தேர்தலில் வனம் சார்ந்த கோரிக்கை
(ச.பாலமுருகன்)
தமிழக பாராளுமன்ற தேர்தலில் நகர் சார்ந்த மக்களின் வாக்குகள் மீது வைக்கப்படும் கவனம், வனம் சார்ந்த மக்கள் மீது இல்லாத நிலை உள்ளது. வனப்பகுதியும் வனப்பகுதியினை சார்ந்த பிற பகுதிகள் வன உரிமை சட்டம் 2006 நடைமுறை படுத்த வேண்டிய பகுதியாகும். பழங்குடி மக்கள் அல்லது பழங்குடி இல்லாத பிற மக்கள் மூன்று தலைமுறைகளாக இப் பகுதியில் வசித்து விவசாயம் செய்து வரும் நிலையில் அவர்களின் நில உரிமையை அங்கீகரித்து நிலம் வழங்க அரசு வழிவகை காண வேண்டும். வன உரிமை சட்ட்த்தின் கீழ் மக்கள் வாழும் சமூகத்திற்கென உள்ள உரிமைகள் மற்றும் தனி நபர் சார்ந்த உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டு பதிமூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது.
ஆனாலும் இன்னமும் முழுதாக பயன் கிடைக்கவில்லை. வனத்துறையின் கட்டுப்பாட்டிலும் ஆட்சியிலும் உள்ள வனத்தை மக்கள் சமூகத்தின் கிராம சபையின் அதிகாரத்தின் கீழ் செயல்பட அனுமதிப்பது இச் சட்ட்த்தின் முக்கிய குறிக்கோளாகும். இதனால் தங்களின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படுவதாக கருதிய வ்னத்துறை உயர்நீதிமன்றத்தில் இச் சட்ட்த்தை எதிர்த்து தாக்கல் செய்யப்ப்பட்ட ஒரு வழக்கில் வன உரிமை சட்டப்படி பட்டா வழங்குவதற்கு முன் நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என்று உத்திரவிட்ட்து. அந்த உத்திரவை “தடை உத்திரவு “ என்பதாக காட்டி இச் சட்டத்தை கிடப்பில் போட்டது.தமிழக அரசு. உச்சநீதிமன்றம் தலையீட்டால் கடந்த ஆண்டுதான் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது இச் சட்டம்.
வன உரிமை சட்டத்திற்கும் தமிழக பாராளுமன்ற தேர்தலுக்கும் உள்ள தொடர்பு யாதெனில் கிருஷ்ணகிரி , தர்மபுரி, நீலகிரி, சிவகங்கை, காஞ்சிபுரம் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் வன உரிமைச்சட்டத்தின் மூலம் பயன் பெறும் பயனாளிகள் வாக்கு, வெற்றி தோல்வியை முடிவு செய்வதாக இருக்கும் என கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு வன உரிமை சட்ட்த்தை ஆதரிக்கும் (community forest rights- Learning and advocacy Group) குழு டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்துடன் சேர்ந்து செய்த ஓர் ஆய்வு கூறுகின்றது.
கிருஷ்ணகிரி தொகுதியில் கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் ஆ.தி.மு.க 206591 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க எதிர்த்து வெற்றி பெற்றது.இத் தொகுதியில் 192 வன கிராம சபைகள் உள்ளடக்கியது. இந்த கிராம சபை வாக்காளர்கள் எண்ணிக்கை மட்டும் 278530 சுமார் 20% வாக்காளர்கள்.
தர்மபுரியில் இதே போல பா.ம.க 77146 வாக்குகள் அ.தி.மு.க.விட கூடுதலாக பெற்று வென்றது. ஆனால் இந்த தொகுதியில் வரும் 178 கிராம சபைகளில் 379150 வாக்காளர்கள் உள்ளனர். இது 28% ஆகும்.
நீலகிரியில் அ.தி.மு.க 104940 வாக்குகளில் தி.மு.க வை வென்றது.இந்த தொகுதியில் 63 வன கிராம சபை வருகின்றது. அந்த வாக்காளர் எண்ணிக்கை மட்டும் 210131 சுமார் 17% வாக்காளர்கள்.
சிவகங்கையில் அ.தி.மு.க 229385 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வை வென்றது. 153 கிராம சபைகள் வரும் பகுதி . அந்த வாக்காளர் எண்ணிக்கை மட்டும் 236575. மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 17%.
காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க 146866 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வை வென்றது. 249 வன கிராமசபை வரும் இத் தொகுதியில் மட்டும் வாக்காளர்கள் எண்ணிக்கை 187335 . இது வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 13%.
மேற்கண்ட ஐந்து தொகுதியிலும் வன கிராமசபை வாக்காளர்கள் வெற்றி தோல்வியை தீர்மாணிக்க்கூடியவர்கள். வன உரிமை சார்ந்த பலன்களை தர முன் வரும் கட்சிகளுக்கு இம் மக்கள் தங்களின் வாக்குகளை அளித்தால் தேர்தலின் முடிவு மாறும். நாடு முழுதும் இது போல 133 தொகுதிகள் இனம் காணப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் சத்தீஷ்கர் போன்ற பகுதிகளில் வன உரிமை சட்ட்த்தை நடைமுறை படுத்தி பாதுகாக்க மக்களிடம் உத்திரவாதப்படுத்தி காங்கிரஸ் கட்சி வெற்றியை தனக்கு சாதகமாக்கியது.
பழங்குடி மக்கள் மற்றும் வன உரிமை சட்ட்த்தின் படி பயன் பெறும் மக்கள் அரசியல் கட்சிகளிடம் சில கோரிக்கைகளை எதிர் வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த அரசியல் கட்சிகளிடம் எதிர்பார்க்கின்றனர்.
1.வன உரிமைச்சட்டம் 2006 தகுதியுடைய எல்லா மக்களுக்கும் சென்றடையும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.. அதற்காக திட்டங்கள், நிதி மற்றும் கிராம சபைகளை தகுதியுடைய பகுதியில் உருவாக்கப்பட வேண்டும்...
2.வன உரிமைச்சட்ட்த்தின் படி சமூக குழு உரிமைகளும் ,தனை நபர் உரிமையும் அரசு அங்கீகரிக்க வேண்டும்.குறிப்பாக இப் பகுதியில் விவசாயம் செய்து வரும் மக்களின் நில உரிமை , கால்நடை மெய்க்கும் உரிமை மற்றும் வன மகசூல்களை
3.வனப்பகுதி கிராமங்கள் மற்றும் வனமாக நில அளவை செய்யப்படாத பகுதிகளை மக்கள் எளிய முறையில் பயன் படுத்தும் வகையில் அந்த பகுதிகளை வருவாய் கிராமங்களாக மாற்றவேண்டும்.
4.வனத்துறையின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு, வனக்குழுக்கள் வன உரிமை சட்டப்படி வனத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் அனுமதிக்கவேண்டும்.மேலும் ஏற்கனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி வனப்பகுதில் வனத்திற்கு தொடர்பில்லாத செயல்பாடுகளை அரசு அனுமதிக்கும் போது ,அதால் வனம் பாதிக்கப்படும் சூழலில் அந்த பாதிப்பை ஈடு செய்ய வேறு பகுதியில் வனம் உருவாக்க வேண்டி சேமிக்கப்ப்பட்டுள்ள நிதி சுமார் 66000 கோடி உள்ளது. வருடம் வட்டி மட்டும் சுமார் 1000 கோடிக்கு மேல் வருகின்றது. இந்த நிதியை வனம் வளர்க்க வன கிராம சபை மூலம் நூறு நாள் வேலைத்திட்டம் மூலம் செலவு செய்யவேண்டும்.
5. வன பகுதியில் வாழ்பவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் திட்டங்களை நடைமுறை படுத்தி வனப்பகுதி மக்களின் வருவாய் ஆதாரத்தை பெருக்க வேண்டும்.
6.வனத்துறை இப் பகுதியில் வாழும் மக்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைக்காகவும், அச்சுறுத்தும் நோக்கிலும் தாக்கல் செய்த வழக்குகள் திரும்ப பெறப்படவேண்டும்.
7.வனப்பகுதியை சட்டவிரோதமாக தனியார் மற்றும் கார்பரேட் கம்பெனிகளுக்கு அல்லது வேறு செயல்பாடுகளுக்கு வழங்கும் நடைமுறை கைவிடப்படவேண்டும். அது போன்ற திட்டங்களுக்கு கிராம சபையின் அனுமதி அவசியமாக பெறவேண்டும்.
வனப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவது தடுக்கப்படவேண்டும். வனவிலங்குகளும் மக்களும் ஒருவர் மற்றவர்க்கு பாதிப்பின்றி இசைந்து வாழும் சூழல் உருவாக்கப்படவேண்டும் ஒருவேளை வனபகுதியிலிருந்து மக்களை வெளியேற்றும் தவிர்க்கமுடியாத சூழலில் வெளியேறும் மக்களின் வன உரிமை அங்கீகரிக்கப்பட்டு மாற்று வாழ்வாதாரம் வழங்க வேண்டும்.
8. ஏற்கனவே வனத்துறை நடைமுறை படுத்தி வரும், தோல்வியடைந்த கூட்டு வன மேலான்மை என்ற கொள்கை கைவிடப்படவேண்டும். மேலும் அரசின் வனக்கொள்கை என்பது தனியார் கம்பெனிகள் வனிக நோக்கில் வனத்தை பயன்படுத்தும் வகையில் இருப்பது கைவிடப்படவேண்டும்..
இந்த கோரிக்கைகளை நாடு முழுதும் வன உரிமை சட்ட்த்தின் கீழ் பயன் பெற தகுதி படைத்த மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். தேர்தல் வெற்றி மட்டுமல்ல ,ஆட்சியாளர்கள் இம் மக்களின் கோரிக்கைகளை ஏற்று இம் மக்களையும் இணைத்து பயணிக்க தவறினால் அது மற்றுமொரு வரலாற்று அநீதியாகிவிடும்..
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக