ஞாயிறு, 17 நவம்பர், 2013

நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யர்:கடைக்கோடி இந்தியருக்கும் நீதி
(ச.பாலமுருகன்)
இன்று(15.11.2013) முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யரின் 99 ஆம் பிறந்த நாள்.அவரின்  மூப்பு காரணமாக உடலில் உள்ள தளர்ச்சியினை தனது சிந்தனை மற்றும் எழுத்துகளில்   காட்டாத ஒரு செயல்பாட்டாளராகவே அவர் திகழ்கின்றார். நாட்டின் கடைக்கோடி சாமானிய ஏழை மனிதனுக்கும் சட்டம் மற்றும் நீதியின் வெளிச்சம் சென்றடைய வேண்டும் என்பதை நோக்கி அவரின் செயல்பாடு உள்ளது.
 மிக அரிதான ஆளுமையான நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யர் வழக்குரைஞர், கைதி, சட்டமன்ற உறுப்பினர்,மாநில அமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி,மனித உரிமை செயல்பாட்டாளர் என பல வடிவங்களை கடந்து வந்தவர்.இந்த பயணம்  நெடுகிலும் ஏழை மக்களுக்கான சமூக நீதி  மீதான கரிசனத்தினை வெளிப்படுத்தினார்.
அன்றைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியான கேரளத்தின் பாலக்காட்டில் அவர் பிறந்தபோதும் அவரின் குடும்பம் கேரளத்தின் குயிலாண்டியிக்கு இடம் பெயர்ந்தது. ஒரு புகழ்வாய்ந்த  வழக்குரைஞரின் மகனாக வளர்ந்த அவர் அண்னாமலை பலகலைகழகத்திலும் பின் சென்னை சட்டக்கல்லூரியிலும் கல்வியினை முடித்தார்.பின் வழக்குரைஞராக மலபார் மற்றும் கூர்க் உள்ளிட்ட பகுதிகளில் பணி புரிந்தார். அந்த காலகட்டத்தில் பொதுவுடமை மற்றும் தொழிற்சங்க இயக்கத்தவருக்கு அவர் தொடர்ந்து வாதாடி வந்தார்.இதனால் ஒரு சமயம்  நீதிபதி கூட அவரை தனியே அழைத்து "கம்யூனிஸ்டுகளுக்கு ஆஜராகி ஏன் பெயரை கெடுத்துக்கொள்கின்றீர்கள் ,உங்களை போலீசார் உளவு பார்ப்பார்கள் "என எச்சரிக்கையும் செய்தனர். நாடு விடுதலை அடைந்த சமயம் பொதுவுடமை இயக்கம் தடை செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணய்யர் தொடர்ந்து கம்யூனிஸ்டுகளின் மீது போடப்பட்ட வழக்குகளில் வாதிட்டதால் காவல்துறையினர் கோபத்துடனிந்ருந்தனர். தலைமறைவு கம்யூனிஸ்டுகளுடன் குறிப்பாக பி.சி.ஜோசி, பி.ராமமூர்த்தி, என்.கே.கிருஷ்ணன் போன்றோருடன் தொடர்பிருப்பதாக பாதுகாப்பு சட்டத்தில்   1948  மே மாதத்தில் வழக்கு பதிவு செய்து, இரவில் கைது செய்து,அவரை கண்ணனூர்  சிறையில்  சிறைபடுத்தப்பட்டார்.ஒரு மாதம் கழித்து விடுவிக்கப்பட்டார்.சிறையின் அவலங்களையும்,கைதிகளின் நிலையையும் அவர் நேரிடையாக உணர இது உதவியது. பொதுவுடமை இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு அவர்கள் 1952 தேர்தலில் போட்டியிட்ட போது வீ.ஆர். கிருஷ்ணய்யர் குத்து பரம்பா  சட்டமன்ற தொகுதியில் சுயாட்சையாக நின்று பொதுவுடமை இயக்கத்தின் ஆதரவில் வெற்றி பெற்று சென்னை மாகான சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அவர் மலபார் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதும் தன்னை ஒருபோதும் மலபார் பிரதிநிதி என்று மட்டும்  கருதவில்லை. ஒட்டுமொத்த சென்னை மாகான பிரச்சனைகளுக்காக அவர் குரல் எழுப்பினார். பஞ்சம் பாதித்த ஆந்திரத்தின்  ராயல்சீமா மக்களுக்கு கஞ்சி தொட்டி நிர்வாகிப்பது குறித்தும் ,மலபார் நெசவாளர்களின் நிலை குறித்தும் அவரின் சட்டமன்றத்தில் குரல் எழுப்பினார்.மக்கள் பஞ்சத்தையும் வறுமையையும் எதிர் கொண்டநிலையில் முதல்வர்  ராஜாஜி அவர்கள் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை அறிவித்தபோது  ஆட்சி செய்ய அரசு ஊழியர்களை கைக்குள் வைத்துக்கொள்ள சலுகை அறிவிக்கும் ஆங்கிலேய அரசின் தொடர்ச்சியாக சுதேசி அரசும் இருப்பதை,சட்டமன்றத்தில்  அவரின் 1952 ஜூலை மானிய கோரிக்கை தொகை குறைப்பு தீர்மாணம் மீதான உரை சுட்டிக்காட்டியது.  மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு கேரளா மாநிலத்தில் 1957ல் அவர் தலைச்சேரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1957 முதல் 1959 வரை ஆட்சி புரிந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் தலைமையிலான முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் அவர் அமைச்சராகவும் சட்டம், சிறை நிர்வாகம் ,உள் துறை , மின்சாரம் மற்றும் நீர்பாசனம்,சமூக நலத்துறை  அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இந்த கால கட்டத்தில் தமிழகத்தின் காமராஜர் முதல்வராக இருந்தார். பாசனத்துறை அமைச்சராக இருந்த
 சி.சுப்பிரமணியம் கோவை மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கும் மற்றும் மக்களின்  குடிநீர் தேவைக்கும்  கேரளாவின் மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு  நோக்கி பாயும்  ஆறுகளை கிழக்கு புறமாக திருப்பிவிட்டு தமிழகமும், கேரளாவும் சேர்ந்து பயன்பெறும் பரம்பிக்குளம் திட்டத்தை முன்மொழிந்தார். முதல்வர் நம்பூதிர்பாட்டும் ,வீ.ஆர்.கிருஷ்ணய்யரும் இதற்கு சம்மதித்தனர். ஆனால்  கேரளாவில்  எதிர் கட்சியான காங்கிரஸ் கட்சியினர் வீ.ஆர்.கிருஷ்ணய்யர் தமிழர் என்பதால் தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி பிரச்சனை கிளப்பினர்.ஆனால் தமிழக முதல்வர்  காமராஜ் அவர்கள் இதில் தலையீடு செய்து பிரச்சனை பெரிதாகாமல் பார்த்துக்கொண்டார்.திட்டம் நிறைவேறியது.இக் கால கட்டத்தில் கேரளாவில் சிறியதும் பெரியதுமாக பல நீர்பாசன திட்டத்திற்கு  தொலைநோக்கு பார்வையோடு திட்டமிட்டார். உழைப்பு தானத்திட்டம் என்ற பெயரில் இன்றைய நூறு நாள் வேலைத்திட்டம் போல,  தினம் ரூ 50 கூலி தரும் திட்டம் செயல்பட ஆலோசனை வழங்கினார்.இத்திட்டத்திற்கான கருத்தினை லெனின் சோவியத் அரசாங்கத்தில் நடைமுறைபடுத்திய திட்டத்திலிருந்து பெற்றார்கள். மக்கள் சக்தியினை பயன்படுத்தி குறைந்த செலவில் திட்டங்களை நிறைவேற்றும் புதிய முறையினால் பல ஆக்கப்பூர்வமான வேலைகள் அந் நாளில்  கேரளாவில் நடந்தது.  மேலும் சட்ட அமைச்சர் என்ற அளவில் வரதட்சனை ஒழிப்பு சட்டத்தினை நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்தார்.சிறை சீர்திருத்தம் உள்ளிட்ட பல சனநாயக செய்ல்பாடுகள் எடுக்கப்பட்டது.சிறை கைதிகள் கண்ணியத்தோடு நடத்தப்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
1959 ல் அவர் பங்கேற்றிருந்த  மந்திரிசபை 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி  நேருவினால் கலைக்கப்பட்டது.  அதன் பின் 1960 ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஏழு வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் குஞ்ஞராமன் என்பவரிடம்  தோல்வியினை தழுவினார். அந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதையும்  வாக்களிக்கும் வயதே வராதவர்களை வைத்து  கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதையும் அறிந்து அதற்கு எதிராக வழக்கினை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்தார். இரண்டரை ஆண்டுகள் கழித்து ,இறுதியில் ஐந்து வாக்கு வித்தியாசத்தில்  கிருஷ்ணய்யர்  வெற்றி பெற்றதாக நீதிமன்றம் அறிவித்தது. மீண்டும் சட்டமன்றம் சென்றார்.இச் சுழலில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் பிரிந்து  மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி என்று துவங்கி கட்சி பிளவு பட்ட சூழலில் 1965 ல் தேர்தலை சந்தித்து தோல்வியினை சந்தித்தார். அதன் பின்பு  அரசியலிலிருந்து விலகி அவர் உயர்நீதிமன்ற வழக்குரைஞராக பணிபுரிய துவங்கினார்.அன்றைய கேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எஸ்.மேனன் என்பவர் அவரின் புலமையினை கண்டு  அவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக்க பரிந்துரை செய்தார். 1968 ல் உயர்நீதிமன்ற நீதிபதியாக பொருப்பேற்றார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் நடந்து வரும் போது செங்கோல் ஏந்தி 'உஸ்" என சப்தம் எழுப்பி ஊழியர் ஒருவர் நீதிபதிக்கு  முன்னே வரும் பழக்கம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. ஆனால் அவர் அது போன்ற  மரியாதை தனக்கு வேண்டாம் என மறுத்தார். ஆங்கிலேய நீதிபதிகள் இந்தியர்களைக்காட்டிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என காட்டுவதற்க்காக கைகொண்ட வழக்கம் சனநாயக சமூகத்திற்கு ஏற்புடையதல்ல என  அதனை மறுத்தார்.மேலும் காலனி ஆதிக்கத்தின் எச்சங்களான நீதிபதிகளை "யுவர் ஆனர்", "மை லார்ட்" என அழைப்பதை தவிர்த்து "மிஸ்டர் ஜட்ஜ்" என தன்னை அழைக்க கூறினார்.அவர் கேரளாவின் அமைச்சராக இருந்த போது மத்திய சட்ட அமைச்சக கூட்டத்தில் நீதிமன்றங்களில் இதுபோன்ற அடிமை முழக்கங்கள் கேட்கின்றது. இவற்றை தவிர்த்து ,இந்திய நீதிமன்றத்தை இந்திய மயமாக்கப்படவேண்டும் என்று குரல் எழுப்பியதை நினைவுபடுத்தினார்.
1971 ல் அவர் மத்திய சட்ட கமிஷன் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.பின் 1973 ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்..உச்சநீதிமன்றத்தில் அவரின் தீர்ப்புகள் தனித்துவம் வாய்ந்தது. வெறும் சட்டவாதமாக மட்டும் வழக்குகளை பார்க்காது . அதன் பின் உள்ள சமூக ,அரசியல் மற்றும் சனநாயக பிரச்சனைகள் அவர் விரிவாக  தீர்ப்புகளில் எடுத்துரைத்தார்.
1975  ஜீன் 12 ஆம் தேதியில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின்  ரேபரேலி தேர்தல் வெற்றி  அரசு இயந்திரத்தை பயன்படுத்தி முறைகேடாக பெறப்பட்டதாக ராஜ் நாராயணன் தாக்கல் செய்த வழக்கில் ,
அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்திராகாந்தியின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.அந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை உத்திரவு பெற வேண்டி உச்சநீதிமன்றத்தில் இந்திராகாந்தி வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் முன் வந்தது.அவர் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கு முழுதாக தடையுத்தரவு வழங்கவில்லை.மாறாக இந்திராகாந்தி பிரதமராக தொடரலாம் என்றும் ஆனால் பாராளுமன்றத்தில் வாக்களிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் பிரதமரின் தர்மம் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த தீர்ப்பினால் ஆறு மாதத்தில்  மீண்டும் தேர்தலை சந்திக்கவேண்டிய நிர்பந்தம் இந்திராகாந்திக்கு உருவானது.இதன் தொடர்ச்சியாக 1975 ஜீன் 24 ஆம் தேதி நெருக்கடி நிலையினை அறிவித்தார். மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது. உரிமைகளுக்காக நீதிமன்றம் செல்லும் உரிமை மறுக்கப்பட்டது. எங்கும் அரச வன்முறையும் அத்துமீறலும் நிகழ்ந்தது.சனநாயக சமூகத்தின் மீது பெரும் தாக்குதலையும் ,பாதிப்பையும்  நெருக்கடி நிலை ஏற்படுத்தியது.
 உச்சநீதிமன்றத்தில் கிருஷ்ணய்யர் வழங்கிய பல தீர்ப்புகள் ஏழைகளின் சனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் இருந்தது. இக் காலத்தில் உச்சநீதிமன்றத்தில் சாமானிய ஏழைகள் எழுதிய கடிதங்கள்கூட சில சமயம் வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மரனதண்டனையினை முற்றிலுமாக எதிர்த்தார். அதனை தண்டனை வடிவமாக கருத முடியாது என்பதில் உறுதியுடன் நின்றார்.  மேலும் இலவச சட்ட உதவி முறைக்கு அவர் உயிர் கொடுத்தார்.1980 நவம்பர் 14 வரை உச்சநீதிமன்றத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றார்.ஓய்வுக்கு பின்பும் தொடர்ந்து மனித உரிமைகளுக்காகவும் ,கண்ணியத்திற்காகவும் முகம் அறியாத அனைவருக்கும்  ஆதரவு அவர் குரல் கொடுத்து வரலானார்.
 1996 ல் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில்  கர்நாடக தமிழக அதிரடிபடி அதிரடிப்படையினர் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களின் பின்னனியில் பாதிக்கப்பட்ட பழங்குடிமக்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்து அந்த மனு மாவட்ட மனித நீதிமன்றத்துக்கே வழக்கை எப்படி நடத்துவதென்ற விதி இல்லை என திருப்பட்டபோது அது குறித்து எதிர்பார்புகளின்றி  நான் எழுதிய கடிதம் அவரின் நடவடிக்கையால் வழக்காக உயர்நீதிமன்றம் எடுத்துக்கொண்டது. இரண்டு நீதிபதிகள் ஓராண்டு அந்த வழக்கை விசாரித்தனர். மூத்த வழக்குரைஞர் கே.ஜி.கண்ணபிரான் மனுதாரகளுக்காக வாதாடினார். அதிரடிபடையின் அத்துமீறல்களை ஓரளவு கட்டுப்படுத்த அந்த வழக்கு உதவியது.பழங்குடியினருக்காக நாட்டின் முக்கிய மனிதர்கள் ஆதரவு தர முன் வந்தது சநாயகத்தின் மீது  நம்பிக்கையினை உருவாக்கியது.1999 வருடம் மனித உரிமை ஆர்வலர்கள் அதிரடிபடையினரால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று அரச வன்முறையின் கோரத்தை அம்பலப்படுத்திய பின்னனியில் நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் இது குறித்து தேசிய மனித உரிமை  ஆணையத்திற்கு எழுதிய கடிதம் , கர்நாடக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவா தலைமையில் அதிரடிப்படை அத்துமீறல்களை விசாரிக்க குழு அமைத்து விசாரிக்க உதவியது.
 நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யர் தன்னைச்சுற்றிய சமூகத்திற்கு  தொடர்ந்து நம்பிக்கைகளை விதைத்துக்கொண்டே உள்ளார்.மூத்தோர் முக்கியமாக செய்யவேண்டிய அரும் பணி இது.அவர் கடந்த தலைமுறையின் அரிதாய் எஞ்சி நிற்கும் உன்னத மனிதர்.அவரை அவர் வாழும் காலத்திலேயே நினைவு கொள்வோம்.
 Photo: 15.11.2013 ,நீதி நாயகம் வீ.ஆர்.கிருஷ்ணய்யரின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு , கோயமுத்தூர் வழக்குரைஞர் நண்பர்கள் சுதீஷ், சுந்தரமூர்த்தி, ச.பாலமுருகன், விக்டர், அபுபக்கர் ஆகியோர் எர்ணாகுளம் சென்று அவரை நேரில் சந்தித்து வீ.ஆர்.கிருஷ்ணய்யருக்கு எங்களின் மனமார்ந்த அன்பினையும் வாழ்த்துக்களையும்  கூறிவந்துள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக