ஞாயிறு, 15 ஜூன், 2014

மேற்குத் தொடர்ச்சி மலையை  பாதுகாப்போம்
(ச.பாலமுருகன்)

மேற்குத்தொடர்ச்சி மலையானது குஜராத்தின் தென் பகுதியில் தப்தி நதிக்கரையில் துவங்கி மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் குமரி மாவட்டம் வரை 1600 கிலோ மீட்டர் நீளம் நீண்டுள்ளது. அது மொத்தத்தில்  129037 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  கொண்டதாக உள்ளது. ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் உலகின் பள்ளுயிர்ப் பெருக்கம் உள்ள 34 பாரம்பரிய மிக்க  முக்கிய இடங்களில் (Bio diversity hot spot) மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று என அறிவித்துள்ளது. சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கோண்டுவனா எனற பெருங்கண்டத்திலிருந்தும் ஆப்பிரிக்காவின்  மடகாஸ்கர் பகுதியிலிருந்து உடைந்து வந்து ஆசிய நிலப்பரப்பில் மோதியதால் இந்தியாவின் மேற்கு பீடபூமி பகுதியில் ஏற்பட்ட ஏற்றத்தால் இம் மலைத்தொடர் உருவாகியிருக்கும் என மியாமி பல்கலைக்கழக   புவியியல் ஆய்வாளர்களான பேரன் மற்றும் ஹரிசன் கருதுகின்றனர்.இதனால் மலைகளுக்குண்டான புவியல் விதிகளின் கீழ் இதனை மலை என அவர்கள் ஏற்பதில்லை.  இம் மலைத்தொடர் தன்னகத்தே  39 பல்வேறுபட்ட கானுயிர் காப்பகங்களைக் கொண்டுள்ளது. அவற்றில்  மகாராஷ்டிராவில் 4, கர்நாடகாவில் 10, கேரளாவில் 20, தமிழகத்தில் 5 என கானுயிர் சரணாலயங்களும், தேசிய பூங்காக்களும் இம் மலைத்தொடர்ச்சி முழுதும் விரிந்துள்ளது.  இம் மலைத்தொடர் தனக்கே உரிய சுமார் 5000க்கும் மேற்பட்ட அபூர்வ தாவரங்கள், 134 வகையான பலூட்டிகள், 508 வகையான பறவை இனங்கள், 325 வகையான அரிய உயிரினங்கள் வாழும் பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவின் ஜீவாதாரமாக விளங்கும் கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, குந்தியா போன்ற நதிகளின் பிறப்பிடமாகவும் இது உள்ளது.
அறிஞர் மாதவ் காட்கில் தனது அறிக்கையில்  குறிபிடுவது போன்று, அகஸ்திய மலையினைத் தலையாகவும், நீலகிரியினையும், ஆனைமலையினையும் மார்புகளாகவும், கனரா முதல் கோவா வரை நீண்ட உதடுகளையும் கொண்டும், வடக்கு சகயதிரியினை கால்களாகவும் கொண்ட பெண்  இம் மலைத்தொடர். ஒரு காலத்தில் பளபளக்கும் பச்சை உடையுடன் செழுத்திருந்த அவள் உடைகள் சுயநல சக்திகளால் கிழித்தெறியப்பட்டு அவமரியாதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணாக இன்று காட்சி தருகின்றாள்.
கோவா மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டும் தொழிலில் சுமார் ரூபாய் 6,500 கோடி மதிப்புள்ள வளத்தினைத் திருடியுள்ளதாக அரசு கூறிய போதிலும் இது குறித்து ஆய்வு செய்த ஷா கமிசன் இந்த திருட்டு ரூபாய் 35,000 கோடி என மதிப்பிட்டது. மகாராஷ்ட்ராவின் ரத்தனகிரி மாவட்டத்தில் லோட்-பரசுராம் தொழிற் பேட்டையின் ரசாயன தொழிற்சாலைக் கழிவினால் போஜ்ரா அணை நீர் செந்நிறமாகிப்போனது. கேத் நகரின் குடிநீர் ஆதாரமான அது, இன்று குடிக்க அருக‌தையற்றதாக மாறியுள்ளது. இதனால்  சுமார் 20,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களின் வாழ்வாதரத்தை இழந்தார்கள். கேராளாவின் பாலக்காட்டில் பிளாச்சிமடாவில் கோக கோலா கம்பெனியால் உண்டான நிலத்தடி நீர் பாதிப்புக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டினர். அப் பகுதி பஞ்சாயத்து கொக்ககோலா ஆலையை மூட முடிவு தீர்மாணம் நிறைவேற்றியது. அந்த தீர்மான‌த்தை எதிர்த்து கம்பெனி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் பஞ்சாயத்துக்கு அந்த அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. அதிகார வர்க்கம் மற்றும் ஆட்சியாலர்களின் அக்கரையின்மை மற்றும் ஊழல் காரணமாக சட்டங்களுக்கும் விதிகளுக்கு புறம்பாகவும்   மேற்குத்தொடர்ச்சி மலையில்  ஏராளமான சுரங்க பணிகள் நடைபெற அனுமதிக்கப்பட்டது. இது பெரும் இயற்கை சீர்கேட்டுக்கு வித்திட்ட நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையினைப் பாதுகாக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவியல் அறிஞர் மாதவ் காட்கில் தலைமையில் 13 நபர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.இதற்கு மேற்குத்தொடர்ச்சி மலை சூழல் அறிஞர்கள் குழு(Western Ghats Ecology Expert Panel) என அழைக்கப்பட்டது.    இக் குழுவின் முக்கிய நோக்கமானது  மேற்குத்தொடர்ச்சி மலை சூழல்  குறித்து முழு தகவல்களை ஒருங்கிணைப்பது,இம் மலையில் உள்ள சூழல் பாதுகாக்கப்படவேண்டிய ,அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் (Ecologically Sensitive Zone) பகுதிகளை வரையறுப்பது, ஆட்சியாளர்கள் ,மக்கள் பிரதிநிதிகள், சூழல்வாதிகள் மற்றும் கிராம சபையின் ஒத்துழைப்புடன் இம் மலையினை காக்க வழி வகுப்பது ஆகியவையாக இருந்தது.  இக் குழு மேற்குத் தொடர்ச்சி மலையினை ஒட்டி பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டு, 2011 ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையினை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்திடம் சமர்பித்தது. ஆனால் மத்திய அமைச்சரகம் அந்த அறிக்கையினை வெளியிடவில்லை. இதன் தொடர்ச்சியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணா என்ற ஒருவரால்  பொது நல வழக்கு  தாக்கல் செய்யப்பட்டு ஒரு போராட்டத்திற்கு பின்  டெல்லி உயர்நீதிமன்ற உத்திரவினை அடுத்து இந்த  அறிக்கையானது மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியானது.
மேற்குத்தொடர்ச்சி மலை சூழல் அறிஞர்கள் குழு (WGEEP)அல்லது மாதவ் காட்கில் குழு அறிக்கை;
மாதவ் காட்கில் தலைமையிலான குழுவானது முழு மேற்குத்தொடர்ச்சி மலையினையும்
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் (Ecologically Sensitive Zone) கொண்ட பகுதிகளாக கருதியது. அதன்  சூழல் முக்கியத்துவம் கருதி மேற்குத்தொடர்ச்சி மலையினை மூன்று அதி நுட்ப சுற்றுச்சூழல் மண்டலங்களாக கருதியது. இதனை அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1, அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 2, அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 3. என பிரித்தது. மேற்குத்தொடர்ச்சி மலையில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும் மேலும் புதிய கோடை வாழ்விடங்கள் அமைப்பதற்கும் தடை செய்தது.  இம் மலைகளில் விவசாயம் சாராத செயல்களுக்கு நிலம் பயன்படுத்தப்படுவதற்கு தடை விதித்தது. ஆனால் மலைப்பகுதியில் உள்ள கிராம மக்களின் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப வசிப்பிட தேவைக்கு நிலம் எடுக்கும் செயல்களுக்கும் ,வன உரிமைச்சட்டம் 2006 கீழ் நிலம் பயன்படுத்தும் செயல்களுக்கு நிலம் எடுக்க அனுமதித்தது.
தண்னீர் மேலான்மை
தண்ணீர் மேலாண்மையினைப் பொருத்து  அடுத்த 20 ஆண்டுகளுக்குள் உள்ளாட்சி அளவில் திட்டமிட்டு நீர் பகிர்மானம் செய்து கொள்ளும் நிலையினை ஊக்கப்படுத்தவும்  தண்னீர் பகிர்மானங்களில் எழும் பிரச்சனைகளை எளிய முறையில் தீர்த்துக்கொழ்ள்ளும் வழி வகைகளை  உருவாக்க வேண்டியது. மலைப்பகுதிகளில் பாரம்பரிய  முறையில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் முறையில் கசிவு நீர்  கிணறுகள் சுரங்ககள் அமைப்பது.மலைச் சரிவுகளில் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்க  உரிய நடவடிக்கை எடுப்பது. மலைப்பகுதி மக்கள் அப் பகுதியில் நடைபெறும் மணல் அள்ளும் மையங்களை சமூக தனிக்கை செய்யவும் மேலும்   அதன் அடிப்படையில் மணல் எடுக்கும் செயல்களுக்கு  விடுமுறை வழங்கி விடுவது என்றும், மக்கள் இயற்கையினை பாதுகாக்க இணைந்து செயல்படவும்   வழியுறுத்தியது.  சுரங்கப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் அந்த கம்பனிகள் மற்றும் முகாமைகள் தண்ணீர் ஆதாராங்களை பாதுகாத்திட சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் என்றது. தேயிலை ,காப்பி மற்றும் ஏலக்காய் பெருந்தோட்ட மலைச்சரிவுகளில் உள்ள  பகுதிகளில் உள்ள எஞ்சிய பகுதிகளில்  நீரோடைகளை உயிர்ப்பிபது மேலும் வன செயல்பாடுகளை உள்ளாட்சி நிர்வாகம், வனத்துறை மற்றும் தோட்ட அதிபர்களின் ஒத்துழைப்புடன்  உருவாக்க வேண்டியது.நீர் பிடிப்பு பகுதிகளில்  உள்ள நீர் மின் திட்டங்கள், நீர் பாசன திட்டங்களின்  வாழ் நாட்களை நீட்டிக்க நடவடிக்கை. மக்கள் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அறிவியல் செயல்பாடுகள் வழி தண்னீரை பாதுகாப்பது மேலும் நதியினை சார்ந்து வாழும் மக்களின் நீர் பகிர்வுக்கு உத்திரவாதப்படுத்துவது.தண்னீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய தொழில் நுட்ப வடிவில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்படுத்த கூறியது.மேற்குத்தொடர்ச்சி மலையில் நதிகளின் இயற்கையான போக்கை  தடுத்து வேறு பகுதிககு  திசை திருப்புவதை தடை செய்தது.  நதி நீர் திட்டங்களில் அரசின்  உரிய பல்வேறு துறையினர்  ஒத்துழைப்பை பெற்று நிறைவேற்றுவது அல்லது அவர்களுக்கு தனித்தனி பொருப்பு வழங்குவது. மலைப்பகுதிகளில் உள்ள  காலாவதியாகி விட்ட அணைக்கட்டுக்களையும்,தரமற்ற அணைகளையும் முழுதாக கைவிட்டுவிடுவது என்றும் பரிந்துரைத்தது. 
விவசாயம்
இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்துவது.அதனை ஊக்கப்படுத்த விவசாய்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது,பாரம்பரிய விவசாய முறையினை  ஆதரிப்பது.மரபினி மாற்றுப்பயிர்களை முற்றிலுமாக தடை செய்வது. மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1 ல் எல்லா இரசாயன பூச்சி கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் மற்றும் இரசாயன உரங்களையும் ஐந்து ஆண்டுகளுக்குள் முற்றிலும் தடை செய்துவிடுவது. இதனை அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 2 ல் எட்டு ஆண்டுகளுக்குள் நடைமுறைக்கு கொண்டு வருவது.அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 3 ல் இதை பத்து ஆண்டுகளுக்குள் நடைமுறைக்கு கொண்டுவந்து விடுவது. 
மீன் வளம்
மீன்களை வெடி வைத்து பிடிப்பது பிடிப்பது தடை விதித்தது.மீனவர்கள் பாரம்பரிய மிக்க மீன் இனங்களை உற்பத்தி செய்ய ஊக்கத்ததொகை வழங்க பரிந்துரைத்தது.அது போன்ற மீன்களை மீன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இயற்கை மேலான்மை குழு வழி  விற்பனை செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்துவது என பரிந்துரைத்தது.  
வன உரிமைச்சட்ட பலன்கள்
வன உரிமைச்சட்டத்தின் படி பழங்குடி மக்கள் மற்றும் மூன்று தலைமுறைக்கு மேல் வனம் சார்ந்து வாழும் பழங்குடி அல்லாத  மக்களின் நலனை பாதுகாப்பது. தற்போது நடைமுறையில் உள்ள எல்லா வன மேலான்மை திட்டங்களையும் வன உரிமைச்சட்டம் படி மாற்றுவது.மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1ல் யூக்லிபிட்டஸ் மரங்கள் உள்ளிட்ட ஒற்றை தாவர வகைகளை  தடை செய்வது, மருந்து தாவரங்களை சேகரிப்பதை முறைப்படுத்துவது. வன விலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதிலிருந்து விவசாயிகளை காக்க உரிய இழப்பீடு வழங்க பரிந்துரை வழங்கியது.
சுரங்கங்களுக்கு தடை
மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1 ல் சுரங்க தொழில் தடை செய்யப்படுகின்றது.புதிய சுரங்க அனுமதி கிடையாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுரங்கங்களை 2016 க்குள் முற்றிலும்  தடை செய்வது .சட்ட விரோத சுரங்கங்கள் உடனடியாக தடை செய்யப்படுகின்றன. பிற அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 2  ல் புதிய சுரங்கங்களுக்கு அனுமதி கிடையாது. நடைமுறையில் உள்ள சுரங்கங்கள் தீவிரமாக கண்காணிப்பது.  அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 3ல் உரிய கவனத்துடன் புதிய சுரங்கங்களை  அமைக்க அனுமதிப்பது. உள்ள சுரங்கங்கள்  முறையே கண்காணிப்பது,
தொழிற்சாலைகள்
சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்  தன்மை வாய்ந்த தொழிற்சாலைகலை வகைப்படுத்த பய்ன்படுத்தும் சிகப்பு, ஆரஞ்சு.நீலம், பச்சை வர்ணங்களில் சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை தொழிற்சாலைகள் மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1மற்றும் 2 ல் நிறுவ தடை விதிக்க பரிந்துரைத்தது. தற்போது இப் பகுதியில் உள்ள இவ் வகை தொழிற்சாலைகள் 2016 க்குள் நிறுத்திவிட முடிவு செய்தது. அதே சமய்ம்  சூழல் பாதிப்பு குறைந்த நீலம் ,பச்சை வர்ண வகைப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் உரிய கண்காணிப்புக்கு பின் அனுமதிக்கலாம் என முடிவு செய்தது.
மின் நிலையங்கள்
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1 மற்றும் 2 ல் புதிய  பெரும் அணைக்கட்டு மின் நிலையங்களுக்கு தடை விதிக்கப்படுகின்றது.மேற்கண்ட சூழல் பகுதியில்  கேராளவின் சாலக்குடி மின்சாரத்திட்டம் மற்றும் கர்நாடகாவின் குண்டியா நீர் மின்  திட்டம் வருவதால் இத் திட்டங்களுக்கு அனுமதி வழங்க  மறுத்துவிட்டது.அதே போன்று இப் பகுதியில் பெரும் காற்றாலைகள் ,சூரிய சக்தி திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுகின்றது .சிறு மின் திட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றது. மேலும் மின்சாரத் திட்டங்கள் சிறு அளவில் ஆங்காங்கே நிறைவேற்ற ஊக்கப்படுத்த பரிந்துரைத்தது.
போக்குவரத்து
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1ல் புதிய இரயில் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ,விரைவுச்சாலைகள் அமைக்க தடை செய்கிறது. அதே சமயம் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 2 மற்றும் 3  ஆகிய இடங்களில் தேவையினை கருதியும், சூழல் பாதிப்பை கனக்கில் கொண்டும்,சமூக தனிக்கைக்கு பின்  சாலைகள், இரயில் பாதைகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்தது.
 சூழல் சுற்றுலா
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1ல் எல்லாவகை சுற்றுலாக்களும் தடை செய்யப்படுகின்றது.சுற்றுலா குறித்து ஏற்கனவே சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழி முறைகள் கடுமையாக பின் பற்றப்படவேண்டியது.அதே சமயம் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 2 மற்றும் 3 ல் உரிய கண்காணிப்புக்கும், சமூக தனிக்கைக்கு பின் அனுமதி வழங்கியது.
கழிவுகள் மேலாண்மை


பிளாஸ்டிக்  மலையின் எல்லா பகுதிகளிலும் தடை செய்யப்படுகிறது. பிற திடக் கழிவுகளை உரிய கவனத்துடன் அப்புறப்படுத்த வேண்டும். இதற்காக உக்கத்தொகை வழங்க வேண்டும்.  ஆபத்தான கழிவுகளை உற்பத்தி செய்யும் செயல்பாடுகளுக்கு தடை விதிப்பது.
சூழல் கல்வி
 மலைப்பகுதி குழந்தைகளையும் ,இளைஞர்களையும் சூழல் காக்க ஊக்கப்படுத்தும் கல்வி அறிமுகப்படுத்த வேண்டும்.நதி உள்ள பகுதிகளில்  உள்ள பள்ளிகளில் "நதி மன்றங்கள்"உருவாக்கி சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பகுதி மக்கள் சூழலை கண்காணிக்கும் ஆற்றலை வளர்க்கும் கல்வியை வழங்கி, சூழல் காப்பு பணியில் மக்களின் பங்கேற்பயும் உத்திரவாதப்படுத்தப்படவேண்டும்.
சூழல் பாதிப்பு ஆய்வு
புதிய திட்டங்கள் எல்லாவற்றிக்கும் சூழல் பாதிப்பு குறித்த் சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் படி, உரிய நிபுணர்களைக்கொண்டு ஆய்வு நடத்திய பின்னரே அனுமதி வழங்க வேண்டும்.இந்த ஆய்வில் தன்னார்வ தொண்டு நிருவனங்கள் ,ஆய்வு நிருவனங்கள் மற்றும் பகுதி மக்கள் பங்கு அவசியம். புதிய திட்டங்க்ளுக்கு  கிராம சபை ஒப்புதல் அவசியம்.
தகவல் மேலான்மை
மேற்குத்தொடர்ச்சி மலை குறித்த உரிய அறிவியல்,  தொழில் நுட்ப தகவல்களை வெளிப்படையாக வழங்கும் அமைப்பு உருவாக்கப்படவேண்டும். மாணவர்கள் மற்றும் பகுதி பொது மக்கள் இணைந்து இதில் செயல் பட ஊக்கப்படுத்த வேண்டும். நதி நீர் குறித்த தரவுகள்,அனைகளின் நீர் அளவுகள் மற்றும் தண்ணீரில் உள்ள மீன் வகைகள் பற்றிய தகவல்கள். தண்னீரில் மற்றும் மண்னில்  உள்ள உப்புதன்மை குறித்து ம். நீர் பாசன நிலை குறித்தும் தகவல்கள் வழங்கும் மேலான்மை தேவை என வழியுறுத்தியது.
மேற்குத்தொடர்ச்சி மலை ஆணையம்
உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நாடு முழுவதம் மேற்குத்தொடர்ச்சி ஆணையம் அமைப்பது அதே போல உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மாநில அளவில் ஓர் ஆணையம் மற்றும் மாவட்ட அளவில் ஒரு ஆணையமும் ஏற்படுத்தவும் பரிந்துரை செய்தது.இந்த ஆனையங்கள்  மனித உரிமை ஆணையங்களை போல சுதந்திரமாக செயல் பட்டு மேற்குத்தொடர்ச்சி மலை சூழலை பாதுகாக்க முடியும் என பரிந்துரைத்தார்.
இந்த அறிக்கையினை 2011 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.இது முழுவதும் அரசியலாக மாற்றப்பட்டது. குறிப்பாக கேரளாவின் மலைப்பகுதி விவசாயிகள் என அறியப்பட்ட சிரியன் கிருஸ்துவர்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையும், ரியல் எஸ்டேட் அரசியலும் இப் பிரச்சனையினை ஊதி பெரியதாக்கியது. அரசியல் இயக்கங்கள் இந்த ஓட்டத்தில் அரசியல் ஆதாயத்தை  தக்கவைக்க மாதவ் காட்கில் அறிக்கையினை ஏற்க மறுத்தது.அறிக்கையின் முழு தரவுகளும் பொது மக்கள் முன் வைக்கப்படவில்லை. ஆறு மாநிலம் சார்ந்த பிரச்சனையான இது, அந்தந்த மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடக்கூட மத்திய, மாநில அரசுகள் முன் வரவில்லை. இந் நிலையில் கேரளா சட்டமன்றத்தில் ஏகமந்தாக கொண்டுவரப்பட்ட தீர்மாணம் மாதவ் காட்கில் தலைமையிலான அறிகையை முற்றிலும் நிராகரிப்பதாக  அமைந்தது. கர்நாடகத்திலும் அரசு இக் கமிட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. கமிட்டியின் அறிக்கை பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் வன உரிமைச்சட்டத்திற்கு முக்கியம் தருவதாக இருந்த போதும், பழங்குடி மக்கள் வனத்திலிருந்து வெளியேற்றப்படக்கூடும் என்ற கருத்தும் அதனால் அச்சமும் கட்டமைக்கப்பட்டது.வனத்துறையின் கடந்த கால அத்துமீறல்களும் மக்கள் விரோத செயல்பாடுகள் அவ்வாறு நட்க்க வாய்ப்புள்ளதாக கருத துணை நின்றது.இறுதியில் அரசியலாக மாற்றப்பட்டு எல்லோரும் கூத்தாடி கூத்தாடி  இக் கமிட்டியின் வழிகாட்டுதல்களை போட்டுடைத்தனர்.
அதன் பின் மேற்குத்தொடர்ச்சி மலை உயர் மட்ட பணிக்குழு (High level working group on western ghat) என்ற ஒரு குழுவை முன்னால் இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்  17.8.2012 அமைத்தது.இக் கமிட்டியின் முக்கிய நோக்கம் என்பது மேற்கு மலைதொடர்ச்சி மாநிலங்கள் மாதவ் காட்கில் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு வழங்கிய எதிர் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொண்டு மேற்குத்தொடர்ச்சி மலையினை பாதுகாக்க ஒரு செயல் திட்டத்தை முன் வழங்குவதாக இருந்தது.
கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கை
ஒட்டு மொத்த மேற்குத்தொடர்ச்சி மலையினையும் இயற்க்கை சூழல் மண்டலமாக கருத வேண்டியதில்லை. இம் மலையின் 40% மலைப்பகுதி மட்டுமே இயற்கை சூழல் பகுதிகலாக கருதலாம் . 60% பகுதிகள் சுமார் 5 கோடி மக்கள் வாழும் கலாச்சார சூழல் பகுதிகளாகும்.மேற் குறிப்பிட்ட 40% இயற்கை சூழல் பகுதியில் 37% மட்டுமே அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் ஆக கருத வேண்டும்.இப் பகுதியில் வளர்ச்சி திட்டங்கள் கட்டுப்படுத்தப்படவேண்டும்.மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இப் பகுதி குறித்த வரை படத்தை பொது மக்களுக்கு வெளிப்படையான அறிவிக்கவேண்டும். இப் பகுதியில் சூழலுக்கு தீங்கிழைக்கும் செயல்பாடுகள் தடுக்கப்படவேண்டும்.புதிய திட்டங்கள் உரிய சூழல் பாதிப்பு ஆய்வுக்கு பின் அனுமதிக்கவேண்டும். இப் பகுதியில் சுரங்கப்பணிகள் மற்றும் மணல் அள்ளுவது தடை செய்யப்படவேண்டும்.தற்போது அனுமதி பெற்று செயல்பட்டு வரும் சுரங்கங்கள் ஐந்து ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும்.
 இப் பகுதியில் அனல் மின்சார நிலையங்கள்  அனுமதிக்ககூடாது. ஆனால் நீர் மின்சார திட்டங்களுக்கு உரிய பரிசீலனைக்கு பின் அனுமதி வழங்கலாம். ஆற்றின் நீரோட்டத்தை 30% பாதிக்ககூடிய திட்டங்களுக்கு அனுமதி வழங்ககூடாது.புதிய திட்டங்கலுக்கு அனுமதி வழங்கும் சமயம் நதி மற்றும் வனத்திற்கு ஏற்படும் பாதிப்பு பரிசீலிக்கப்படவேண்டும்,
ஆறுகள் உள்ள பகுதியில் அனுமதிக்கப்படும் திட்டங்கள் ஆற்றிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தள்ளி இருப்பது அவசியம்.மேலும்  50% ஆற்றின் படுகையினை பாதிக்கின்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்ககூடாது.
 இப் பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின் திட்டங்களுக்கும் சூழல் பாதிப்பு அறிக்கை(Environment Impact Assessment ) கட்டாயம் பெற வேண்டும்.
சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிகப்பு  வகைப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்ககூடாது.  ஆனால் ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளில் உணவு  மற்றும் பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கலாம். எனினும் இவையும் சூழல் பாதிப்பு ஏற்படுத்தாதது என்பது உறுதி செய்யப்படவேண்டும்.
கட்டுமானப்பணிகள்  20,000 சதுர மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். நகரிய திட்டங்கள் பகுதி வளர்ச்சி திட்டங்கள் தடை செய்யவேண்டும். எல்லாவகை வளர்ச்சி திடங்களுக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2006 அறிவித்தது போல சூழல் பாதிப்பு ஆய்வு அவசியமானது.
வனப்பகுதியிலிருந்து நிலம் வேறு திட்டங்களுக்கு எடுக்கப்படும் போது  , அந்த  திட்டம் குறித்த முழு விபரங்களையும் ( அனுமதி கேட்டு விண்னப்பத்திலிருந்து  திட்டம் அனுமதிக்கப்படும் வரை  பல்வேறு கட்ட செயல்பாட்டு அணைத்து விபரமும்) மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இனையத்தில் வெளியிட்டு பொது வெளியில் திறந்த விவாதக்கு வழி வகுக்க வேண்டும்.
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பாதுகாப்பு செயல்களில் முடிவு எடுப்பதில்  தற்போது நடைமுறையில் உள்ள அதிகார அமைப்புக்களுடன் கூடுதலாக சூழல் தகவல்களை திரட்டுவதும் மேலும் இப் பகுதி வாழ் பொது மக்களை இச் செயல்பாடுகளை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ப்பதும் ,இப் பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பை உறுதி செய்வதும் அவசியம்.
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் அமைப்பட்ட பகுதியில் வரும் கிராமங்களின் கிராம சபைகள் திட்டங்களை(project) அனுமதிப்பதை முடிவு செய்யும் அதிகாரம் பெற்றதாக உள்ளது. ஒரு திட்டத்திற்கு முன் இக் கிராம சபை ஆட்சேபனை இல்லை என அனுமதித்தால் மட்டுமே திட்டப்பணி செயல்படுத்த முடியும். அதே போல வன உரிமைசட்டம்  உத்தரவாதப்படுத்தியுள்ளது போன்று திட்டங்களுக்கு முன்னரே கிராம சபை அனுமதி பெறுவதும் கட்டாயம் நடைமுறை படுத்தபடவேண்டும்.
மாநில அரசுகள் வன விலங்கு வலசைப்பாதை குறித்த திட்டங்கள் செயல்பாடுகளின் போது அப் பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் செய்யப்படுகின்றதா? என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
 வெறும் வன விலங்குகளின் வாழிடமாக  மட்டுமின்றி மக்கள் வாழும்  உயிர் சூழல் பகுதியான  இந்த மலையில் மாநில அரசுகள் உடனடியாக சூழல் பாதுகாப்புக்கும் வளர்ச்சி பணிகளை கட்டுப்படுத்தவும்  ஒரு செயல்திட்டத்தை உருவாக்கவேண்டும். மலைகலையும் ,ஆறுகளையும், பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்கும் திடங்கள் அவசியமானது.
மாநில அரசுகள் மத்திய அரசிடம் மலையினை பாதுகாக்க கூடுதல் நிதி பெற பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இயற்கை வனத்தை  பாதுகாக்க போதிய கடன் மற்றும் நிதி உதவி அவசியம். இந்த நிதி  சூழல் பாதுகாப்புக்காக செலவிடப்படவேண்டும். மேலும் வன பொருள் சேகரிப்புக்கும், இயற்கையுடன் இணைந்த வாழ்வுக்கும் உதவவேண்டும். இதற்காக  13  வது நிதி கமிசன் நிதி ஒதுக்கவேண்டும். 14 வது  நிதி கமிசன்  வனத்தை பாதுகாக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி வழங்க முன் வரவேண்டும்.மேலும் நிதி நேரிடையாக அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி மக்களுக்கு சேர வழிவகை செய்யவேண்டும்.
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதியின் இயற்கை சூழல் சேவையின் பலன்களை  பெறும்  மேற்குத்தொடர்ச்சி மலையின் வேறு பகுதி பஞ்சாயத்துகள் , உள்ளாட்சி அமைப்புகள்  அதற்காக சூழ்ல்  சேவை கட்டனத்தை (Eco system service) வழங்க பரிந்துரைக்கின்றது.
திட்ட கமிசன் தனியே மேற்குத்தொடர்ச்சி மலை வளர்ச்சி  நிதி  என்ற ஒன்றை உருவாக்கி அந்த நிதி அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதியில் சூழல் மேம்பாட்டுக்காக பயன் படுத்தப்படவேண்டும்.
திட்ட கைசன் சூழல் பாதுகாக்கும் மாநிலத்திற்கு கூடுதல் நிதி உதவி வழங்குகின்றது.  மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதியில் அது போன்ற சூழல் நடவடிக்கைக்கு கூடுதல் தொகை (plus payment) நேரிடையாக கிராம சமூகத்திற்கு கிடைக்க வழி கானவேண்டும்.
12 ஐந்தாண்டு திட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டம்  மக்களின் ஒத்துழைப்புடன் சூழல் பாதுகாப்பு வடிவில் நடைமுறைபடுத்தப்படவேண்டும். அதற்காக நிதியானது ரூ 1000 கோடியாக உயர்த்தப்படவேண்டும். சிறப்பு திட்ட செயல்பாடுகளுக்கு மத்திய அரசு 90% பனமும் மாநில அரசு 10% வழங்குவது தொடர வேண்டும்.இதற்க்காக இக் குழுக்களில் மாநில முதல்வர்கள் பங்கு பெற வேண்டும்.மேலும்  மாநில அளவில் மேற்குத்தொடர்ச்சி மலை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மாநில சுற்றுச்சூழல் நிர்வாகம், மாநில வனத்துறை மற்றும் மத்திய வனத்துறை மண்டல அலுவலகங்கள் இணைந்து செயல்படவேண்டும்.
வன நிர்வாகம் என்பது  பகுதி மக்களை உள்ளடக்கியதாகவும் மக்கள் பயன் பெறும் அளவிலும்  இருக்கவேண்டும் .  தற்போது  மீது உள்ள கட்டுபாடுகள் மற்றும் தனியார் நிலங்களில் அல்லது சமூக வனக்காடுகளில்  அதனை பயிரிட உள்ள தடைகள் நீக்கப்படவேண்டும். வன உரிமைச்சட்டம் மக்களுக்கு சிறு வன மகசூல் பெற உரிமை வழங்கியுள்ளது. அதில் மூங்கிலும் அடக்கம் என்பதை உறுதி செய்கின்றது.எனவே வனம் சார்ந்த பொருளாதாரம் கட்டமைக்கப்படவேண்டும்.
 இயற்கை சார் விவசாயத்திற்கு உதவி வழங்கப்படவேண்டும். மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையில்விலையும் பொருட்களுக்கென தனி முத்திரை (brand) உருவாக்கி, உலக சந்தையில் இப் பொருள்களுக்கென தனி இடம் பெற்றுத்தரவேண்டும்.
இப் பகுதியில் சுற்றுலா செயல்பாடுகளைப்பொருத்து சூழல் பாதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இப் பகுதியில் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் சுற்றுலா நிர்வாகம் அமைய வேண்டும். சுற்றுல கட்டுமானங்கள் என்பது இப் பகுதியில் உள்ள வளர்ச்சி கட்டுப்பாடுகளை மீறியதாக இருக்ககூடாது.
மேற்குத்தொடர்ச்சி மலை சூழல் பாதுகாப்புக்காக மாநில அரசுகள் மத்திய அரசுகளின் ஒத்துழைப்புடன் அறிவியல் தொழில்நுட்ப உதவிகள் மூலம் பயன் பெறும் வகையில் Decision Support and Monitoring Center for Western Ghats என்ற  அமைப்பை உருவாக்கி பயன் பெறவேண்டும்.மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையில் நிகழும் காலநிலை மாற்றங்கள் ஆராய உலக காலநில மாற்றம் மற்றும் பகுதிகளில் நிகழும் காலநிலை மாற்றங்கள் , மழை அளவு, வெப்ப அளவு , காட்டு  தீ பிடிக்கும் நிலை உரிய கவனத்துடன் கண்காணிக்கப்படவேண்டும். ஒரே பயிரினை நிலத்தில் பயிர் செய்வதற்கு பதில் பல பயிர்களை கலந்து பயிர் செய்வது மற்றும் நிலத்தடி நீரை உரியும் செடிகளை தவிர்ப்பது. தீ பரவலை தடுக்க முன் கூட்டியே செயல்திட்டங்களை வகுப்பது போன்றவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
கேரளாவின் அதிரப்பள்ளி சாலக்குடி நீர் மின் திட்டத்தினை  உரிய சூழல்  கவன நடவடிக்கையுடன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று செயல்படுத்த அனுமதிக்கின்றது. கர்நாடகாவின் குண்டியா நீர்மின் திட்ட பகுதியில் மீண்டும் சூழல் பாதிப்பு குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு  அதன் பின் செயல்படுத்தவேண்டும். அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதியில்  நீர் மின் நிலையங்கள் கட்ட எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால் சூழல் பாதிப்பை கணக்கில் கொண்டு செயல்படவேண்டியது அவசியம்.கோவாவின் சுரங்கங்கள் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.  மகாராஷ்டிராவின் சித்திர துர்க் மற்றும் ரத்தினகிரி மாவட்ட சூழல் பாதிப்பு பிரச்சனையினை பொருத்து மேற்குத்தொடர்ச்சி மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் அமைந்துள்ள பகுதியில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  எல்லா திட்டங்களுக்கும் சூழல் பாதுகாப்பு அனுமதி அவசியம்.மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதனை கண்காணிக்கவேண்டும்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த பரிந்துரைகளை சட்டபூர்வமாக notify  வெளியிட வேண்டும்.மாநில அரசுகள் இப் பரிந்துரைகளை நிறைவேற்ற உரிய நடைமுறைப்படுத்தும் துறை மற்றும் அதிகாரிகளை நியமிக்கவேண்டும். திட்டக்குழு ,நிதி கைசன் மற்றும் அமைச்சகங்கள் மேற்க்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்புக்காக  உரிய நிதி ஒதுக்கவேண்டும் என்பதே கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளாகும்.. 
அரசியலாக்கப்பட்ட பரிந்துரைகள்
இப் பரிந்துரைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொள்கையளவில் 19.10.2013 ல் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்தது.  சுற்றுச்சூழல் அமைச்சகம்  சூழல் மண்டல பகுதியில் புதிய சுரங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. இந்த அறிக்கை குறித்து மாநில அரசுகள்  கருத்து கூறவும் மற்றும்  பொது அரங்கில் விவாதிக்க உள்ளதாகவும் கூறியது.முன்பு மாதவ் காட்கில் அறிக்கையினை எதிர்த்து அதனை ரத்து செய்தால் கஸ்தூரி ரங்கன் அறிக்கையினை ஏற்பதாக அறிவித்த கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  திரும்பவும் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகலையும் எதிர்த்து பந்த் நடத்தியது. இடுக்கி மாவட்டத்தில் கத்தோலிக்க தேவாலயம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டது. கேரலா அரசு இப் பரிந்துரைகளை  ஆய்வு செய்ய மூவர் கொண்ட குழுவை அமைத்தார். கோவா மாநில அரசும் கேரளாவை தொடர்ந்து  குழு பரிந்துரைகளை நிராகரித்தது. இப் பின்னனியில் 20.12.2013 தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மாநில அரசுகளின் உரிய ஒப்புதல் பெற்றே சூழல் மண்டல் எல்லைகள் நிர்ணயிக்கப்படும் என்றும் அதன் பின்பு மீண்டும் அமைச்சகம் அறிவிக்கும் என்றும் கூறியது.பத்திரிக்கையில் கால வரையரை இன்றி பரிந்துரை நிருத்தி வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.தமிழகத்தின் ஊட்டி ,கொடைக்கானல் விடுபட்டதன் மர்மம் குறித்து கேராளாவில் அரசியல் சர்சை கிளப்பபட்டது. 
ஏற்கனவே சூழல் மண்டலப்பகுதியில் நடைமுறையில் உள்ளசூழல் பாதிப்பு திட்டங்கள் பற்றி குறிப்பிட்டு கூறவில்லை. பெருந்தோட்டங்களுக்கு இதுஎந்த பெரிய தடைகளையும் வழங்கவில்லை என விமர்சிக்கப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலையின் 63% பகுதியினை சூழல் பாதிக்கும் சுரங்க்ம் உள்ளிட்ட பணிகளுக்கும் அனுமதிததும்,  7 % மட்டுமே அடர் வனமாக உள்ள வன பகுதி உள்ளநிலையில், பிற செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதித்தும் மேலும் கட்டுமானப்பணிகள் 20,000 m2 (2, 15,000 sq feet)  வரை அனுமதிததன் மூலம்  மேற்குத்டொடர்ச்சி மலையில் பெரும் கட்டிடங்கள் உருவாகி மலை பாதிக்கப்படுவதும் விமர்சனத்திற்கு உரியது. மேலும் ரயில்வே தடங்களுக்கு நிலம் எடுக்கப்படுவதற்கு இக் குழு குறிபாக  தடை விதிக்கவில்லை என்வும் சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பினர். மொத்தத்தில் கஸ்துரிரங்கன் அறிக்கையானது மாதவ்காட்கில் குழு பரிந்துரையின் ஒப்பிடும்போது ஒரு நீர்த்த வடிவம்,ஆனால் அதைகூட நடைமுறைப்படுத்தும் வாய்பு இல்லை என்பதையும். சுரங்க முதலாளிகள் ,பணக்காரர்கள், நில ஆக்கிரமிப்பு ரியல் எஸ்டேட் சக்திகள் தங்களுக்கு சாதகமாக, மேற்குத்தொடர்ச்சி மலையினை காக்க எடுக்கும் எல்லா நடவடிக்கைகலையும் தடுக்கும் வ்ல்லமை வாய்ந்தவர்கள் என்பதையே தற்போதைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றது. இந்த பரிந்துரையினையாவது நிறைவேற்ற குரல் கொடுப்பது சனநாயக சக்திகளின் கடமை.
மேற்குத்தொடர்ச்சி மலை வெறும் சுழல் மண்டலம் மட்டுமல்ல ,அதன் நதிகளும்  ,அது தரும் மழையும் ,காற்றும் ,சூழலும்  நாடும் சமூகம் அமைதியாக இயங்க உதவுகிறது. மக்களின் வாழ்வாதாரத்தின் மையமாகவும் உள்ளது.மேற்குத்தொடர்ச்சி மலை இரக்கமற்ற சுரண்டல்வாதிகளின் அவர்களின் கம்பெனிகளின் சூழல் சூரையாடலால்  அதன் இயக்கம் பாதிக்கப்படும்போது நாட்டின் பொது ஒழுங்கும், அமைதியும்  குலைந்துவிடும் என்ற எச்சரிக்கை ஆட்சியாளர்களுக்கு தேவை. அந்த பாதிப்பு ஈடு செய்ய முடியாத இழப்புக்கு இட்டுச்சென்று விடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக