ஞாயிறு, 17 நவம்பர், 2013

 
 
வளங்களை மக்களுடமையாக்குவது
 (ச.பாலமுருகன்)
நாள் தோறும் புதுப்புது ஊழல்கள் குறித்த செய்திகளை நமது ஊடகங்கள் தாங்கி வருகின்றன. ஊழலில் தொடர்புடைய தொகைகள் ஆயிரக்கணக்கான கோடிகளைத் தாண்டுகின்றன. நிலக்கரி ஊழல் முதல் பல்வேறு கனிம வளங்களை தனியார் கம்பெனிகள் முன் எப்போதும் இல்லாத அளவு தங்களின் உடைமையாக  மாற்றியுள்ளது. அரசும் அதன் திட்டங்களும் வளர்ச்சி என்ற பெயரில் கம்பெனிகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் கொள்கை முடிவுகளை எடுத்து செயல்படுகின்றது. இதன் மறுபுறம்  இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பெரும் கிளர்ச்சியும் போராட்டமும் அமைதியின்மையும் எழுந்துள்ளது. தங்களின் மண் மீதான உரிமையினை காக்க எழுந்துள்ல போராட்டங்கள் தீவிரவாதிகள், வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலில் போராடுபவர்கள் அல்லது நாட்டின் நலனுக்கு எதிரானவர்கள் என்று பல்வேறு அடைமொழிகளைக்கொடுத்து அரசு அடக்க தனது காவல் மற்றும் ஆயுதப்படைகளை தயாராக்குகின்றது. கடுமையான சட்டங்கள் , சிறைப்படுத்தல்கள் மேலும் மோதல் சாவுகள் ,பொய் வழக்குகள் என நாடு ஒரு அமைதியின்மையினை எதிர்கொண்டு வருகின்றது. சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பது என்பது  எல்லா மாற்றுக்குரல்களையும் மெளன மாக்கி விடுவது என்ற அளவில் காவல்துறையின் புரிதல் உள்ளதால் சாதாரண ஆர்ப்பாட்டங்கள்  அல்லது பொதுக்கூட்டங்களுக்கு கூட உயர்நீதிம்ன்றம் போய் அனுமதி வாங்கி வரவேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஒரு புறம் விவசாயிகளின் போராட்டம் விளை நிலங்களை பிடுங்காதே என்ற முழக்கத்தில் நிகழ்கிறது, மறுபுறம் மீனவர்கள் கடலையும், கடற்கரையையும் காக்க தமிழகத்தின்  இடிந்தகரை உள்ளிட்ட எல்லா கடற்கரைகளிலும் ஏதேனும் ஒரு வகை போராட்டத்தை  அல்லது கோரிக்கையை வைத்து வருகின்றனர். மற்றொரு புறம் நாட்டின் எல்லா வனங்களிலிருந்தும் பழங்குடி மக்கள் விரட்டப்படுகின்றனர். இந்தியாவின் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவிக்கும் அளவு  அமைதியின்மை எழுந்துள்ளது, மக்கள் வாழ்வு  சீர்குலைக்கப்பட்டுள்ளது.  ஆக நிலம், வனம் ,கடல் என இந்த இயற்கை  வளங்களைச்சார்ந்து வாழும் எல்லா மக்களும் எதிர்கொள்ளும் வாழ்வாதார அச்சுறுத்தல்கள்  அளவில் மாறுபட்டிருந்த போதும் பொதுப்பண்பில் ஒன்றுபட்டவை. மக்களுக்கும் அவர்களின் வளங்களுக்கும் இடையே உள்ள உறவினை துண்டிக்க எடுக்கப்படும் எடுக்கப்படும் நடவடிக்கைகளே எல்லா போராட்டங்களுக்கும் காரணமாக உள்ளது.
நமது நாடு காலணியாதிக்கத்திற்கு உட்படும் வரை வளங்களின் மீதான  உரிமைகளை மக்களின் சமூகம் தங்களின் வசம் தக்கவைத்திருந்தது. காலணி ஆதிக்கம் அதனை தனது வசமாக்கவே சட்டங்களை இயற்றியது. ஒவ்வொரு சட்டமும் மக்களின் உரிமைகளை பறித்து  அதனை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வசம் கொண்டு சென்றது. 1894 ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட  வனக்கொள்கைகள் மற்றும் 1927 இந்திய வனச்சட்டம் பழங்குடிகளின் தொன்மையான அனைத்து உரிமைகளைப்பறித்துவிட்டு ஆங்கிலேயர்களின் சலுகைகளில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வனங்கள் ஆங்கிலேய  அரசால் வனிகத்திற்கான ஒரு இடமாகப் பார்க்கப்பட்டது. இது போன்றே எல்லா வளங்களும் மக்கள் சமூகத்தின்  வசமிருந்து பிடுங்கப்பட்டு அது ஆங்கிலேய  ஆட்சியாள்ர்களின்   கைகளுக்கு கொண்டுவரப்பட்டது. தனியான சொத்துகள்  தவிர மற்றவை அனைத்தும் அரசுக்கு சொந்தமானது என்ற நிலை உருவானது. அரசு அதிகாரிகள் என்ற தனிநபர்கள் அவர்கள் ஏற்படுத்திய ஆவணங்களின் வடிவில் ஒருவருக்கு நிலம் அல்லது வளங்களின் மீதான உரிமை சொந்தமானதா  இல்லையா முடிவு செய்யும் நிலை உருவாக்கப்பட்டது.பழங்குடி மக்களின் பல்வேறு போராட்டங்களில் இதற்கு எதிரான போராட்டத்தை நடத்தினர்.ஆனாலும்  ஆக்கப்பட்ட பொருட்கள் அரசாங்கத்திற்க்கு சொந்தம் என்று அறியும் வகையில் , இயற்கை  வளங்களின் முழு கட்டுப்பாடும் அரசின் வசம் சென்றது. சமுகத்திற்கென வளங்கள் இல்லாமல் போனது. நாடு விடுதலை அடைந்த பின்பு ஜனநாயக பண்புகள் வளர்க்கப்பட்டு இயற்கை வளங்களை பயன்படுத்தும் முறை ஜனநாயகப்படுத்தப்படுவதற்கு பதிலாக ஆங்கிலேயர்களின்கொள்கைகளான வளங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் கொள்கை தொடர்ந்தது. முன்பு ஜமீந்தாரகளுக்கு மக்களின் நிலத்தை பிடுங்கி வழங்கிய அதே நிலை கார்பரேட் கம்பெனிகளுக்கு மண்ணையும் ,மலையையும் ,கடலையும் தாரைவார்ப்பது என்ற நிலைபாடு தொடர்ந்து நடைபெறுகின்றது. கடந்த 2011 ஆண்டு ஜக்பால சிங் /எதிர்/ பஞ்சாப் மாநில அரசு என்ற வழக்கில் நீதிபதி மார்க்கண்டேய கட்சு   கிராம சபைகளின்  பொது பயன்பாட்டு க்கு உட்பட்டிருந்த நிலங்களை  அது போன்ற பொது பயன்பாடு தவிர பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில்  பண்ணெடுங்காலமாக கிராம சமூகத்தின் பொது பயன்பாட்டுக்கு உள்ள நிலங்கள் மக்களின் நீர் ஆதாரங்கள், மேச்சல் ,வழிபாடு ,ஆன்மீகம் ,,சுடுகாடு என ப்ல்வேறு வகையில் பயன்பட்டு வருவதை சுட்டிக்காட்டினர்.ஆனால் அரசின் கொள்கைகள் சாமானிய மனிதனை நிலத்திலிருந்தும் எல்லாவகையான வளத்திலிருந்து துரத்தி ,அன்றாடம் நமது ரயில் நிலையங்களில் நாம் பார்க்கும் வேலை தேடி   பீகரிலிருந்தும், ஒரிஸ்ஸாவிலிருந்தும் ,மேற்கு வங்கத்திலிருந்தும் வரும் கூலிகளை உற்பத்தி செய்து வருகின்றது. இந்த உரிமைகளற்ற  வேற்று மாநிலக் கூலிகள் தங்களின் சொந்த கிராமத்தில் நேற்று சுய மரியாதையுடன் விவசாயம் செய்து இந்த  உலகுக்கு உணவை உற்பத்தி செய்து வந்தவர்கள் . மத்திய இந்திய வனப்பகுதி பழங்குடிகள் தங்கள் மீதான அரச வன்முறை அவர்களை  வனப்பகுதியிலிருந்து விரட்டி அணடை மாநிலங்களில் கூலிகளாக ஆக்கியிருக்கின்றது.தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வன விலங்கு சரனாலயங்கள் என்ற பெயரில் வனத்தின் மீதான சமூக உரிமை வனத்துறை என்ற அரசின் கைகளுக்கு சென்றுவிட்டது.வனவிலங்குகளும் பழங்குடிகளும் பண்ணெடும் காலமாய் ஒரு சேர வாழ்ந்த வனத்தில் இன்றோ வனவிலங்குகளின் பாதுகாப்பு என்ற பெயரில் பழங்குடிகளின் வன உரிமை மறுக்கப்படுகின்றது. வன உரிமைச்சட்டம் உள்ள்ட்ட எந்த பழங்குடி வாழ்வாதார பாதுகாப்பையும் உத்திரவாதப்படுத்தாத மாநிலமாக தமிழகம் உள்ளது.
ஆக மத்திய இந்திய ஆதிவாசி  பழங்குடிகள் போராட்டம் அல்லது மேற்கு வங்கத்தின் சிங்கூர் விவசாயிகள் போராட்டம் அல்லது தஞ்சையில் மீத்தேன் திட்டத்திற்கு நிலத்தை தரமறுக்கும் ஏழை விவசாயிகள் அல்லது ஈரோடு , திருப்பூர் பகுதியில்  கெய்ல் இயற்கை வாயு குழாய்களை எதிர்க்கும் விவசாய்கள்  அல்லது திருநெல்வேலியின் கூடங்குளத்தில் இரண்டு  ஆண்டுகளுக்கு மேலாய் இடிந்தகரையில் அணு உலைக்கு எதிராக போராடும் மீனவ மக்கள் அல்லது தூத்துகுடியில் தாது மணல் கடத்தலினை எதிர்க்கும் மீனவர்கள் என வடிவில் மாறுபட்டிருப்பதாக கருதப்படும் போராட்டங்கள் இயற்கை வளங்களை மக்கள் உடைமையாக்கு என்ற ஒற்றை முழக்கத்தை மையப்படுத்தியவை. ஒன்றுபட்டு போராடவேண்டிய மக்கள் பிரிந்து கிடப்பது, பள்ளிகளில் நாம் படித்த நான்கு எருது ஓநாய் கதைகளையே நினைவு படுத்துகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக