திருப்பூர் நகரில் நைஜீரியர்களுடன் நிலவும் முரண்பாடுகள் பிரச்சனைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் (PUCL) உண்மையறியும் குழு அறிக்கை
- விவரங்கள்
தமிழகத்தின் டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் நகரம் உலகம் முழுதும் பனியன் வியாபாரத்தை திறம்பட நடத்துகின்றது. இங்கு சமீப காலமாக நைஜீரிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் பனியன் வியாபாரம் தொடர்பாக தங்கி வியாபாரம் செய்து வரும் நிலையில் கடந்த 2014 ஆகஸ்ட் தேதியில் நைஜீரிய நாட்டு இளைஞர்கள் உள்ளூர்வாசிகளுக்கு இடையூறு தருவதாகவும், மேலும் பெண்களுக்கு தொல்லைகள் தருவதாகவும், அதன் தொடர்ச்சியாக நைஜீரிய நாட்டு இளைஞர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரின் ராயபுரம் பகுதியில் அவர்களுக்கு வீடு வாடகைக்கு தரக்கூடாது என்றும் மேலும் உடனடியாக நைஜீரிய நாட்டவர் அப் பகுதியிலிருந்து வீட்டைக் காலி செய்து வேறு பகுதிக்குப் போய் விடவேண்டும் என்றும் திருப்பூர் ராயபுரம் பகுதியில் சிலர் தீர்மானங்களை நிறைவேற்றியதன் பின்னணியில் உண்மை நிலையினை அறிய மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) கடந்த 30.8.2014 மற்றும் 3.10.2014 ஆகிய தேதிகளிலும் கள ஆய்வு மேற்கொண்டது.
உண்மையறியும் குழு உறுப்பினர்கள்:
1. திரு. ச.பாலமுருகன், மாநிலச்செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
2. திரு. எழில் சுப்பிரமணியம், சமூக ஆர்வலர், திருப்பூர்
3. திரு. து.சேகர் அண்ணாதுரை, கோவை மாவட்ட செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
4. திரு. மா.பாலசந்திரன், கோவை மாவட்டத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்
5. திரு. ஆர். ஈஸ்வரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், திருப்பூர்
6. திரு. பேராசிரியர் கணபதி முருகன், ஒருங்கிணைப்பாளர், கடலூர் மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகம்
2. திரு. எழில் சுப்பிரமணியம், சமூக ஆர்வலர், திருப்பூர்
3. திரு. து.சேகர் அண்ணாதுரை, கோவை மாவட்ட செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
4. திரு. மா.பாலசந்திரன், கோவை மாவட்டத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்
5. திரு. ஆர். ஈஸ்வரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், திருப்பூர்
6. திரு. பேராசிரியர் கணபதி முருகன், ஒருங்கிணைப்பாளர், கடலூர் மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகம்
குழு நேர்காணல் கண்டவர்கள்:
1. திரு. பொ.கணேசன், ராயபுரம், திருப்பூர். (காந்தி மக்கள் இயக்கம்)
2. திரு. பால சுப்பிரமணியம், தொழிலதிபர், ராயபுரம், திருப்பூர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
3. திரு. கண்ணன், தெற்கு வீதி ராயபுரம், திருப்பூர்.
4. திரு. ஆண்டனி, நைஜீரிய நாட்டவர், பனியன் வியாபாரம் காதர் பேட்டை, திருப்பூர்.
5. திரு. அபினா பெட்ரிக், நைஜீரிய நாட்டவர், திருப்பூர் நைஜீரிய சமூக நலன் மற்றும் பனியன் வியாபாரிகள் சங்கம்,
6. திரு. கெலிச்சி, நைஜீரிய நாட்டவர், நைஜீரிய கத்தோலிக்க இளைஞர் சங்கம், திருப்பூர்
7. திரு. எஸ்.ஜெயச்சந்திரன், காவல்துறை உதவி ஆணையர், திருப்பூர்
8. அருட் தந்தை திரு. எட்வர்ட், பங்குத் தந்தை கத்தோலிக்க திருச்சபை, திருப்பூர்
9. திரு. ஏ.சுந்தரம், தலைவர், திருப்பூர் ஏற்றுமதி இரண்டாம் தர பனியன் வியாபாரிகள் சங்கம், காதர்பேட்டை, திருப்பூர்.
10. திரு. குமார், தலைவர், திருப்பூர் ஏற்றுமதி இரண்டாம் தர பனியன் வியாபாரிகள் சங்கம், காதர்பேட்டை திருப்பூர்.
11. திரு. தூயவன், ஊடகவியலாளர், திருப்பூர்
2. திரு. பால சுப்பிரமணியம், தொழிலதிபர், ராயபுரம், திருப்பூர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
3. திரு. கண்ணன், தெற்கு வீதி ராயபுரம், திருப்பூர்.
4. திரு. ஆண்டனி, நைஜீரிய நாட்டவர், பனியன் வியாபாரம் காதர் பேட்டை, திருப்பூர்.
5. திரு. அபினா பெட்ரிக், நைஜீரிய நாட்டவர், திருப்பூர் நைஜீரிய சமூக நலன் மற்றும் பனியன் வியாபாரிகள் சங்கம்,
6. திரு. கெலிச்சி, நைஜீரிய நாட்டவர், நைஜீரிய கத்தோலிக்க இளைஞர் சங்கம், திருப்பூர்
7. திரு. எஸ்.ஜெயச்சந்திரன், காவல்துறை உதவி ஆணையர், திருப்பூர்
8. அருட் தந்தை திரு. எட்வர்ட், பங்குத் தந்தை கத்தோலிக்க திருச்சபை, திருப்பூர்
9. திரு. ஏ.சுந்தரம், தலைவர், திருப்பூர் ஏற்றுமதி இரண்டாம் தர பனியன் வியாபாரிகள் சங்கம், காதர்பேட்டை, திருப்பூர்.
10. திரு. குமார், தலைவர், திருப்பூர் ஏற்றுமதி இரண்டாம் தர பனியன் வியாபாரிகள் சங்கம், காதர்பேட்டை திருப்பூர்.
11. திரு. தூயவன், ஊடகவியலாளர், திருப்பூர்
Federal Republic of Nigeria என்ற நைஜீரியா இந்தியாவைப் போல ஆங்கிலேய காலனியாக இருந்த ஆப்பிரிக்க நாடு. 36 மாநிலங்களைக் கொண்டது. மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள இந்த நாட்டில் வட பகுதியில் இஸ்லாம் மதத்தவரும் இதன் தென் பகுதியில் கிருஸ்துவ மத்தவரும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தையும் பெற்றுள்ளது. இந் நாடு இந்தியாவின் நட்பு நாடு. மேலும் இங்கிருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் இந்திய எரிபொருள் தேவையில் 30% பூர்த்தி செய்கின்றது. தினமும் நான்கு லட்சம் பேரல் கச்சா எண்ணெய் நைஜீரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது . இதனால் வருடத்திற்கு 10 பில்லியன் டாலர் வியாபாரம் நமது நாட்டுடன் ஈடுபட்டுள்ளது. இந் நாட்டில் இந்தியர்கள் சுமார் ஐந்து லட்சம் பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் ஐம்பதாயிரம் நைஜீரியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் அதிகம் பேர் கோவா மாநிலத்தில் வசிக்கின்றனர்.
திருப்பூரில் நிலவும் நைஜீரியர் எதிர்ப்பு நிலை பின்புலம்:
திருப்பூரில் இருந்து முதல் நிலை பனியன்கள் அய்ரோப்பிய மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இவ்வாறு அனுப்பப்படும் சரக்குகளில் நிராகரிக்கப்பட்டவை அல்லது பாதிப்புக்கு உள்ளானவை உள்ளூர் சந்தைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன. இவை இரண்டாம் தர பனியன்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. திருப்பூரின் இரயில் நிலையம் அருகில் உள்ள காதர் பேட்டை என்ற பகுதியில் இந்த வியாபாரம் நடைபெறுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் பனியன் வங்கும் வியாபாரிகளாக இருந்த நைஜீரியர்கள் இங்கு பனியன் வாங்கி தங்களின் நாடுகளுக்கு அனுப்பி வந்தனர். அந்த சமயம் அவர்களின் வரவு லாபம் தருவதாக கருதப்பட்டது. சில காலத்திற்குப் பின் அவர்களே பனியன் உற்பத்தியில் ஈடுபட்டு தங்கள் நாடுகளுக்கு அனுப்பத் துவங்கினர். இவ்வாறு வியாபாரத்தில் ஈடுபட்ட சிலர் வியாபார விசாக்களைப் பெற்று வந்து திருப்பூரின் காதர் பேட்டை பகுதியில் வாடகைக்கு கடை எடுத்தும் நடத்தி வருகின்றனர். இப் பகுதியின் அருகில் உள்ள ராயபுரம் என்ற பகுதியில் வாடகைக்கு வீடுகளை எடுத்தும் தங்கி வருகின்றனர். மாத வாடகை சுமார் ரூபாய் ஐந்தாயிரம் போகும் வீடுகள் நைஜீரியர்களுக்கு இரு மடங்கு அல்லது மூன்று மடங்கு அதிக வாடகைக்கு விடும் போக்கு அப் பகுதியில் நிலவுகின்றது. மேலும் வீட்டு உரிமையாளர்களிடம் மோதல் போக்கு இல்லாத நிலையினால் நைஜீரியர்களுக்கு அதிக வாடகைக்கு வீடு விடும் நடைமுறை வந்தது.
கடந்த 2012 முதல் உள்ளூர் ஊடகங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நைஜீரிய நாட்டு இளைஞர்கள் பற்றி செய்திகள் வெளியாகியுள்ளது. அவைகளில் 2012ல் கூரியரில் போதைப் பொருள் கடத்தியதாக ஒரு குற்றமும், 2014ல் வடக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரை ஒரு நைஜீரியர் முகத்தில் தாக்கிவிட்டது, விசா காலம் கடந்து தங்கியுள்ளவர்கள் கைது உள்ளிட்டவை அடங்கும். கடந்த 2014 ஆகஸ்ட் மாதத்தில் திருப்பூரில் ராயபுரம் தெற்கு வீதியில் சாம்சன் என்ற ஆப்பிரிக்க நாட்டு இளைஞர் அப் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக ஒரு நிகழ்வை ஒட்டி அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக ராயபுரத்தில் உள்ள சிலர் நைஜீரியர்களை உடனடியாக அப் பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றும் வீட்டு உரிமையாளர்கள் பத்து நாட்களுக்குள் அவர்களை காலி செய்யாமல் இருந்தால் அந்த வீட்டு மின்சாரம், குடிநீர் இணைப்பை மாநகராட்சி மூலம் துண்டிக்கவேண்டும் என்பன போன்ற தீர்மானம் உள்ளூர் கூட்டத்தில் நிறைவேற்றி உள்ளனர். மேலும் தினத்தந்தி பத்திரிக்கை “நைஜீரியர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் பெண்கள்” என்ற செய்தியினை 21.8.2014 ல் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து ராஜ் தொலைக்காட்சி “கோப்பியம்” என்ற தொடரில் நைஜீரியர்கள் திருப்பூரில் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக ஒரு செய்தித் தொகுப்பை வெளியிட்டது. இந்தச் சூழலில் மக்கள் சிவில் உரிமைக் கழகம், உண்மையறியும் குழு அமைத்து அப் பகுதியில் கள ஆய்யு மேற்கொண்டது.
உண்மையறியும் குழு நோக்கங்கள்:
உண்மையறியும் குழு நோக்கங்கள்:
ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது போன்று நைஜீரியர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனரா? என்பதும், அவர்களின் சமூக நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்வதும், நைஜீரியர்கள் என்ற கருப்பின நிறம் சார்ந்த அம் மக்கள் மீது நிறம் சார்ந்த பாகுபாடு ஏதேனும் உள்ளதா? என்பதும் மேலும் வெளிநாட்டு குடி மக்களாகிய இவர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் சமூகத்தின் நல்லிணக்கம் தொடர்பாக வழி வகைகளைப் பரிந்துரைப்பதும் இக் குழுவின் முக்கிய நோக்கமாகவும் இருந்தது.
நைஜீரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள்
நைஜீரியர்கள் மீதான எதிர்க் கருத்து கொண்டிருக்கும் பெரும்பாலானவர்கள் உண்மையறியும் குழுவின் முன் பரவலாக வைத்த குற்றச்சாட்டு நைஜீரியர்கள் பொது இடங்களில் மது அருந்துகின்றார்கள் என்பதும், மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர், வீட்டில் மாட்டுக்கறி சாப்பிடுகின்றனர், முரட்டுத்தனமாக செயல்படுகின்றனர், அவர்களுக்கிடையே நடக்கும் சண்டை முரட்டுத்தனமாக உள்ளது, குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர், உள்ளூர் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்கின்றனர், வேகமாக இரு சக்கர வாகனம் ஓட்டுகின்றனர், வியாபாரத்திற்கு போட்டியாக வருகின்றனர் என்பனவாக இருந்தன.
குழுவின் ஆய்வு
நைஜீரியர்களின் கலாச்சாரம் குறித்து பிட்டானிக்கா கலைக்களஞ்சியம் குறிப்பிடும் போது பாரம்பரியத் தன்மை மற்றும் இறக்குமதியான கலாச்சாரப் பின் புலம் சார்ந்ததாக அவர்களின் தினசரி வாழ்க்கை உள்ளதைக் குறிப்பிடுகின்றது. நைஜீரியாவில் இஸ்லாம் மதம் செல்வாக்கு பெற்றுள்ள்ள பகுதிகளில் மதம் சார்ந்து மதுவுக்கு குறிப்பாக தடை விதிக்கப்பட்ட பகுதிகள் நீங்கலாக பிற பகுதிகளில் மது பரிமாறுவதும், இரவு விடுதிகள் என்பதும் சகஜமான ஒன்றாகவே அவர்களின் நாடுகளில் உள்ளது. மேலும் கொண்டாட்டங்கள் என்பது அவர்களின் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவும் உள்ளது. பிறப்பிலிருந்து திருமணம் வரை கொண்டாட்டங்கள் அங்கு முக்கியமானதாக கருதப்படுகின்றது. மேலும் கடல் சார் உணவுகள், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழிக் கறி போன்ற மாமிச உணவுவகைகள் அவர்களது உணவின் முக்கிய புரதச் சத்து ஆதாரமாக உண்ணப்படுகின்றது.
மது அருந்துதல் என்பது சமூகத்தின் பொது வெளியில் இயல்பான ஒரு நிலையாக மாறிவிட்டது. தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மது விற்பனையும், திருப்பூரில் அதிகரித்துள்ள மது விற்பனை, உள்ளூர்வாசிகள் போதை நோய்க்கு அடிமையாகி வரும் நிலையில், அதற்கு எதிராக விமர்சனம் பொது வெளியில் பரவலாக இல்லாத நிலையில் நைஜீரியர்கள் குடிப்பது தொடர்பாக எழுப்பப்படும் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. ஆனால் மாட்டுக்கறி உணவு பொதுவாக தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர் போன்றோர் சாப்பிடும் உணவு என்ற அளவில் சுருங்கியுள்ள நமது சமூகத்தில் நைஜீரியர்கள் அவர்களின் வீடுகளில் மாட்டுக்கறி உண்பதும், மது அருந்துவதும் சமூகத்தில் செய்யக்கூடாத செயல்களை அவர்கள் செய்வதாக விமர்சிக்கப்படுகின்றது. மேலும் நைஜீரியர்களின் உயர்ந்த தோற்றம் மற்றும் பலம் வாய்ந்த உடல்வாகு உள்ளூர்வாசிகளிடையே இனம் புரியாத ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதையும் அதன் தொடர்ச்சியாக ஒரு காரணமற்ற வெறுப்பு கட்டமைக்கப்பட்டுள்ளதையும் காண முடிந்தது.
நைஜீரியர்கள் பேசும் மொழி, உச்சரிப்பு, குரலில் உள்ள அதிக சப்தம் போன்றவை அவர்கள் மீதான இடைவெளியினை அதிகப்படுத்தும் காரணிகள் ஆகின்றன. பல்வேறு கலாச்சாரம் சார்ந்த சமூகத்தில் வாழ்ந்த போதும் சாதிகளால் பிளவுபட்டுள்ள சமூகத்தின் பின்னணியில் கருப்பு நிறம் என்பது தங்களின் உள்ளூர் தாழ்த்தப்பட்ட மக்களை இணைத்துப் பார்க்கும் ஒன்றாக உள்ளதாலும் சாதியம் சார்ந்த உளவியல் ஓங்கியுள்ளதை உணர முடிகின்றது. இந்த வெறுப்பு என்பது வெள்ளை நிறம் சார்ந்த வெளிநாட்டவர் மீது எழாமல் போனதற்கு இந்த சாதி சமூகத்தின் உளவியல் முக்கிய காரணமாகும்.
சில காலங்களுக்கு முன்பு வரை தங்களிடம் பனியன் வாங்கி தங்களின் வணிகத்திற்கு உதவியவர்கள் தற்போது வியாபாரிகள், உற்பத்தியாளர்களாக மாறியது தங்களின் வியாபாரத்தை எதிர்காலத்தில் பாதிக்கும் என்ற அச்ச உணர்வு இரண்டாம் தர பனியன் வியாபாரிகள் மத்தியில் உருவாகியுள்ளது. திருப்பூரின் பனியன் தொழில் ஏற்கனவே பெரு மூலதனத்துடன் தொழில் நடத்தும் வட இந்திய வியாபாரிகள் கைகளில் கணிசமாக மாறியுள்ள நிலையில் தங்களின் நேரடி தொழில் போட்டியாளர்களாக நைஜீரியர்கள் மாறிவிடுவார்கள் என்ற ஓர் எண்ணம் இருப்பதை இக் குழு கண்டது. இந்தப் பொருளாதார நலன் சார்ந்த காரணியினால் தொடர்ந்து திருப்பூர் காதர் பேட்டை பகுதி இரண்டாம் தர வியாபாரிகள் காதர் பேட்டையிலிருந்து நைஜீரியர்கள் வெளியேற வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். 2013 டிசம்பரில் அப் பகுதியிலிருந்து நைஜீரியர்கள் வெளியேற்றப்பட்டதையும் அதன் பின்பு மீண்டும் அதிக வாடகை கொடுத்து அவர்கள் கடைபிடித்து திரும்ப வியாபாரத்திற்கு திரும்பியுள்ளதும் நிகழ்ந்துள்ளது. எனவே இரண்டாம் தர பனியன் வியாபாரத்தில் வியாபார போட்டி என்ற உணர்வு உள்ளூர் வியாபாரிகள் மத்தியில் நிலவுகின்றது. வாய்ப்புகள் ஏற்படும் போது நைஜீரியர்களுக்கு எதிராக ஒரு வெறுப்பு அரசியல் கட்டப்படுவதையும் உண்மையறியும் குழு கண்டது.
அந்நியர்கள், வெளிநாட்டவர்கள் மீது கட்டமைக்கப்படும் தேவையற்ற பயம் Xenophobia என்பது திருப்பூர் மக்கள் மத்தியில் நிலவுவதைக் காண முடிந்தது. நைஜீரியர்கள் பொதுவில் உள்ளூர்வாசிகளிடம் முரண்பாடுகளைத் தவிர்க்க விரும்புவதையும், மேலும் காவல்துறையோடு ஒத்துப் போக முயலுவதையும் காண முடிந்தது. தவறு செய்யும் நைஜீரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் ஒத்துழைப்பு தருவதாகவும் கூறினர். உதாரணமாக 19.8.2014 தேதி திருப்பூர் தெற்கு வீதியில் ஒரு பெண்ணிடம் அத்துமீறியதாக புகார் செய்யப்பட்ட சாம்சன் என்ற நபரை அடுத்த நாள் நைஜீரிய இளைஞர்கள் தேடிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்தச் சம்பவம் குறித்து, சம்பவம் நிகழ்ந்ததாக சொல்லப்படும் வீட்டிற்கு அருகில் குடியிருப்போரிடம் விசாரித்தபோது குறிப்பாக தகவல்கள் கிடைக்கவில்லை. மேலும் காவல்துறையினரிடம் நைஜீரியர்களால் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது ஒழுங்குக்கு பாதிப்பு நிகழும் செயல்கள் ஏற்படுகின்றதா என்பது குறித்து கேட்டபோது குறிப்பிடும் படி நைஜீரியர்களால் பொது ஒழுங்கில் அது போன்ற பாதிப்பு இல்லை என்றும், மேலும் ஒட்டுமொத்த நைஜீரியர்களை தவறு செய்பவர்களாக பொதுமைப்படுத்த முடியாது என்றும், பொதுவில் தவறு செய்யும் நபர்கள் யாராக இருந்த போதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கருத்தை வெளிப்படுத்தினர்.
இக் குழு அருட் தந்தை எட்வர்ட் என்பரிடம் நேர்காணல் கண்ட சமயம் திருப்பூர் பகுதியில் உள்ள பெரும்பாலான நைஜீரியர்கள் கத்தோலிக்க கிருஸ்துவர்கள் என்றும் அவர்கள் அனுமதி பெற்று தங்களின் தேவாலயத்தில் தனி ஆராதனை மேற்கொள்வதாகவும், அவர்கள் காரனமின்றி வெறுப்புடன் பார்க்கப்படுவதாகவும், மேலும் யாரும் அவர்கள் சார்ந்த பேச முன் வருவதில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாகவும், அவர்கள் தரப்பு பிரச்சனைகள் அதிகாரிகளின் கவனத்திற்கு வரவேண்டும் என அம் மக்கள் விரும்புவதாகவும் கூறினார். தேவாலயத்தைப் பொருத்து மிகுந்த கட்டுப்பாடு, பொது ஒழுங்கு மற்றும் இறை உணர்வுடன் அவர்கள் நடந்து கொள்வதாகவும், மேலும் அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்காரர்களுக்கு ஒரு போதும் பிரச்சனையாக இருந்ததில்லை என்பதையும் குறிப்பிட்டார்.
மேலும் ஊடகங்களில் திருப்பூரில் வசிக்கும் நைஜீரியர்கள் குறித்த 21.8.2014 தேதிய தினத்தந்தி கட்டுரை மற்றும் அதனைத் தொடர்ந்து ராஜ் டி.வி காட்சி ஊடகத்தில் வெளிப்பட்ட ஆவணப்படங்கள் அடிப்படை தரவுகளின்றி வெறும் பரபரப்புக்காக உருவாக்கப்பட்டிருப்பதாகவே இருந்தது. ஊடகங்களில் பணி புரிவோர் இது போன்ற செய்திகளை வெளியிடும் முன் அந்த செய்தியினால் ஏற்படும் தாக்கம் மற்றும் அதன் நம்பகத்தன்மை போன்றவற்றை பற்றிய பொறுப்புனர்வுடன் செயல்படுவது மிக அவசியம் என்பதை இக் குழு பகிர்ந்து கொள்கின்றது. மேலும் இப் பிரச்சனையில் வெளியிடப்பட்ட செய்திகள் போதிய சர்வதேச அரசியல் மற்றும் மனித உரிமை சார்ந்த கண்ணியப்பார்வை இல்லாமால் வெளியானதையும், அந்தச் செய்திகளில் வெறும் கருப்பு மனிதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் வெளி நாட்டவரைக் கண்டு அச்சப்படும் Xenophobia பார்வை இருந்தது வருந்தத்தக்கது. இது ஊடகங்களின் பொறுப்பற்ற நிலையை வெளிப்படுத்துவதாக இக் குழு கருதுகின்றது. ஊடகங்கள் தங்களின் சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டியது அவசியமாகின்றது.
இக் குழு பார்வையிட்டபோது பெரும்பாலான நைஜீரியர்கள் டிவிஎஸ் 50 போன்ற சிறிய ரக இரு வாகனத்தை பயன்படுத்துவதைக் காண நேர்ந்தது. மேலும் சில நைஜீரியர்கள் உள்ளூர்வாசிகளால் காரணமின்றி வசவுகள் மற்றும் அவமரியாதைக்கு உள்ளாவதையும் நேர்காணல் கண்ட கெலிச்சி போன்றோர் அது போன்ற அனுபவத்தை எதிர்கொண்டதையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்தியாவின் கோவா, டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆப்பிரிக்க மக்கள் இதுபோன்ற நிறம் சார்ந்த பாகுபாட்டை எதிர் கொண்டுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு பஞ்சாப்பின் ஜலந்தர் லவ்லி புரபசனல் யுனிவர்சிட்டி மாணவரான, புருண்டி நாட்டை சார்ந்தச் யானிக் நிட்பாடகாம்யா என்ற மாணவர் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தாக்கிய மாணவர்கள் செல்வாக்குள்ள குடும்ப பின்னணி என்பதால் காவல்துறை துரிதமான விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அந்த மாணவரின் தந்தை பஞ்சாப் முதல்வரிடம் முறையிட்டார். இது அந்த மாநிலத்தில் கல்வி பயிலும் புருண்டி, நைஜீரியா, ஜாம்பியா, காங்கோ சனநாயக குடியரசு, ருவாண்டா, தாண்சானியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாட்டு மாணவர்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியது. பஞ்சாப்பில் ஜலந்தர், பக்வாரா போன்ற இடங்களில் தனியார் பல்கலைகழகத்தில் மற்ற மாணவர்களை விட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கூடுதல் கட்டணம் கொடுத்து கல்வி பயிலும் மாணவர்கள் தாங்கள் பாகுபாட்டுக்கு உள்ளாவதாக கருதுகின்றனர்.
கடந்த 2013 அக்டோபரில் கோவா மாநிலம் பனாஞ்சியில் நைஜீரிய நாட்டவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததையும் அதன் தொடர்ச்சியாக அங்கு அம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதும் அதன் தொடர்ச்சியாக கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக் நைஜீரியர்களுக்கு எதிராக எடுத்த நிலைபாடு மற்றும் கோவா சட்ட மன்ற உறுப்பினர் சந்தாராம் நாயக் என்பவர் அவர்களை போதைப்பொருள் கடத்துபவர்கள் என்றும் அவர்கள் கோவாவை விட்டுப் போய்விடவேண்டும் என்று கூறிய கருத்துக்கள், மற்றும் கோவாவில் நைஜீரியர்களுக்கு வீடு வாடகைக்குத் தருவதில்லை என்றும் இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு தருவதில்லை என்ற சில சமூக புறக்கணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் 2014 செப்டம்பரில் டெல்லி ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தில் மூன்று ஆப்பிரிக்க இளைஞர்கள் கும்பலாக தாக்கப்பட்டது போன்ற சில நிகழ்வுகளும் நைஜீரிய நாட்டவரிடம் தாங்கள் இந்தியாவில் பாரபட்சமாகவும் பாகுபாட்டுடனும் நடத்தப்படுகின்றோம் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பின்னணியில் திருப்பூரில் அவ்வப்போது எழும் பிரச்சனைகளை ஒட்டி நைஜீரிய தூதர் கடந்த 8.3.2014 திருப்பூர் நகரத்திற்கு வந்து சென்றுள்ளதும், நைஜீரியர்கள் தமிழ்க் கலாச்சாரத்தை மதித்து நடக்கக் கோரியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நைஜீரியர்கள் தங்களின் விசாவை முறையே புதுப்பிக்கவேண்டும் என்பதையும் வெளிப்படுத்தினார். அதே சமயம் அவர்களின் குடி மக்கள் இந்தியாவில் கண்ணியத்துடன் நடத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நைஜீரிய தூதரக அதிகாரி ஜேக்கப் நுவாடியபியா நைஜீரியர்கள் இந்தியாவில் பாகுபாட்டுடன் நடத்தப்படும் சூழலில் அது நைஜீரியாவில் வாழும் இந்தியர்களுக்கு எதிராக பாதகமான விளைவை உருவாக்கிவிடும் என்று எச்சரித்ததும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பரிந்துரைகள்
ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே 1993 வியன்னா மாநாட்டு செயல் திட்டம் (Vienna declaration programme of action) மற்றும் 2001 ஆண்டு துபாயில் நடைபெற்ற நிற வெறி, நிறப் பாகுபாடு, வெளிநாட்டவர் விரோதப் போக்குக்கு எதிரான உலக மாநாட்டு வரையறைகள்(World Conference against Racism, Racial Discrimination, Xenophobia and Related Intolerance) அடிப்படையில் நிறம் சாந்த எல்லா வகை பாகுபட்டையும் களைந்து சமூக நல்லிணக்கத்திற்காக செயல் திட்டங்கள் மற்றும் நடைமுறைகளை அரசு கடைபிடிக்கவேண்டும் என்ற நிலைபாட்டை மத்திய, மாநில அரசுகள் உறுதியுடன் கடைபிடித்து அதற்கான செயல் திட்டங்கள் மற்றும் சமூக கல்வியினை மக்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியா பல்வேறு வேறுபட்ட கலாச்சார மக்களின் வேற்றுமையில் ஒற்றுமை கண்டுள்ள நாடாகும். இந் நாட்டு மக்கள் பிற கலாச்சாரம் சார்ந்த மக்களின் பண்பாடுகளை மதிக்க வேண்டும். அது போன்றே பிற கலாச்சாரம் சார்ந்த வெளிநாட்டவரும் இந் நாட்டு பண்பாடுகளை மதிப்பதும் ஒத்திசைவான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
இந்திய அரசிலமைப்புச் சட்டம் பிரிவு 21 வழங்கியுள்ள தனி மனித சுதந்திரம், கண்ணியமான வாழ்க்கை, பாதுகாப்பு மற்றும் பாகுபாட்டிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் உரிமையினையும் உத்திரவாதப்படுத்தியுள்ளது. இந்த உரிமை இந்தியாவில் உள்ள வெளிநாட்டவருக்கும் பொருந்தும். எனவே அடிப்படை மனித உரிமை மற்றும் பாதுகாப்பு வெளிநாட்டு குடி மக்களுக்கு உள்ளதை அரசும், சமுகமும் உத்திரவாதப்படுத்தப்பட வேண்டும். தொடர்ந்து சமூக நல்லிணக்கத்திற்கான வழி முறைகளை கடைபிடிக்கவேண்டும்.
நைஜீரிய சமூகத்தினர் மற்றும் உள்ளூர் வாசிகள் நியாயமான, ஆரோக்கியமான வணிக சூழலில் தொழில் புரிய செயல் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். அதற்காக இரண்டு தரப்பினர் மற்றும் அதிகாரிகள் இணைந்த செயல் குழுக்கள் அமைக்கப்படவேண்டும்.
நமது சமூகத்தில் காலம் காலமாய் இருந்து வரும் சமூக புறக்கணிப்பு என்ற கண்ணோட்டத்தின் நீட்சியாக சட்டரீதியாக தொழில் புரியும் நைஜீரியர்களுக்கு வீடு, கடைகள் வாடகைக்கு தரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதிப்பதை அரசு தடுக்க வேண்டும். அது பாகுபாட்டின் ஒரு வடிவமாக கருத வேண்டியுள்ளது.
நைஜீரியர் உள்ளிட்ட ஆப்பிரிக்க மக்களுக்கு பல மடங்கு உயர்த்தி வாடகைக்கு வழங்கும் நடைமுறையில் அரசு தலையீடு செய்யவேண்டும். அது நியாயமான வாடகை என்ற சட்ட கண்ணோட்டத்திற்கு முரணாக உள்ளது. இவை தடுக்கப்படவேண்டும். அவர்களின் உணவு மற்றும் சட்டத்திற்குட்பட்ட தனி நபர் சுதந்திரங்களில் தலையீடு செய்யும் உரிமை பிறருக்கு இல்லை என்ற கண்ணோட்டம் வளர்க்கப்பட வேண்டும்.
இந்திய குடிமகன் அல்லாத வெளிநாட்டினர் தங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளும் வடிவங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் சட்டவிரோத செயல்களைத் தடுக்கவும், அந்நிய நாட்டவர் இந் நாட்டு சட்டத்துடன் ஒத்திசைவாக செயல்படவும் வழிவகை உருவாகும்.
மேலும் அந்நிய நாட்டவர்கள் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை தொடர்பாக 1963 ஆண்டு வியன்னா மாநாட்டு வரைவு (The Vienna Convention on Consular Relations of 1963) வழிகாட்டுதல்கள், தூதரக தொடர்பு போன்ற உரிமைகள் அந்நிய நாட்டவருக்கு வழங்கப்படவேண்டும். அது குறித்த விழிப்புணர்வை காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.
செய்தி ஊடகங்களின் செயல்பாடு
தவறு செய்யும் ஒரு சில தனிநபர்கள் மீது சட்டரீதியான உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமாகும். ஆனால் ஒட்டுமொத்த ஆப்பிரிக்க வாழ் மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் செய்திகள் வெளியிடுவது, பொதுமைப்படுத்துவது அல்லது பாகுபாட்டு முன் முடிவுகளுடன் ஆப்பிரிக்க மக்களின் பிரச்சனைகளை அணுகுவது தவறானது. மனித உரிமை, தனி மனித கண்ணியம் மற்றும் மதிப்புடன் செய்தி வழங்க வேண்டியது ஊடகங்களின் கடமையாகும். சில ஊடகங்கள் சமூகப் பொறுப்பின்றி வெளிநாட்டு மக்களின் பிரச்சனையினை அணுகுவது கைவிடப்படவேண்டும். அது போன்ற செய்திகள் சர்வதேச அளவிலும் நமது நாட்டிலும் சமுகத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றது என்பதை இக் குழு கரிசனத்துடன் வேண்டுகின்றது.
உண்மையறியும் குழு சார்பாக
ச.பாலமுருகன், பொதுச்செயலாளர்
மக்கள் சிவில் உரிமைக் கழகம் PUCL. தமிழ்நாடு மற்றும் புதுவை
ச.பாலமுருகன், பொதுச்செயலாளர்
மக்கள் சிவில் உரிமைக் கழகம் PUCL. தமிழ்நாடு மற்றும் புதுவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக