சனி, 29 ஜூன், 2013


குழந்தைகளுக்கு தீங்கிழைத்தலை தடுத்தல்

(ச.பாலமுருகன்)

பள்ளி சூழல்களில் தொடர்ந்து பிரச்சனையாகி வரும் குழந்தைகள் மீதான பாலியல் பாதிப்பு புகார் காரணமாகவோ அல்லது அந்த பிரச்சனையினை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்றோ , தமிழக அரசு கடந்த  28.5.2013 தேதிய பள்ளி கல்வித்துறை சார்ந்த அரசானையில் , தமிழகத்தில் பெண்கள் பள்ளிகளுக்கு ஆண் ஆசிரியர்களை நியமிப்பதில்லை என முடிவெடுத்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு எந்த விதமான  தீர்வினை குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை தடுப்புக்கு  தந்துவிடப்போகின்றது என்பது ஒரு பெருத்த கேள்வியாக உருவாகியுள்ளது. பள்ளிகளுக்கு ஆண் ஆசிரியர்களை நியமிக்க மறுப்பதன் முலம் பிரச்சனையினை தீர்த்துவிட முயலும் அரசு, பள்ளிக்கு வெளியில் நடைபெறும் வன்முறைகளுக்கு என்ன தீர்வினை சொல்லப்போகின்றது.
சமூகத்தில்  பள்ளிகள் தனித்து இருப்பதில்லை. பள்ளிகளுக்கென பிரத்தியோக ஒழுக்க விழுமியங்கள் உருவாகிவிடுவதுமில்லை. பள்ளியில் நிகழும் வன்செயல்கள் சமூகத்தில் நிகழும் குழந்தைகள் மீதான வன்முறையின் ஒரு நீட்சியே., நமது சமூகத்தின் எல்லா பக்கங்களிலும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது இந்தியா போன்ற சுமார் 430 மில்லியன் உள்ள நட்டில்  சுமார் ஐந்தில்  ஒருவர் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள்.  கடந்த 2005 ஆண்டு துளிர் ,சேவ் சில்ரன் (save children),  Centre for healing and preventive child sexual abuse அகிய தன்னார்வ தொண்டு அமைப்புக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் , பல்வேறு பொருளாதார பின் புலத்தில் உள்ள மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் ஆண் குழந்தகள் 48% பேரும், பெண் குழந்தைகள் 39% பேரும் பாலியல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டது. சுமார் 72% குழந்தைகள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்செயல்களைப்பற்றி வெளிப்படுத்தவில்லை என்பதையும் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மெளனமே குழந்தைகளை பாலியல்  பாதிப்புக்கு உள்ளாக்குபவர்களுக்கு  பாதுகாப்பாக உள்ளது. பொதுவாக குழந்தைகள் வெளிப்படுத்துவதில்லை என்பதாலேயே திரும்பத்திரும்ப பாதிப்பை தைரியமக செய்யும் நிலை உள்ளது. இதில் வேடிக்கை என்ன வென்றால் குழந்தைகளை இந்த பாதிப்புக்குள்ளாக்குபவர்களில் பெரும்பாலானோர் அந்த குழந்தைகள் நன்கு அறிந்த நபர்கள். வீட்டிலோ அல்லது வீட்டுக்கு அருகிலோ , பள்ளிப்பகுதிகளிலோ வேறு விளையாரும் இடங்களிலோ இந்த  நபர்களை குழந்தைகள் எதிர்கொள்கின்றனர். பாலியல் பாதிப்பென்பது பெண் குழந்தைகளுக்கு மட்டும் நிகழக்கூடிய ஒன்று  அதுவும் ஆண் மூலம் மட்டுமே அது நிகழக்கூடியது என்ற ஒரு பழமையான மூட நம்பிக்கைக்கு அரசும் விதி விலக்காக இல்லை.
 கடந்த 2013 பிப்ரவரி மாதம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்செயலுக்கு எதிராக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த கோயமுத்தூர் குற்றவியல் வழக்குரைஞர் சங்கம் முடிவு செய்திருந்தது. இப் பிரச்சாரத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்ட ஆர்வமுள்ள இருபாலர் வழக்குரைஞர்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பாதிப்பு மற்றும் தற்காத்துக்கொள்வதற்கான முறை குறித்து முதலில் பயிற்றுவிக்கப்பட்டது. ஏனெனில் குழந்தைகளிடம் சென்று பேசுவது என்பதே ஒரு சவால் ,அதிலும் பாலியல் வன்முறையிலிருந்து தற்காத்து கொள்வது குறித்து பேசுவது பெரும் சவால் என்று உணரப்பட்டது. குழந்தைகளுடன் தொடர்ந்து பணிபுரிந்து வரும்  சைல்ட் லைன்(Child line) போன்ற அமைப்புக்களின் நிர்வாகிகள் வழக்குரைஞர்களிடம் தங்களின்  அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.குழந்தைகளின் மனநிலை குறித்தும், அவர்களிடம் எப்படி பேசலாம் என்பது குறித்தும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கூறினர்.   தேசிய மனித உரிமை ஆணையத்தின் குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு குறித்த கையேடு  மற்றும் குழந்தைகளின் உரிமைகள் குறித்து வெளிவந்த பல்வேறு உரிமை சார் அமைப்புகளின் வழிகாட்டுதலகள் பள்ளிகளுக்கு சென்று பேசப்போகும்  வழக்குரைஞர்களுக்கு தரப்பட்டது. முதலில் ஆர்வமாக பலர் முன் வந்த போதும் இந்த சொற்பொழிவு இவ்வளவு கடினமானதா என கருதியதாலேயோ என்னவோ பலர் பின் தங்கினர். இறுதியில்  பேசுவதில் ஆர்வமுள்ளவர்கள் , உரிமை சார் செயல்பாட்டாளர்கள், மனித உரிமையில் அக்கறை உள்ளவர்கள் என சுமார் 30 பேர் தங்களை தயார் படுத்திக்கொண்டனர் . அவர்களுடன் துணையாக செல்பவர்கள் என இன்னொரு 30 பேர் முன் வந்தார்கள்  கோவை மாவட்ட கல்வி அதிகாரிகளின்  அனுமதியும் பெறப்பட்டது.அதன் பின் கோவையின் சுற்றுப்பகுதியில்  அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என வழக்குரைஞர்கள் பிரிந்து சென்று மாணவர்களிடம் பேச சென்றார்கள். அந்த சமயம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு அட்டவனை அறிவிக்கப்பட்டிருந்ததால்  6 முதல் 9 வகுப்பு மாணவர்களே பெரும்பாலும்  பள்ளிகளில் விழிப்புணர்வு கருத்தை கேட்க அமரவைக்கப்பட்டனர். மாணவர்களிடம் ஒரு சொற்பொழிவு பாணியில்  பேசினால் அவர்கள் எளிதில் சோர்வடைந்துவிடக்கூடும் என்பதால் ஒரு உரையாடல் வடிவில் பேச்சை கட்டமைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது.
"மாணவர்களே குழந்தைகளுக்கு பாலியல் பாதிப்பை , தீங்கை ஏறபடுத்துவது என்றால் என்ன என தெரியுமா?" என தயங்கியபடியே பேசுபவர் கேட்டபோது குழந்தைகளோ
 "குழந்தைகளை கெடுப்பதுதானே? "என கத்தினர். ஊடகங்கள் நமது உரையாடலை எளிமையாக்கி விட்டது.
" குழந்தைகளை யார் கெடுப்பார்கள்? " என அடுத்த கேள்வியினை கேட்டபோது  அவர்கள் பெரும்பாலான பள்ளிகளில் சொன்ன ஒரே மாதிரி பதில்
" தீவிரவாதிகள்,பயங்கரவாதிகள், திருடர்கள்,கொள்ளைக்காரர்கள்"
இதுவும் ஊடகங்கள் வழி பதியப்பட்ட செய்தியாகவே அறிய முடிந்தது. அந்த பதிலின் தொடர்ச்சியாக பேசுபவர்

" இல்லை , உங்களுக்கு கெடுதல் செய்பவர் கெடுப்பவர் தோற்றத்துக்க் அவ்வளவு கொடூரமானவரில்லை அவர் உங்களுக்கு நன்கு அறிமுகமான நபராக இருக்கக்கூடும்"

 என அந்த  பாலியல் வன்முறையிலிருந்து குழதைகளை தற்காத்துக்கொள்ளும் விழிப்புணர்வு  பயிற்சி தொடங்குவது வழக்கமாக இருந்தது . உலகம் முழுதும் குழந்தைகளின் பாலியல் வன்முறை தடுப்பு பால பாடமான" நல்ல தொடுதல், கெட்டதொடுதல்" மற்றும் பாலியல்  பாதிப்பு நிகழும் போது அதை மறைத்து வைக்காமல் மற்றவரிடம் பேசுதல் , உதவி கோருதல் .  குழந்தைகளின் உடல் பிரத்தியோகமானது அதை பிறர் தேவையின்றி தொட அனுமதிக்க கூடாது என பல்வேறு சின்ன சின்ன தகவல்களுடன் சுமார் ஒரு மணிநேர பேச்சு கட்டமைக்கப்பட்டது. கோவையினை சுற்றி உள்ள 60 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் பரிட்சை நடப்பதாகவும் , மாணவர்கள் படித்துக்கொண்டிருப்பதாகவும்  ,சாக்கு போக்கு கூறி  தயங்கிய  ஒரு சில ஆசிரியர்கள் கூட இறுதியில் இப் பிரச்சாரத்தை வரவேற்றனர். தங்களால் வெளிப்படையாக பேச முடியாததை வழக்குரைஞர்களின் உரையாடல் பேசிவிட்டது என சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த அனுபவத்தில் ஒன்று வெளிப்படையாக தெரியவந்தது . அது , இது வரை அரசு பாலியல் தீங்கிழைத்தல் தடுப்பு கல்வியினை மாணவர்களுக்கும் கொண்டு செல்லவில்லை என்பதும்,ஆசிரியர்களிடமும் கொண்டு செல்லவில்லை என்பதும் புலப்பட்டது.. குழந்தைகளை எவ்விதம் மதிப்பது. குழந்தைகளின் உரிமைகள், அவர்களின் கண்ணியம் , மரியாதை மற்றும் அவர்களுக்கு எதிராக சித்தரவதையோ ,தண்டனையோ தடைசெய்யப்பட்டது என்ற ஆழமான கருத்து கல்வி மையங்களில் கொண்டு சேர்க்கப்படவில்லை. பாலியல் சீண்டல்களை அதன் அறிகுறிகளை அறிதல் என்பது அந்த பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள உள்ள முதல் அடிப்படை அலகாகும்.இந்த அனுபவம் பள்ளிகளுக்க் சென்றடையவில்லை. வழக்குரைஞர்கள் பள்ளிகளில் சென்ற் பேசுவதால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க ஆசிரியர் பற்றிய எதிரான கருத்துக்களை வெளிப்படுத்துவதில்லை என முடிவு செய்திருந்தனர். ஆசிரியர்களின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மட்டுமே பேசினர்.  ஆசிரியர்கள் நிச்சயம் பள்ளிகளில் பாலியல் பாதிப்புக்களை தடுக்க ஆக்கப்பூர்வமான பங்காற்றக்கூடிய சக்திகள் அவர்களை எதிர்மறையாக நிறுத்ததேவையில்லை என்ற முடிவு சாதகமான பலன் தந்தது.
ஆக பிரச்சனை ஆசிரியர் ஆணாக இருக்கின்றார் அல்லது பெண்னாக இருக்கின்றார் என யோசிப்ப்பதில் இல்லை. குழந்தைகளின் உரிமைகள் மற்றும் குழந்தைகளை நடத்துவது குறித்த விழிப்புணர்வை அறியச்செய்தல்,  குழந்தைகள்  பாதுகாப்பு சட்ட நிலைகளைப் பற்றி விவாதித்தல்,பாலியல் தீங்கிழைத்தலில் ஆசிரியரை பாதுகாவலர் நிலையில் வைத்தல் ஆகியவற்றில்  உள்ளது. பள்ளிகளுக்கு சென்று வளர் பருவ மாணவர்களை   நேரிடையாக சந்தித்த கள அனுபவம் மூலம் ஒன்றை உறுதியாக கூறமுடியும். குழந்தைகள் நாம் பொது புத்தியில்  நினைத்துக்கொண்டிருப்பது போல  அவ்வளவு அறியாமையில்,வெகுளிகளாக  இல்லை.அவர்களுக்கு நல்லது கெட்டது தெரிகிறது.அவர்களுக்கு நாம் நல்ல வழிகாட்டுதல்களை செய்யமுடியும்.  அவர்கள் பள்ளிகளில், பிற சூழல்களில் ஒரு அரோக்கியமான சூழலை உருவாக்ககூடிய சக்திகள்.  நமது வீடுகளில் கூட நாம் இந்த  பாலியல் தீங்கிழைத்தல் தடுப்பு மற்றும் தக்காத்துக்கொள்ளும் விவாதங்களை முன்னெடுக்க விரும்புவதில்லை. நமது மெளனம் ஆயிரமாயிரம் கால பழமைவாதத்தின் வழி உருவானது. தீங்கிழைப்பவர்கள் இதனையே தங்களுக்கு சாதகமாக கருதுகின்றனர். அரசும் கல்வி சூழலில் இந்த மெளனத்தை விரும்புகின்றது. எனவே அரசு பெண் குழந்தைகள் பள்ளிகளில் ஆண் ஆசிரியரை நியமிப்பதில்லை என தீர்வற்ற ஒன்றை தீர்வு என கருதுகின்றது. நாம் எல்லோரும்  ஒரு திறந்த விவாதத்தை  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தீங்கிழைத்தலுக்கு எதிராக எழுப்புவோம். நமது குழந்தைகளுக்கு சொல்லுவோம்.  இப் பிரச்சனையில் முக்கியமாக இருகிப்போய் கெட்டித்து உள்ள மெளனத்தை உடைப்போம்.
ஒரு ஆரோக்கியமான,பாதுகாப்பான உலகினை குழந்தைகளுக்கு சமைப்போம்.
Shanmugam Balamurugan <balamuruganpucl@gmail.com>
2:49 AM (4 minutes ago)

to PUCL

செவ்வாய், 25 ஜூன், 2013


நெருக்கடி நிலை நாள்
(ச.பாலமுருகன்)


ஜீன் மாதம் 26 ஆம் தேதி இந்திய சனநாயக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு நாள். 1975 ஆம் ஆண்டு அந்த நாளில் இந்தியாவின் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி நமது நாட்டின் உள் நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளதாக கூறி அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவுக்கு நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டினார். தலையாட்டி பொம்மையான ஜனாதிபதியும் நெருக்கடி நிலையினை பிறப்பித்தார். அந் நாளிலிருந்து அடிப்படை உரிமை மறுக்கப்பட்ட நாட்டின் குடி மகன் உச்சந்நிதிமன்றத்தின் கதவுகளை தட்டும் சிவில் உரிமை பறிக்கப்பட்டது. சட்டவிரோதமாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் தங்களின் மனித உரிமை மீறப்பட்டதாக நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனு Heabus corpus தாக்கல் செய்யும் உரிமையினை இழந்தனர்.எல்லா அதிகாரமும் பிரதமர்இந்திரா, அவரின் காங்கிரஸ் கட்சியின் கைவசமானது. இந்திய வரலாற்றில் ஒரு மோசமான சர்வாதிகார ஆட்சி அன்று உதயமானது.

1971 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்திராகாந்தி அரசு இயந்திரத்தை தவறாக ,தனக்கு சாதகமாக பயன்படுத்தி , தேர்தல் முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றார் என குற்றம் சாட்டப்பட்டது. ராஜ் நாராயணன் இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றியினை அலகபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து எதிர்த்திருந்தார். State of Uttar Pradesh v. Raj Narain அந்த வழக்கில் 1975 ஆண்டு ஜீன் 12 ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜக்மோகன்சிங்கா வழந்கிய தீர்ப்ப்பில் பிரதமர் இந்திராகாந்தி தேர்தல் முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றதாகவும் அதற்காக 6 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிருவது தடை செய்வாதாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. நாடுமுழுதும் ஏற்கனவே இருந்த வறுமை ,வேலையில்லா திண்டாட்டம் கூடவே இந்திராகாந்தியின் சர்வாதிகாரப்போக்குக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றோர் மேற்கொண்டுவந்த சனநாயக மீட்பு போராட்டங்கள் இந்த பின்னணியில் இந்திராகாந்தியின் தேர்தல் செல்ல்லாது மற்றும் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தடையிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள நெருக்கடி நிலை பிரகடணம் முலம் தன்னை ஒரு சர்வாதிகாரியாக நிறுத்திக்கொண்டார் இந்திராகாந்தி.நமது அரசியலமைப்புச்சட்டத்தின் பிரிவு 352 படிநாட்டின் பாதுகாப்புக்க் அச்சுறுத்தல் ஏற்படும் போர் சூழலில் இந்த நெருக்கடி நிலையினை பிறப்பிக்க முடியும் பிரதமரின் வேண்டுகோளினை ஏற்று மத்திய அமைச்சரவை க்டியரசு தலைவருக்கு இதனை நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கும். குடியரசுத்தலைவர் நெருக்கடி நிலையினை பிறப்பித்த பின் ஒரு மாத்தத்தில் பாராளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினரின் ஒப்புதலை பெறவேண்டும் இது ஆறு மாதம் நடைமுறையில் இருக்கும்.

நெருக்கடி நிலை பிறப்பிக்கபட்டவுடன் இந்திராகாந்திக்கு எதிரான எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொராஜி தேசாய், உள்ளிட்ட பல தலைவர்களும் தமிழகத்தில் தி.மு.க கட்சியினரும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினை சார்ந்தோரும் , நக்சல்பாரி இயக்கத்தவர் என பல பொதுவுடமை செயல்பாட்டாளர்களும் சிறை, சித்திரவதை என பாதிப்புகளை எதிர்கொண்டனர். அந் நாட்களில் சிறைகளில் நடந்தேறிய கொடுமைகளுக்கு சாட்சியமாக சிட்டி பாபுவின் சிறை குறிப்பு, தியாகுவின் சிறைக்குள் சித்திரங்கள் உள்ளிட்ட தமிழ் சிறை பதிவுகளும், ஆங்கிலத்தில் மேரி டைலரி ன் இந்திய சிறையில் என் நாட்கள் My days in indian prison ,மற்றும் அன்றைய ஐ.ஏ.எஸ் அதிகாரியான M.G தேவசகாயம் அவர்களின் JP in jail an uncensored accountஉள்ளிட்ட பதிவுகள் உள்ளன.

சட்டத்தின் ஆட்சி (rule of law )என்பதற்கு பதிலாக இந்திராவின் உத்திரவு படி ஆட்சி (rule of decree) என்ற நிலை உருவானது.பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டினர். நாட்டின் ஒன்பதுக்க்ம் மேற்பட்ட உயர்நீதிமன்றங்கள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை அரசு நெருக்கடி நிலையினை சொல்லி எடுக்கமுடியாது என தீர்ப்பு வழங்கியது. எனினும் உச்சநீதி மன்றத்திற்கு இந்த வழக்குகள் கொண்டு செல்லப்பட்ட போது,சிறைபடுத்தப்பட்ட மக்களுக்கு தனி மனித சுதந்திரம் உள்ளதா என்ற விவாதத்தை துவக்கிய சிவகாந் சுக்லாவின் Additional District Magistrate of Jabalpur v. Shiv Kant Shukla என்ற வழக்கில் இந்திய உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் பி.என்.பகவதி,சந்திரசூட்,பெக்,ரே மற்றும் கண்னா அடங்கிய பெஞ்ச்சின் தீர்ப்பில் நீதிபதி கணாவை தவிர நான்கு நீதிபதிகள் நெருக்கடி நிலையில் சிறைபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அதனை பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யமுடியாது எனவும் தீர்ப்பு வழங்கியது. அதில் மாறுபட்ட நீதிபதி கண்னா தனது சிறுபான்மை தீர்ப்பில் " இந்திய அரசிலைமப்பு என்பது வெற்று காகிதமல்ல அது நமது முந்தைய தலைமுறையின் தியாகத்தின் பலன்.மக்களே உண்மையான ஆட்சியாளர்கள் , எதோசர்வாதிகார சக்திகளின் கைகளில் மக்களின் உரிமையினை விட்டுத்தர முடியாது , விசாரணையினறி யாரையும் அரசு சிறையில் வைத்துக்கொள்ள முடியாது" என்றார். அவர் தனது மாறுபட்ட கருத்தை அவருக்கு நியமாக பணி முப்பின் அடிப்படியில் கிடைக்கவேண்டிய உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதி பதவியினை விலையாக கொடுத்த்ள்ளதாக அவரின் சகோதரியிடம் வெளிப்படுத்தினார். அந் நாளில் அவர்தான் நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக வரும் பணி முப்பு தகுதியுடனிருந்தார்.அவர் அய்யப்பட்டது போன்றே போன்று 1977 ல் இந்திரா காந்தி, அது வரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு கடைபிடித்துவந்த சீனியாரிட்டி முறையினை புறந்தள்ளி விட்டு இளைய நீதிபதியான எம்.ஹெச். பெக் தலைமை நீதிபதியாக மாற வழிவகை செய்தார். நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்த அளவு ஆள்பவர்கள் நெருக்கடி நிலையில் செல்வாக்கு செலுத்தினர் என்பதற்க்கு இது ஓர் உதாரணம்.

மேலும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் என்ற பெயரில் நாடு முழுதும் 83 லட்சம் மக்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு முந்தைய வருடம் 23 லட்சம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாட்டில் இந்த அதீத எண்ணிக்கை கட்டாய கருத்தடை செயல் திட்டங்களினால் உருவானது.இருபதம்ச திட்டம் என்ற பெயரில் அரசு உடகங்களில் இந்திரகாந்தி தனனை இந்த நாட்டின் விடிவெள்ளி என சுயதம்பட்டம் அடித்துக்கொண்டார். மறு புறம் நாடு முழுதும் அதிகார வர்க்கம் மற்றும் காவல்துறையின் சித்தரவதை ,மோதல் சாவுகள் தொடர்ந்தது. கேரளாவின் புகழ் பெற்ற வழக்கான பொறியியல் கல்லூரி மாணவர் ராஜன் போன்றோரின் கொலை, பீகாரின் பகல்புர் சிறையில்30 க்கும் மேற்பட்ட கைதிகளின் கண்களை பிடுங்கி ஆசிட் உற்றிய கொடுமை , சிறையில் துப்பாக்கி சூடு என அது நீண்டது. நாட்டின் பல பகுதிகளில் இளைஞர்கள் நக்சலைட் என்ற பெயரில் வேட்டையாடப்பட்டனர்.

இந்திய மக்களின் தன்னலமில்லா சிவில் வீரமிக்க போராட்டத்தால் 1977 மார்ச் மாதம் 23 தேதி நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் இந்திஅ அரசியலில் சிவில் உரிமை பேசுவதற்க் உள்ள வெற்றிடத்தைப்போக்க மக்கள் சிவில் உரிமைக்கழகம் உருவானது. சநாக சமூகத்தில் அதனை பாதுகாக்க , உரிமைகளை தக்கவைத்த்க்கொள்ள நாம் விழிப்ப்டனிருக்கவேண்டிய நேரமிது. அரசிலைமைப்புச் சட்டங்கள் இந்த நாட்டு குடிமக்களுக்கு வழங்கிய சமூக பாதுகாப்புகளான மாநிலங்களின் வழிகாட்டு நெறிமுறைகள், அடிப்படை உரிமைகள் என எல்லா பாதுகாப்ப் அரண்களையும் கடந்த 1990 களுக்கு பின் வந்த நவீன தாராளமயக்கொள்கை தகர்க்க துணிந்து விட்டது. அரசியலைப்பின் வழி நாடு நடிபோடாது உலகில் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார கொள்கைக் ஏற்ப ஆட்சி நடைபெறத்துவங்கி விட்டது. நெருக்கடி நிலையினை விட கொடுமை மிக்க பல சட்டங்கள் ஏழை எளிய பழங்குடி மக்கள் மீது பாய்கின்றது. கருத்துரிமை ,அரசின் கொள்கைகளுக்கு மாற்று கருத்து கொள்ளுதல் உள்ளிட்ட பல சனநாயக விழுமியங்கள் பாதிப்புக்குள்ளாகும் காலகட்டம் நடைபெறுகிறது. சொந்த மக்களின் மீது இந்திய அரசு போர் தொடுக்க முடியாது என அரசியலமைப்பு உறுதி செய்த போதிலும் , இராணுவ விமானங்களை பழங்குடி பயன் படுத்த ஒரு புறம் ஆதரவு திரட்டும் வேலைகளை பன்னாட்டு கம்பெனிகள் செய்கின்றன.

ஆக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உருவாகியுள்ள காலகட்டங்களில் சனநாயக மீட்பு என்ற உன்னத லட்சியங்களை உயர்த்தி பிடிப்பதே ,நாட்டின் சுதந்திரத்திக்கு நாம் செய்யும் பாதுகாப்பாகும்.எளிய , ஏழை மக்களை இந்த சனநாயக நீரோட்டத்தில் பங்கேற்க செய்வது ஒன்றே நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும். நாடு மக்களால் ஆளப்படுவது. மக்களை பாதுகாக்கவே காவல் அமைப்புகள். ஆனால் முறனாக பன்னாட்டு ,இந்நாட்டு கம்பெனிகளின் நலனே நாட்டின் நலன் என்ற தடம் மாறிய நவீன தாரளமய கொள்கை மக்களை அவர்களின் எல்லா உயிர்வாழும் வளங்களிலிருந்தும் அப்புறப்படுத்துகின்றது. அதற்காக திருப்பத்திரும்ப நெருக்கடி நிலைகள் மறு உருவாக்கம் செயப்படுகின்றது.நாம் நெருக்கடி நிலை வடிவங்களை இடைவிடாது எதிர்ப்போம்.

நாம் சனநாயகம் காக்க எழவேண்டிய காலமிது.

(ஜீன் 26 நெருக்கடி நிலை எதிர்ப்பு நாள் மற்றும் உலக சித்தரவதை எதிர்ப்பு நாள்)