(ச.பாலமுருகன்)
.
கடந்த 1.10.2004 ல் ஈரோட்டில் எனது சோளகர் தொட்டி நாவலை வெளியிட்டேன்.ஏறக்குறைய 9 ஆண்டுகள் முடிந்த நிலையில் அந்த நாவல் அனுபவங்களை ,அதன் கதை மாந்தர்களை ,நாவலின் களத்தை இது போன்ற நிகழ்வுகள் அல்லது வீரப்பன் வழக்கில் ,சமீபத்தில் மரணதண்டனை கைதிகளாக கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ள மீசை மாதியன், பிலவேந்தரன்,சைமன், ஞானப்பிரகாசம் ஆகியோர் குறித்த விவாத்ங்களில் திரும்பத்திரும்ப தீராத ஒரு கதை களத்தில் நின்று பேச வேண்டியதாக உள்ளது.
நாவல் படைப்பு அனுபவம்
எனது நாவல் முயற்சி என்பது என் நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டதை போல மலைகளை விட கனமானதும், பாறைகளை விட கடுமையானதும், இருளை விட கருமையானதுமான ஒரு கதை வெளியில் பயணம் செய்த என்க்கு அதிலிருந்து வெளியே ஓடி வந்து விட நிணைத்ததன் முதல் படியாக என்னைப்போல சிலருக்கு மட்டும் அறிந்திருந்த அந்த கதையினை உங்களுடன் பேச வேண்டும் என்பதுதான். வாசகர்கள் சுமைதாங்கி கற்களாக நிற்பார்கள் என நம்பினேன். அனால் ஒரு படைப்பு என்பச்து வெறும் கொடூரங்கள்,சோகங்கள்,நம்ப முடியாத அழிவுகள் என்பவற்றின் ஒன்றின் மூலம் மட்டும் இட்டு நிரப்பப்பட முடியாதவை. அவைகள் மட்டுமே படைப்புகளாக முகிழ்வதில்லை. நிச்சயம் அவை துக்க செய்திகள் அல்லது அவற்றை நிணைக்கும் போது பாதிப்பினை ஏற்படுத்துபவை என நின்று விடுபவை. இலக்கியங்கள் அதனை தாண்டியது.உயிரோட்டமான காலம் கடந்து கதை சொல்லியின் உயிர்ப்பு அதனுள் ஓட வேண்டும்.இதற்கு ஒரு பரந்த வாசிப்பும் ,கதையின் களம் எந்த நோக்கில் காண வேண்டும் என்ற பார்வையும்(views) முக்கியமானது. பார்வைகள் புணைவுகளின் பிரசவத்தினை தலைகீழாக மாற்றக்கூடியவை.படைப்பாளியின் அரசியல் பார்வைகளுக்கு உந்து சக்தியினை வழங்கக்கூடியது.
துவக்கத்தில் அத்துமீறல்களின் கொடூரங்கள்,அவலங்கள் பிரமாண்டமானதாய் நின்றாலும் எனது கதை களம் ஊடான ஒரு தொடர் பயணம் ,வாசிப்பு,உலக் இலக்கியங்களின்எல்லா கூறுகள் கொண்டதாக பழங்குடிமக்களின் வாழ்வியல் இருந்ததை உணர முடிந்தது.இக் கதை கள மக்களின் மீதான காவல்துறை வன்முறை என்பது 1993 ஆண்டுகளில் கர்நாடக , தமிழக கூட்டு அதிரடிப்படை (STF) பின் அல்லது அதற்க்கு சற்று காலம் முன் வீரப்பனின் வருகை ஒட்டிய சூழலில் துவங்கியதாக இருக்கலாம். ஆனால் பழங்குடி மக்களிடையே ஒரு நீண்ட தொடர்பை ஏற்படுத்திக்கொண்டவதன் அடிப்படையில் அந்த வனங்களில், நிலங்களில் , மலைகளில் இடிவிடாது நீடித்து ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு பெரும் சோகத்தை என்னால் உணர முடிந்தது.அது அம் மக்களை தன் சொந்த மண்ணிலிருந்து விரட்டும் சோகம். அச் சோகம் சோகங்களின் தாய். அந்த துக்கம் அது எழுப்பும் அவலத்தின் சப்தம் எல்லைகளை கடந்து, மொழிகளைக்கடந்து எழுவது. பொது தன்மை வாய்ந்தது, அது தாய் மண்ணிலிருந்து விரட்டப்படும் அகதியம் எழுப்பும் அவலத்தின் சப்தம். எனது சோளகர் தொட்டி நாவல் இதிலிருந்தே வடிவம் பெற்றது. உலகு தழுவிய ஓர் அவலத்தின் குரலை ஒரு சிறிய மலைகிராமமான சோளகர் தொட்டியில் பேசினேன். எனது கதை மாந்தர்கள் எல்லைகளை தாண்டியவர்கள். அணுவைப்போல சிறியவர்கள்.
பழங்குடிகளின் நிலை
நாட்கள் தோறும் பழங்குடிகளை வெளியேற்றும் அரசியல் நம்மைச்சுற்றி நிகழ்ந்து வருகின்றது. நாடு விடுதலை அடைந்த பின் வளர்ச்சிக்காக வெளியேற்றப்பட்டவர்களில் 40 % மக்கள் பழங்குடி மக்கள். வெளியேற்றப்பட்ட மக்கள் திரளில் பழங்குடிகளின் எண்ணிக்கையே அதிகம். நாடு விடுதலைக்கு முன் ஆங்கிலேயர்கள் வனங்களை வனிகத்திற்கான இடங்களாக பார்த்தனர். பழங்குடி மக்களின் உரிமைகளை கட்டுப்படுத்த முதல் முறையாக வனச்சட்டம் கொண்டு வந்தனர். நில வரி, பழங்குடியில்லாதார் பழங்குடிப்பகுதியில் குடியேற்றுதல், பண பரிமாற்றம் அதனால் பழங்குடி மக்கள் கந்து வட்டிக்காரர்களால் சுரண்டப்படல் என நிலை உருவானது. பழங்குடிகளின் உழைப்பு விற்பனை பண்டமாக மாறியது. ரயில் பாதை அமைக்க ,ரோடு போட, சுரங்கம் தோண்ட என இவர்கள் மீதான சுரண்டல் துவங்கியது. விடுதலைக்கு பின்னும் பழங்குடி மக்களின் மீது காலணி ஆதிக்க சுரண்டல்களை விட அதிகம் சுரண்டல் துவங்கியது.
ஒவ்வொறு முறையும் பாராளுமன்றத்தில் வனம் சம்மந்தமான சட்டம் வரும் போதும் அது பழங்குடி மக்களை வெளியேற்றும் ஏதேனும் வடிவத்தை கொண்டிருந்தது, வன விலச்ங்கு காப்பகம் என்ற பெயரிலோஅல்லது வளர்ச்சி திட்டம் என்ற பெயரிலோ அது தொடர்ந்தது. கடந்த 2002 ஆண்டு மச்த்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது ஒரு வனத்தில் வாழும் பழங்குடி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து அவர்களை வெளியேற்ற மாநில அரசுகளுக்கு உத்திரவிட்டது. அசாம் மாநிலத்தில் மட்டும் இவ் உத்திரவி அடிப்படையில் 40000 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். மக்களின் பெரும் போராட்டத்திற்கு பின் வன உரிமைச்சட்டம் 2006 கொண்டு வரப்பட்டது. இச் சட்டத்தின் முகப்புரையில் "இது காலம் வரை பழங்குடி மக்களுக்கு வரலாற்று அநீதியை அரசு செய்ததாக" அரசு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தது. ஆனாலும் இச் சட்டம் நடைமுறைப்படுத்த தமிழகத்தில் இயலவில்லை. பெரும் சுரண்டலுக்கு எதிராக தீவிர இடது சாரிய அரசியல் பக்கம் பழங்குடிகள் நிருத்தப்பட்டனர். மத்திய இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் அரச வன்முறையினை எதிர்கொள்ள வேண்டி வந்தது.அவர்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்படுகின்றனர்.
அரசாங்ககள்ஏதேனும் சலுகை கொடுத்து இம் மக்களை சனாளித்து விடலாம் என நினைக்கின்றது. இம் மக்களுக்கு உரிமை உள்ளது என்பதையோ ,வனத்தினையும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்களைத்தாங்களே ஆள இம் மக்கள் உரிமை படைத்தவர்கள் என்பதை அதிகார வர்க்கம் ஏற்க மறுக்கின்றது.
தமிழகத்தில் பழங்குடி புறக்கணிப்பு
வனத்துறையின் அனுமதியுடனேயே அனைத்து
நடவடிக்கைகளும் இங்கு அனுமதிக்கப்பட்டது. இப் பகுதிகளிலிருந்து மக்களை
வெளியேற்றவேண்டும் என வனத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.
இந்த வனத்துறையின் நடவடிக்கைக்கு வெகுசன
ஊடகங்களில் இயற்கை, சுற்றுச்சூழல், வன உயிர்ச் சுழல் என பல்வேறு பெயர்கள்
வழங்கப்பட்டது. தமிழகம் போல இந்தியாவின் பல பகுதிகளில் அமைக்கப்பட்ட
புலிகள் காப்பகத்திற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் பல முதலாளிய
நிறுவனங்கள் நிதி வழங்கியது, NDTV போன்ற ஊடகங்கள் அதனை இயக்கமாக
மாற்றிக்காட்டியது. வழக்கம் போல நடிகர், நடிகையர் இதில் பங்குகொண்டனர்.
நமது பொதுப் புத்தியில் புலிகள் மீது கருணை பிறப்பிக்கும் கருத்தரிப்பு
நிகழ்ந்தேறியது.
மறுபுறம் வனத்திலிருந்து பழங்குடி மக்களை
வெளியேற்றும் நிகழ்வு துவங்கியது. ஒரு புறம் வன்முறை; மறுபுறம் ஒரு
ஏக்கருக்கு பத்து லட்சம் வரை தருகின்றோம் வனப்பகுதிகளிருந்து வெளியேறுங்கள்
என ஆசைவார்த்தைகள் கூறப்பட்டது. மேலும் மறைமுகமாக பழங்குடிகளின்
நிலங்களுக்கு பட்டா மறுப்பு, வனத்துறை தடை, பள்ளி உள்ளிட்ட வசதிகள்,
சாலைகள் கட்ட மறுப்பு என வனத்துறையின் தடைகள் தொடர்ந்தன. மாநில அரசுகள்
அதிகாரம் இங்கு செயலிழந்து போனதாகவே வனப்பகுதி மக்கள் கருதினர்.
வனத்துறையின் அதிகாரம் ஒரு பக்கம்
பெருகியது. பல சட்டங்கள் வனத்துறையினரை வனப்பகுதி முடியரசர்கள் போல
மாற்றியது. மக்களைக் கைது செய்யும் அதிகாரம், எல்லாவற்றையும் தடை செய்யும்
அதிகாரம், தன்னால் கைது செய்யப்பட்டவனே தன்னை நிரபராதியென
நிரூபித்துக்கொள்ளும் அளவு அதிகாரம் வனத்துறை வசம் குவிந்தது. ஆனால்
வனப்பகுதிகளின் எண்ணிக்கை சுருங்கியது. வன மாப்பியாக்கள் பெருகினர்.
வனப்பகுதிகளில் சுரங்கம் தோண்ட அனுமதி, மரம் வெட்ட அனுமதி என முரண்பாடு
அதிகரித்தது. பழங்குடிகள் தங்களின் வாழ்வுரிமைக்காக போராடத் துவங்கினர்.
வனப்பகுதிகளில் செங்கொடிகள் உயர்ந்து பறக்கத்துவங்கின. அரச அரச வன்முறை
கோரத்தாண்டவம் ஆடும் நிலை உருவானது.
மக்கள் போராட்டத்தின் பலனாய் 2006 ஆண்டு
வன உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பழங்குடிகள் கைகளில் வனம் இருக்கும்
போதே வனம் வாழும் என இந்திய பாராளுமன்றம் ஒப்புக்கொண்டது. வனத்தின் அனைத்து
நடவடிக்கைகளுக்கும் வனப்பகுதி மக்களின், அவர்களின் கிராமசபை ஒப்புதல் தேவை
என சட்டம் கூறியது. பழங்குடி மற்றும் வனப்பகுதி மக்களுக்கு நில உடமையை
அங்கீகரித்தது. ஆனால் இந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் பல முட்டுக்கட்டைகள்
வழக்குகள் வடிவிலும், வனத்துறை அதிகார வர்க்கத்திடமிருந்தும் வந்தது.
வனத்துறை தனது அதிகாரம் மக்களிடம் சேர்வதை விரும்பவில்லை; இச்சட்டத்தினை
அலட்சியம் செய்யத் துவங்கியது. இந் நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில்
இச் சட்டம் நடைமுறை படுத்தப்படுவதற்கு எதிராக வனத்துறை சார்ந்த ஓய்வு பெற்ற
அதிகாரிகளின் தூண்டுகோலால் சிலர் வழக்கு தாக்கல் செய்தனர். இவ் வழக்கில்
உயர்நீதி மன்றம் இச் சட்டத்தின் கீழ் பழங்குடி மற்றும் வனத்தில் வாழும்
மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்கும் முன் தங்களின் ஆலோசனை பெற்று பட்டா
வழங்க உத்திரவிட்டது. ஆனால் அரசோ வன உரிமைச் சட்டம் 2006 ஐ நடைமுறைப்படுத்த
நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறி முற்றிலுமாக இச் சட்டத்தினை
தமிழகத்தில் செயல் படாமல் செய்துள்ளது. மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில்
உள்ள வழக்கினை தள்ளுபடி செய்ய எந்த சிறு முயற்சியினையும் எடுக்கவில்லை.
இந்தியாவிலேயே வன உரிமைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாத ஒரே மாநிலமாக தமிழகம்
உள்ளது.வனத்துறை அதிகாரவர்க்கத்தினர் பழங்குடி மக்கள் சனநாயகப்பூர்வமாக
வனம் சார்ந்த பகுதியில் நிர்வாக முடிவு எடுப்பதை விரும்பாத காரணத்தால்
தங்களின் அதிகார கட்டுபாட்டிலிருந்து ஒரு சனநாயக சூழல் வனப்பகுதியில்
உருவாகைவிடக்கூடாது என கருதுவதின் காரணமாகவும் இந்த நிலை நீடிக்கின்றது.
இதற்கிடையே தமிழகத்தில் மேற்கு மலை
தொடர்ச்சியில் புதிதாக சத்தியமங்கலம், மேகமலை பகுதிகளை புலிகள் சரணாலயம் என
அரசு அறிவிக்கும் முயற்சி நடந்து வருகின்றது. சத்தியமங்கலம்
மலைப்பகுதிகளில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளும் இதனை எதிர்த்து தீர்மானம்
நிறைவேற்றின; போராடத் துவங்கியுள்ளன.
இது ஒரு புறமிருக்க கடந்த 2012 ஜூலை 24
உச்ச நீதிமன்றம், புலிகள் பாதுகாப்பு ஆணையம் தாக்கல் செய்த வழக்கில்
புலிகள் வனப்பகுதியில் சுற்றுலாவை தடை செய்தது. மேலும் புலிகள்
சரணாலயப்பகுதிகளில் மையப்பகுதியைச் சுற்றியுள்ள தாங்குதளப்பகுதியான buffer
zone என்ற பகுதியினை அமைக்காத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் 3 வார
காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்றும் இல்லாவிடில் ரூ 50000 அபராதம் என
உத்திரவிட்டது.
இந்த வனத்தாங்குதளப்பகுதியை
உருவாக்குவதற்கு முன் அப்பகுதி மக்களின் ஒப்புதல், கிராம சபை மற்றும்
அறிவியல் பூர்வமான ஆய்வு அவசியம். மூன்று வார காலம் அதற்குப் போதாது என
அரசு கேட்பதற்கு பதில் அவசர அவசரமாக வனத்தின் புலிகள் சரணாலயப் பகுதிகளைச்
சுற்றி இந்த பகுதிகளை மூன்று இடங்களில் அறிவித்து விட்டது. இந்த
தாங்குதளப்பகுதியான (buffer zone) பகுதியில் எதைச் செய்யலாம், எதைச்
செய்யக்கூடாது என இன்று வரை அரசு எந்த சட்ட வரையறையும் விதிக்கவில்லை.
முழுக்க வனத்துறை அதிகார வர்க்கம் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுக்கு
மக்கள் கட்டுப்படவேண்டும்.
1) ஆனைமலை புலிகள் சரணாலயத்தின் வடக்கு,
கிழக்கு எல்லைகள் மற்றும் மன்னவனூர், பூம்பாறை, பழனி மலை, கொடைக்கானல்
மலையில் சில வருவாய் பட்டா பகுதி சேர்த்து மொத்தம் 521 சதுர கிலோ மீட்டர்
பகுதியும் தாங்கு தளப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புலிகள்
சரணாலயப்பகுதி என அறிவிக்கப்பட்ட 958 சதுர கிலோ மீட்டருடன் சேர்ந்து
மொத்தம் 1479 சதுர கிலோ மீட்டர் பொள்ளாட்சி வனக்காப்பாளர் கட்டுப்பாட்டில்
வந்து விட்டது.
2) முதுமலை வனப்பகுதியில் தென் மற்றும்
கிழக்கு பகுதி, நீலகிரி வடக்கு, கூடலூர் பகுதி(சிங்காரா,செங்கூர் பகுதி),
நீலகிரி தென் பகுதியான தெங்குமராட்டா பகுதி என 367 சதுர கிலோ மீட்டர் பகுதி
வனத் தாங்குதள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புலிகள் சரணாலயம்
321 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த தாங்குதளப்பகுதியுடன் சேர்த்து 688 சதுர
கீமீ வனக்காப்பாளரின் கட்டுபாட்டில் வந்துவிட்டது.
3) களக்காடு முண்டந்துறை பகுதியில்
கன்னியாகுமரி வனவிலங்கு பூங்கா பகுதி குற்றாலம் பகுதிகள் சேர்ந்து 706 சதுர
கீமீ பகுதி தாங்குதளப்பகுதியாக அறிவித்துள்ளது. ஏற்கனவே புலிகள் சரணாலயமாக
அறிவிக்கப்பட்ட பகுதி 895 சதுர கீமீ ஆக மொத்தம் 1601 சதுர கீமீ பகுதி
வனத்துறையின் முழு கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.
மேற்கண்ட பகுதிகளில் பல பஞ்சாயத்துகள்
வருகின்றது. இப் பஞ்சாயத்துக்களில் அரசு எந்த கருத்து கேட்பும்
நடத்தவில்லை. மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்குக் கூட வனத்துறை
எஜமானர்களின் தயவுக்காக இனி எதிர்நோக்கவேண்டும். ஆனால் மக்கள் மற்றும்
கிராம சபை ஒப்புதல், அறிஞர்களின் அறிவியல் பூர்வ ஆய்வு என பல செய்து இப்
பகுதிகளை வன தாங்குதளப்பகுதியாக அறிவித்ததாக அரசு ஆணை கூறுகின்றது. G O ms
199,200.201 forest and environment august 2012
புலிகளுக்காக கரிசனப்படும் அதிகார மையம்
பழங்குடி மற்றும் வனம் சார்ந்துவாழும் மக்களைப் பற்றி எந்த அக்கறையும்
காட்டவிலை. இந்தப் போக்கு வன உரிமைச்சட்டத்தில் கூறியுள்ள அடிப்படைக்
கருத்தான வனத்தினை பழங்குடிகளே ஆளும் நிலையினை உருவாக்குவதற்கு (forest
stewardship) எதிரானது. அரசியல் கட்சிகளுக்கு இது பற்றிய பார்வை சிறிது கூட
இல்லை என்றே சொல்லலாம். பழங்குடி மக்கள் புலிகளுக்கு எதிரானவர்கள் இல்லை.
காலம் காலமாய் வன விலங்குகளுடன் இரண்டறக் கலந்து வாழ்பவர்கள். வனப்பகுதி
மக்களை வனத்திலிருந்து அப்புறப்படுத்தவே அதிகார மையங்களுக்கு புலி சாக்கு
தேவைப்படுகின்றது. உண்மையில் நேர் எதிராய் நிறுத்தப்படும் புலியும் பாவம்,
பழங்குடி மக்களும் பாவம். புலிகள் அருகி வரும் உயிரினம் (endanger species)
என அங்கலாய்க்கும் அரசாங்க அதிகார வர்க்கம் பழங்குடிகளும் அவர்களின்
சமூகமும் இந்தப் பட்டியலில் உள்ளதை ஏனோ அறிய முயலாதவர்கள் போல
நடிக்கின்றனர்.
பழங்குடிமக்கள் மீதான அரச வன்முறை
சில மாநிலங்களிலிருந்த நக்சல்பாரி இயக்கச்
செயல்பாடு இன்று 250 மாவட்டங்கள், 23 மாநிலங்கள் என்று விரிவடைந்ததற்கு
காரணங்களைத் தேட வேண்டியது அவசியமானது. நமது அரசியலமைப்பின் முகப்புரை
இந்தியா ஒரு ஜனநாயக சோசலிச நாடு என்று பறை சாற்றுகிறது. நமது
அரசியலமைப்பின் நான்காவது அட்டவணை மாநிலங்கள், அரசுகள் கடைபிடிக்க வேண்டிய
வழிகாட்டு நெறிமுறைகளைச் சொல்கிறது. இயற்கை வளங்கள் பொது சமூகப்
பயன்பாட்டிற்கு என்றும், ஏழைகள், பணக்காரன் என்ற பாகுபாடு சமூகத்தில் மறைய
வாய்ப்புகளை, வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்துகிறது. நமது அரசியலமைப்பின்
ஐந்தாவது அட்டவணை பழங்குடி மக்களின் நிலங்களை அம்மக்களின் கவுன்சில்
அனுமதியின்றி பிற கம்பெனிகளோ, நபர்களோ அபகரிப்பதைத் தடை செய்கிறது. மேலும்
2005-ம் ஆண்டு இந்திய அரசு இயற்றிய வன உரிமைச் சட்டம் பழங்குடி மற்றும்
வனத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வுரிமையை அங்கீகரிக்கும் சட்ட வழி
வகைகளைக் கொண்டுள்ளது.
இவ்வகையான பல்வேறு சட்ட பாதுகாப்புகளும்
அதனை அரணாக நின்று காக்க நீதிமன்ற அமைப்புகளும் இருக்கும் சூழலில் ஏன்
நக்சல்பாரிகளின் மாவோயிசம் வளர்கிறது? ஏனெனில் நமது அரசியலமைப்பின்
உரிமைகளையும், நமது ஜனநாயக உயிர்ப்பையும், சட்டத்தின் ஆட்சியையும் நமது
ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம், நீதிமன்றங்கள், செல்வந்தர்களின் கூட்டு
செல்லரிக்கச் செய்து வீழ்த்தி தோல்வி பெறச் செய்த இடத்திலிருந்தே
மாவோயிஸ்டுகளுக்கான சிந்தனையும், ஆதரவும் வேர் விடுகின்றது. உலக மயமாக்கல்
என்ற பொருளாதார வன்முறை ஏழை, எளிய பழங்குடி மக்களின் மீது திணிக்கப்பட்ட
சமயம் நமது பாராளுமன்றங்கள், நிர்வாகத்துறை, நீதித்துறையின் செயல்பாடுகள்
முழுவதும் ஜனநாயக சோசலிசம் என்ற அடிப்படையிலிருந்து முற்றிலும் மாறி
முதலாளித்துவ சேவை என்ற நிலைக்கு சென்று விட்டது. மத்திய இந்தியாவில்
பழங்குடிகளை ஆயுதம் தூக்கச் செய்ததில் மாவோயிஸ்டுகளின் பங்கை விட
ஜனநாயகத்தை தடம் புரளச் செய்த நமது ஆட்சியாளர்களின் பங்கே அதிகம்.
பழங்குடி மக்களின் மண் மீதான போர்
நாடு முழுதும் பழங்குடி மக்களின் மண் மீது
அறிவிக்கப்படாத ஒரு யுத்தம் நடந்து வருகின்றது. எல்லா பலமும் வாய்த அரசு
நிகழ்த்தும் இத் தாக்குதல் பெரும் வாழ்வியல் ஆபத்தினை இம் மக்கள் மீது
தினித்துள்ளது. மத்திய இந்தியாவில் இதன் தாக்குதல் நாட்டில் ஒரு உள் நாட்டு
அமைதியிமையை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் பொ பிரச்சணையினை
புரிந்து கொள்ள களமாக உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 28 வகை பெரும்
கனிமங்கள் கிடைக்கின்றன. இரும்புத்தாது இந்தியாவில் அதிகம் கிடைக்கும்
இடமாகவும் இது உள்ளது. பாக்சைட், டால்மியம் உள்ளிட்ட பல கனிமங்கள் இங்கு
உள்ளது. இப்பூமியில் பழங்குடிகள் வசித்து வருகின்றனர். மத்திய ஊரக
வளர்ச்சித் துறையின் நிலச் சீர்திருத்தம் குறித்த அறிக்கையில் இப்பகுதியில்
முன்பு மேற்கொள்ளப்பட்ட நில ஆர்ஜித முயற்சி பொது மக்களின் கடும் எதிர்ப்பு
காரணமாக கைவிடப்பட்டதையும் எனவே கனிம வளங்களை எடுக்க வேறு முயற்சி
அரசுக்கு தேவைப்பட்டதையும் சுட்டிக் காட்டியது. (2) எனவே ‘அமைதி இயக்கம்’
என்ற சல்வார் ஜூடும் என்ற கூலிப்படையை உருவாக்கியது அரசு. இப்படைகளுக்கு
இரும்பு கம்பெனிகளான டாடாவும், எஸ்ஸாரும் பெரும் தொகை கொடுத்து உதவி
வருகின்றன. இக்கூலிப் படைகள் அரச படைகளுடன் சேர்ந்து மிகக் கொடுமையான மனித
உரிமை மீறல்களை பழங்குடி மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டனர்.
கொலைகள்? பாலியல் வன்முறை? சித்திரவதை என அது நீண்டது. அதன் விளைவாக
சத்தீஸ்கர் மாநில தண்டிவாடா மாவட்டத்தில் மட்டும் 664 கிராமங்களை
முற்றிலும் கைவிட்டு பழங்குடி மக்கள் பக்கத்திலுள்ள மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா,
ஆந்திரா காட்டுப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். காலியான
இப்பகுதிகளை சுரங்க நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வருவதில் ஆர்வமாக உள்ளதாக அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது. (Committee on
State Agrarian Relations and Unfinished Task of Land
Reforms. Volume I, draft report pg 161. Ministry of Rural
Development, Government of India.)
சத்தீஸ்கரில் உள்ள கனிமங்களை இரயில்
மூலம் கொண்டு செல்வதற்கு அதிகப் பணம் செலவாகிறது என்பதற்காக குழாய்கள்
மூலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கம்பெனிக்கு நேரிடையாக கொண்டு செல்ல
எஸ்ஸார் நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல்
உரிமைகளுக்கு எதிராக 25 மீட்டர் அகலத்தில் 267 கிலோ மீட்டர் குழாய்கள்
சத்தீஸ்கரிலிருந்து விசாகப்பட்டினம் வரை கட்டப்பட்டது. இதில் இரும்பு
தாதுக்களுடன் தண்ணீர் கலந்து அனுப்பப்படுகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு 2.5
கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது.(3) எனவே எஸ்ஸார் கம்பெனிக்காக சபரி
ஆற்றின் பெரும்பகுதி திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோன்று சத்தீஸ்கரில்
ஓடும் முக்கிய நதிகளான கேலு, குர்குட், கருணா, சியோநாத், மானத் போன்ற
ஆறுகளும் தனியார் கம்பெனிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராய்க்கர் என்ற
ஊரின் வழியாக சென்ற கேலு நதி ஜிண்டால் இரும்பு மற்றும் மின்சார
நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டாகி விட்டது. தினமும் 35,400 கியூபிக்
மீட்டர் தண்ணீரை இந்த ஆலைகள் தாங்கள் கட்டியுள்ள தனியார் அணைகள் மூலம்
எடுத்துக் கொள்கின்றன.(4) ஆக பழங்குடிகள், விவசாயிகள் தங்களின்
வாழ்வாதாரமான தண்ணீர் பயன்பாட்டு உரிமையை முற்றிலும் இழந்து விட்டனர். நமது
வளர்ச்சித் திட்டங்கள் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் பொது நலனைப்
பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாமல் உருவாக்கப்பட்டவை. இதனால் உலகில் வேறு
எங்கும் நிகழாத ஒரு பெரும் சோகம் இங்கு நிகழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டு
சுதந்திர இந்தியாவில் வளர்ச்சித் திட்டங்களுக்காக சொந்த மண்ணிலிருந்து
அப்புறப்படுத்தப்பட்ட எளிய மக்களின் எண்ணிக்கை 6 கோடியாகும். இதில்
பெரும்பான்மையானவர்கள் பழங்குடி மக்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பின
மக்களை அடிமை வியாபாரத்திற்கு உட்படுத்தியதால் 200 ஆண்டு சோக நிகழ்வில்
இடம் பெயர்ந்த கருப்பின மக்களின் எண்ணிக்கையே 5 கோடி என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது.(5) இவ்வாறு சொந்த நாட்டில் அகதிகளாக ‘வளர்ச்சிக்காக’
இடம் பெயரச் செய்யப்பட்ட இம்மக்களுக்கு அரசின் மறு வாழ்வு என்பதும் வெறும்
கானல் நீரே. ஆக மலைகளிலும், வனங்களிலுமிருந்து இம்மக்கள் விரட்டப்படுவது
குறித்துப் பேசுபவர்கள், அரசின் பொருளாதார வன் செயல்களையும், அரச
வன்முறைகளையும் விமர்சிப்பவர்கள் காட்சி ஊடகங்கள் மற்றும் இதர அரசின்
ஊதுகுழல்களில் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என சிறுமைப்படுத்தும் சனநாயக விரோத போக்கு தொடர்கின்றது.
பழங்குடிகள் வளங்களிலிருந்து வெளியேறுதல்
பழங்குடி மக்கள் நாள்தோறும் பல்வேறு கடும் நேரான மற்றும் மறைமுகமான
தாக்க்தலுக்கு உள்ளகி வருகின்றனர்.அவர்களின் மண் ,பண்பாடு அதன் தனித்தன்மை
குறித்து எந்த சிறு முக்கியத்துவமும் உலக்மயமாக்கல், நவீன தாராளமயமாக்கல்
சூழலில் ஆட்சியாளர்கள் தர தயாராக இல்லை. பழங்குடி மக்களின் பகுதிகளுக்கென
ஏற்கனவே நமது அரசியலம்ப்பு சட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பிரிவுகளில்
உள்ள பாதுகாப்புகள் வன உரிமைச்சட்டம் 2006 மற்றும் பஞ்சாயத்து ராஜ்
பட்டியல் பகுதி விரிவாக்கச்சட்டம் ஆகியவற்றில் உள்ள கூறுகளின் மையமான
கருத்தான பழங்குடி பகுதியில் நடைபெறும் சுரங்கம் உள்ளிட்ட எந்த வளர்ச்சி
பணியும் அம் மக்களின் சமூகத்தின் ஒப்புதலோடு மட்ட்மே ந்டைமெற வேண்டும் என்ற
பிரிவு பண்ணாட்டு மற்றும் இந்திய பெரு முதலாளிகளுக்கு வளங்களை கப்பாளிகரம்
செய்யும் சுதந்திரத்தினை தடுப்பதாக உள்ளதால் சுரண்டல்வாதிகள்,
முதலாளிகளுக்கு தடையாக உள்ளஅப்பிரிவுகளை நீக்க ஒரு பெரும்பணி (lobby)
அதிகார மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் நடந்து முடிந்து விட்டது.2013
பாராளுமன்ற பட்செட் கூட்டதொடருக்கு பின் Right to Fair Compensation and
Transparency in Land Acquisition,
Resettlement and Rehabilitation Bill என்ற சட்ட நிறைவேறப்போகின்றது. போதிய
இழப்பீடு என ஒன்றை கொடுத்து நிலத்திலிருந்து ,அவர்களின் ஜீவாதார
வாழ்வியல் உரிமைகைகளிருந்து அவர்களை அப்புறப்படுத்த எல்லா அதிகாரமும்
அரசின் கைகளுக்கு வரப்போகின்றது. வாழ்வியல் உரிமை என்ற அடிப்படை மனித
உரிமையினை காரணம் காட்டி இயற்கை வளங்களிருந்து மக்கள் வெளியேற மறுப்பதை
பணம் என்ற அளவீட்டை காட்டி அம் மக்களை வளங்களிந்து விரட்டுவதே இச்
சட்டத்தின் விளைவாக இருக்கப்போகின்றது. நவீன தாராளவயக்கொள்கையின் முக்கிய
நோக்கமான எல்லாவற்றிக்கும் சந்தயினை (market structure)பாதிக்காதவகையில்
பணத்தின் வடிவில் தீர்வு காண்பது என்ற வன்முறை சட்டமாக மாறுகின்றது. இதனால்
அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்கள் குறிப்பாக பழங்குடி மக்கள்.
சுற்றுச்சூழல் நிறுவனங்கள்
பழங்குடி
மக்கள் ஒரு புறம் அரசு சார்ந்த அமைப்புகளின் தாக்குதலை எதிர் கொள்ளும்
சூழலில் மற்றொரு புறம் வன சுற்றுச்சூழல்வாதிகள் மற்றும் வன விலங்கு
ஆர்வலர்கள் என தங்களை பிரதிநிதிதுவம் செய்யும் அரசு சாரா தொண்டு
நிறுவனங்களின் கருத்டு தாக்குதலையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. வனம்
என்பது முழுக்க விலங்குகளும் மரம் செடிகளும் இருக்கும் இடம் என்ற மேற்குலகு
மற்றும் அமெரிக்கவின் வனச்ச்சட்டத்தை பொருத்து வனம் வெறும் விலங்குகள்
வாழும் இடம் மட்டுமே.The US Wilderness Act (1964) defines wilderness as: “an area where the earth and its community of life are untrammeled by man, where man himself is a visitor who does not remain.”
அமெரிக்கா சார்ந்த மக்களுக்கு எதிரான கருத்தாக்கங்கள் இந்த கானுயீர்
ஆர்வலர்கள் பேசுகின்றனர்.அமெரிக்காவின் வனச்சட்டம் உலகம் முழுதும் சூழல்
காரணமாக ஏராளமான நிலகங்கள் பூர்வகுடிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
1900 ஆண்டிலிருந்து 1950 வரை 600 வன விலங்கு பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.
தற்போது உலகின் 12% நிலம் இந்த சூழல்வாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த
நிலப்பரப்பு ஆப்பிரிக்காவை விட பெரியது. இப் பகுதிகளிலிருந்து சுமார் 2
கோடி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் இவர்கள் பெருபகுதியினர் பழங்குடி
மக்கள், பூர்வ குடிகள்.இம் மக்களை சூழல் அகதிகள்(conserve refugees) என
அழைக்கின்றனர். பூர்வ குடிகள் வனத்த்டின் பிரிக்கப்படமுடியாத சக்திகள்
என்பதையும் வனத்திற்கும் பழங்குடிகளுக்க்மான தொப்புள் கொடி உறவு ள்ளது
என்பதையும் இச் சூழல் வாதிகள் மதிப்பதில்லை. காணுயிர் பிரச்சாரத்திற்காக
உலகின் பல்வேறு பெறும் செல்வம் படைத்த மண்ணாட்டு கம்பெனிகளின் ஆதரவில்
காணுயிர் பிரச்சாரம் செய்யும் தொண்டு நிருவனங்களான உலக் வன விலங்கு நிதியம்
(World Wide Fund for
Nature (WWF) ,international Union for the Conservation of Nature
(IUCN), The Nature
Conservancy (TNC), Conservation International (CI), , African Wildlife
Foundation (AWF) and Wildlife
Conservation Society (WCS) அதன் நிதியின் மூலம் இக் கருத்தாகத்தினை
காணுயிர் தொண்டு நிருவணங்கள் மூலம் பிரச்சாரம் செய்கின்றன. அரசின் அதிகார
மையம், வனத்துறை என இதன் செல்வாக்கும் கருத்து ஊடுருவல்களும் பழங்குடி
மக்களை சட்டத்தின் பெயரிலும் ,அதிக்கார நடவடிக்கை வழியும் பழங்குடி
மக்களை சுழல் அகதிகளாக மற்ற முயலுகிறது. இக் கருத்தாக்கம் மற்றும்
நடவடிக்கைகள் பழங்குடி மக்களின் கண்ணியம் மற்றும் மனித உரிமைக்கு எதிரானது.
நாட்டில் எல்லா பழங்குடி மக்களும்
ஏதேனும் ஒரு வகையில் இந்த அச்சுருத்தலை எதிர்கொண்டுள்ளனர். இம் மக்கள்
வாழும் 70% பகுதி வனமாகவும் 90% பகுதியில்
கனிம வளம் மிக்கதாகவும் உள்ளது. இவர்களின் கலாச்சாரம் மொழி அணைத்தும்
தனித்தன்மை வாய்ந்தது. ஆனால் நாள் தோறும் உயிர் வாழ கடுமைஆக போராடவேண்டிய
நிலையிலேயே இம் மக்கள் உள்ளனர். வளர்ச்சி என்ற பெயரில், திட்டங்கள் என்ற
பெயரில் சுரங்கங்களுக்காக, பண்னாட்டு கம்பெனிகளுக்காக நாள் தோறும் இம்
மக்களுக்கு சொந்த நாட்டில் அகதியம் பரிசளிக்கப்படுகிறது. மண்ணை விட்டி
விரட்டப்படும் மனிதனுடன் கலாச்சாரத்தின் வேர்களும் பிய்க்கப்படுகின்றது.
ஆயிரமாயிரம் ஆண்டுகால பழங்குடி மொழியும் நாள் தோறும் அதனை கடைசியாய் பேசி
மறைந்த மனிதனின் புதை குழியில் சமாதி செய்யப்படுகின்றது. நமது சமூகம்
வழியதே வெல்லும் (survival of fitness ) என்ற கொள்கைகளை கடைபிடிக்கின்றது.
பழங்குடி மக்கள் தோல்வி கண்டவர்கள். தோல்வியடைந்த கோவனின்
வாரிசுகள்.அவர்களும் அறிகிவரும் ஓர் உயிரிணம் (Endanger species ) என்பதை
உலகு அறிய தயாராக இல்லை. பழங்குடி மக்கள் நமது ஆள்பவர்களிடம் எதிர்பார்த்து
நிற்பது சலுகையல்ல. அவர்கள் கண்ணியத்தோடும் மனித உரிமைகளோடும் வாழம் உரிமை படைத்தவர்கள்.அவர்களின் சனநாயக சூழலை பாதுகாப்பதின் மூலமே நம் நாடு தனது இருப்பையும், சனநாயகத்தையும் உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும். (தூத்துக்குடி வ.உ.சி கல்லுரியில் 2013 மார்ச் மாதம் பேசியது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக