடக்குமுறைகள், சித்தரவதை மற்றும் சட்ட வடிவங்கள் நெருக்கடி நிலை கடந்த பின்னும் நிரந்தரமாக நிலைத்துவிட்டது. பஞ்சாப்பில் தீவிரவாதம் என கூறி கொண்டு வரப்பட்ட தடா சட்டம் எல்லோரையும் துன்புறுத்தியது. பல அப்பாவிகள் பல வருடம் விசாரணைக் கைதியாக சிறைபடுத்தப்பட்டனர். சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தடா சட்டத்திற்கு எதிராக மக்கள் போராடி அதை நீக்கச் செய்தனர். ஆனால் ஒரு சில ஆண்டுகளில் பொடா சட்டம் வந்தது. தடா சட்டத்தின் எல்லா வடிவங்களையும் பொடா பெற்றிருந்தது. மீண்டும் கருத்துரிமை பெரும் பின்னடைவை சந்தித்தது. மீண்டும் அத்துமீறலுக்கு முழு சமூகம் உள்ளாகி திரும்பவும் பொடா சட்டத்தையும் நீக்கவேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

கடந்த 2004 செப்டம்பர் மாதம் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரண்டு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒன்று, பொடா சட்டத்தை திரும்ப பெறுவது. மற்றொன்று, பொடா சட்டத்தின் எல்லா சரத்துக்களையும் அப்படியே சட்டத்திருத்தம் வழியாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1967ல் புகுத்தி விடுவது. பழைய சட்டத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர் என குற்றம் சாட்டும் நிலை இருந்தது தற்போதைய சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்ட்த்தில் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளதாக கருதும் சமயம் கூட ஒரு இயக்கத்தை தடை செய்யலாம். சம்பந்தப்பட்டவரை கைது செய்து ஆறு மாதங்கள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாமல் சிறைப்படுத்தலாம். நாடு முழுதும் பல அரசியல் செயல்பாட்டாளர்கள் இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். உடல் ஊனமுற்ற டெல்லி பேராசிரியர், சாய்பாபாவிலிருந்து தற்போது நாட்டின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள் வரை இந்த பட்டியல் தொடர்கின்றது.

அரசாங்கத்தின் செயல்பாடுகள் சட்டமன்றம், பாராளுமன்றம் போன்ற விவாதங்களின் மூலம் முடிவெடுக்கப்படுவதற்கு மாறாக தனி நபர் விருப்பு சார்ந்து ஆட்சியாளர்கள் முடிவு செய்யும் நிலை உள்ளது. பல்லாயிரம் கோடி பணமதிப்புள்ள திட்டங்கள் இது போன்றே மக்களவைக்கு அப்பால் விவாதமின்றி முடிவுசெய்யப்படுகின்றது.

இந்த திட்டங்களால் வாழ்வாதாரத்திலிருந்து விரட்டப்பட்டு பாதிக்கப்படும் மக்கள் போராடும் சூழலில், அவர்கள் போராடும் தேதி, இடம், கூடும் மக்கள் எண்ணிக்கை அல்லது அவர்கள் பேச்சு எதை நோக்கி இருக்கவேண்டும், எப்படி வெளிப்பட வேண்டும் என முடிவு செய்வதும் அல்லது பேசிய பின் அந்த பேச்சோ அல்லது படைப்போ குற்றமா? இல்லையா? என எல்லாம் காவல்துறையினர் முடிவு செய்யும் நிலை உள்ளது.

கதை எழுதியவர்கள், கட்டுரை எழுதியவர்கள், மேடையில் அரசாங்கத்தை விமர்சித்து பேசியவர்கள் அல்லது "பாசிச பாஜக ஒழிக" என கோசமிட்டவர்கள், பத்திரிக்கையாளர்கள் என எல்லோரும் குற்றவாளிகள். சிறை என்ற ஒன்று அவர்களுக்கு எப்போதும் காத்திருக்கின்றது.

கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் ஆனாதிக்கம் என பேசியதற்காகவும், பக்த்சிங் பிறந்த நாலை கொண்டாடியதற்காகவும் மாணவர்கள் நீக்கப்படுகின்றனர். பேசாதே! என அரசாங்கம் சொல்லுகின்றது. இந்த அடக்குமுறை வழியாக பெரும் அச்ச உணர்வு கடமைக்கப்படுகின்றது. சமூகத்தை நேசிப்பவர்கள் முன்னோடி சக்திகள், உரிமை செயல்பாட்டாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என எல்லோரும் எப்போதும் அச்சத்துடன் இருக்க வேண்டும் என அரசாங்கம் கருதுகின்றது.

இந்த அடக்குமுறையை கடந்த காலங்களில் எதிர் கொண்டே சமூக போராட்டங்கள், விடுதலைப் போராட்டங்கள் நடந்துள்ளன. அச்சத்தை கண்டு அச்சப்படுவது தீர்வல்ல. அதை நேருக்கு நேராய் எதிர் கொள்வதே தீர்வு. சமூக அக்கரையுடன் உரக்க பேசுவதும், அச்சமின்றி எழுதுவதும், நமது கலை ஆக்கங்களை உருவாக்குவதும் தீர்வு. சமூகத்தை நேசிப்பவர்கள் பொது தளத்தில் சனநாயக பண்புகளைக் காக்கவும் அடக்குமுறையை எதிர்க்கவும் இணைந்து பணியாற்றுவதும் அவசியம்.

சனநாயகம் என்ற பரந்த பன்முகத்தன்மை வாய்ந்த அமைப்பில் அதன் உயிர்ப்பு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதனை மீட்பதும் மக்களின் சுதந்திரச் சிந்தனை செயல்பாடுகளுக்கு உத்தரவாதப்படுத்தவும், அரசின் கொடிய அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து ஒன்றுகூடி எழுந்து நிற்பதும் அதன் அதிகாரத்துவத்தை கேள்விக்குள்ளாக்குவதும் இன்றைய முக்கிய தேவை.
*
19.10.2018 சென்னையில். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நிகழ்த்தவுள்ள படைப்பாளர்கள் கலைஞர்கள் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுகூடும் நிகழ்வுக்கு எமது தோழமையையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.

- ச.பாலமுருகன்.

Image may contain: Bala Murugan, text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக