ஞாயிறு, 21 அக்டோபர், 2018

சாலைச் சந்திப்புகள், ரயில் நிலைய வாசல்கள், கோயில்கள் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் எதிர்ப்படுபவர்களின் தயவை எதிர்நோக்கி இறைஞ்சும் மனிதர்களுக்குச் சமூகம் வைத்திருக்கும் பெயர் பிச்சைக்காரர்கள். ஒரு நகரின் அழகுக்கு இவர்கள் கரும்புள்ளிகளாகப் பார்க்கப்படுகின்றனர். இவர்கள் எங்கேயிருந்து வந்தார்கள்? இவர்களின் வேர்கள் என்ன?
உணவு, உடை, வீடு என மனிதர்களின் வாழ்வுக்கான அடிப்படையினை இழந்த அந்தக் கரங்கள் யாசிக்கும்போது முகங்களைத் திருப்பிக்கொள்கிறோம். அந்த மனிதர்களைச் சாடுகிறோம் அல்லது நம்மால் என்ன செய்ய முடியும் என வெகு அரிதாய் நொந்துகொள்கிறோம். அந்த மனிதர்களுக்கும் மனிதக் கண்ணியமுண்டா? நமக்குள்ள உரிமைகள் அவர்களுக்கும் உள்ளதா? இவர்களை பிச்சைக்காரர்களாய் அலையவிட்டதில் அரசாங்கத்துக்குப் பொறுப்பில்லையா என்றெல்லாம் நாம் யோசித்துள்ளோமா?
தமிழ்நாட்டில் 1945-ல் பிச்சையெடுப்பதைத் தடைசெய்யும் சட்டம் இயற்றப்பட்டது. அதுபோலவே, நாட்டின் பல பகுதிகளிலும் பிச்சையெடுப்பதற்குத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. பொது இடங்களில் யாசகம் கேட்பது அல்லது பாட்டுப் பாடியோ. நடனமாடியோ, வித்தைகாட்டியோ பணம் பெறுவதையும் மற்றும் ஒரு பொருளைக் கெஞ்சி விற்பதையும் பிச்சை எடுத்தல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம் 2013 கீழ் பிச்சையெடுப்பவரைப் பிடியாணை இல்லாமல் கைதுசெய்யலாம். விசாரணையின்றி சிறை அல்லது முகாம்களில் அடைக்கும்வகையில் சட்டங்களைக் கடுமையாக்கியுள்ளது அரசு.
உடல் பாதிப்பு காரணமாய் பிச்சையெடுப்பவர்கள், பிச்சையெடுக்கும் தொழிலைச் செய்பவர்களின் பிடியில் சிக்கிக்கொண்டவர்கள், வாழ வேறு வழியற்றவர்கள், பிற பழக்கங்களால் வேலைக்குச் செல்லாதவர்கள், பிச்சையெடுப்பதை வழக்கமாகக் கொண்ட நாடோடிக் குழுக்கள் எனப் பிச்சையெடுப்பவர்களில் பல வகை உண்டு. குழந்தைகளும் சிறார்களும் இந்த வலைகளில் சிக்கிக்கொண்டவர்களாக உள்ளனர். ஆனால், வறுமையும் நீடித்த புறக்கணிப்பும் இவர்களின் நிலைக்குப் பெரும் காரணங்களாகும்.
பார்வைகள் பலவிதம்
டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்தபோது, எல்லா பிச்சைக்காரர்களும் வலுக்கட்டாயமாக வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இவர்களை வெளிநாட்டவர் பார்த்தால் இந்தியாவின் மரியாதை குறைந்துவிடும் என அரசாங்கம் கருதியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நகரங்களில் பிச்சை எடுப்பவர்கள் தொல்லை அதிகரித்துவிட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கொன்றில், 1945 ஆண்டு தமிழ்நாடு பிச்சை தடுப்புச் சட்டத்தை தமிழகக் காவல் துறைத் தலைவர் நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிச்சைக்காரர்கள் சமூகத்தின் பிணி என்பது போன்ற பொது கருத்தாக்கம் சமூகத்தின் பொதுப்புத்தியில் நிறைந்துள்ளது. பல தீர்ப்புகளில் இந்த ஏழைகள் மீதான நீதிமன்றச் சொல்லாடல்களும்கூட வன்மம் நிறைந்ததாகவே இருந்துள்ளது. சாலையோரம் வசிப்பவர்களைச் சமூகத்துக்கு இடையூறு செய்பவர்கள் என்றும், ஆக்கிரமிப்பாளர்கள், ஜேப்படிப் பேர்வழிகள், அராஜகவாதிகள் என நீதிமன்றம் வசைமாறிப் பொழிந்த பல வழக்குகள் உண்டு.
வழிகாட்டும் தீர்ப்பு
மக்களின் அடிப்படை வசதிகள், கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளை அரசு வழங்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருந்தபோதும், சமூகப் பொதுப்புத்தியின் வெளிப்பாடு வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது. இந்தச் சூழலில் சமீபத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது. சமூக ஆர்வலர்கள் ஹர்ஸ் மந்தர், கர்னிக் செளனி ஆகியோர் பிச்சையெடுப்பதை குற்றமாகக் கருதக் கூடாது என்றும் பிச்சையெடுப்பதைத் தண்டிக்கும் பம்பாய் பிச்சை தடுப்புச் சட்டத்தைச் சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரியும் பொது நல வழக்கு தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் பிச்சையெடுப்பதைக் குற்றச் செயலாகக் கருதக் கூடாது என்றும் பிச்சைக்காரர்களுக்கும் அடிப்படை மனித உரிமை உண்டு அரசு அதனை மதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிச்சையெடுப்பதற்காக வீதிக்கு வருபவர்கள் யாரும் அதற்காக மகிழ்ச்சியடைவதில்லை, அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கத் தவறிய நிலையில், உயிர் பிழைக்க வேறு வழியில்லாமல்தான் பிச்சையெடுக்கின்றனர். அவர்களின் நிலையை மாற்ற எதுவும் செய்யாத அரசாங்கம், அவர்களைக் குற்றவாளியாக நடத்துவதை ஏற்க முடியாது. பிச்சையெடுப்பதை வெறுமனே குற்றச்செயல் என முத்திரை குத்துவதன் மூலம் அல்லது அவர்களைச் சிறைப்படுத்துவதன் மூலம் அரசு மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டிய கடமையிலிருந்து விலகிக்கொள்கிறது. இது அவர்களின் தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்கிறது டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.
யார் குற்றம்?
பிச்சையெடுத்த குற்றம் புரிந்ததாகக் கைது செய்யப்பட்டவர்களில் 74% பேர் முறையான பணி எதுவும் அமையப்பெறாதவர்கள். அதில் 45% பேர் வீடற்றவர்கள். கல்வி, வேலை, உணவு, மருத்துவம் என்ற எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றாமல், வறுமையால் வீதிக்கு வந்த அந்த மக்களைக் குற்றவாளி என முத்திரை குத்துவதற்கு முன் இவர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் சமூகப் பாதுகாப்பையும் வழங்காத அரசும் குற்றவாளியே. அரசமைப்பின் தனிமனித சுதந்திரம் என்பது பாதுகாப்பான, கண்ணியமான வாழ்க்கை வாழ்வதுதான். அது மறுக்கப்படும் மனிதர்களை உரிமை இழந்தவர்கள் எனக் கருதுவதற்குப் பதிலாக, யாசிப்பதாலேயே குற்றவாளியாகக் கருதக் கூடாது என்பது இந்தத் தீர்ப்பின் முக்கிய நோக்கம். மேலும், தன் திறமையைப் பயன்படுத்தி பாடுபவர்கள், ஆடுபவர்கள், வித்தை காட்டுபவர்களையும், பொருட்களை விற்பவர்களையும் பிச்சைக்காரர்களாகச் சித்தரிப்பது சமத்துவ உரிமைகளை மறுக்கும் செயல் எனவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேலும், வேறு வழியில்லாத நிலையில் உயிர் வாழ்வதற்காகப் பிச்சையெடுப்பதும்கூட அடிப்படை உரிமையே. இந்தப் பிரச்சினையினை குறுகிய பார்வையில் அணுகாது, சமூகப் பொருளாதார அக்கறையுடன் அரசு அணுக வேண்டும் என்றும் ‘சட்டம் வெறும் மந்திரத் தாயத்தல்ல; அது மக்களின் நம்பிக்கை. ஒரு சட்டம் சட்டவிரோதத்துக்குத் துணைபோகுமென்றால், சமூகநீதி செத்துப்போகும்’ என்ற மறைந்த நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யரின் மேற்கோளையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
- ச.பாலமுருகன், எழுத்தாளர், வழக்கறிஞர்,
தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக