வியாழன், 17 நவம்பர், 2016

சோளகர் தொட்டி ச.பாலமுருகனின் "பெருங்காற்று " நெஞ்சை உலுக்கும் (பெண்ணிய) கூருணர்ச்சி மிக்க சிறுகதைகள்!
*********************************************(*சந்தர மோகன்)
மாபசான், ஆண்டன் செகாவ், எர்னஸ்ட் எமிங்வே,ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்ற ஆளுமைகள் துவங்கி, பிரேம் சந்த், அம்ரிதா பிரீதம், மகாசுவேதா தேவி, தகழி போன்ற இந்தி,வங்க, மலையாள எழுத்தாளர்கள் வரையிலும் எழுதிய சிறுகதைகள் நினைவில் நின்றவை; புகழ்பெற்றவை.
வேறுபட்ட இலக்கிய பார்வைகள் கொண்டிருந்த போதும் கூட, 80 கள் வரையிலும், தமிழ் இலக்கியத்தில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், லா.சா.ரா, தி.ஜானகிராமன்,மெளனி, கு.அழகிரிசாமி, விந்தன், அசோக மித்திரன், கி.ராஜநாராயணன், அம்பை, வண்ண தாசன், வண்ண நிலவன் எனப் பலரும் தங்கள் சிறுகதைகள் மூலமாக கொடிகட்டி பறந்தனர்.
பிந்தைய கால கட்டத்தில் , பலரும் சிறப்பாகச் சிறுகதைகள் எழுதிய போதும், 'பல்கிப் பெருகிய பிரமாண்டமான நாவல் படைப்புகள் எல்லாம், சிறுகதைகளை ஓரங்கட்டி தமிழ் இலக்கியத்தை கைப்பற்றி விட்டன' எனக் கருதிக் கொண்டிருந்தேன்.
ஆனால், ச.பாலமுருகனின் சிறுகதைகள் தொகுப்பான பெருங்காற்று மனதை கலங்கடிக்கிறது; புயல் போல் தாக்குகிறது ; நாம் என்ன செய்யப் போகிறோமென மனசாட்சியை பிடித்து உலுக்குகிறது. "மனித மனங்களை பண்படுத்தும், மாற்றி அமைக்கும் ஆற்றல் சிறுகதைகளுக்கு உண்டு " என்பதை உணர்த்துகிறது.
எளிய மனிதர்களின் துயரகரமான வாழ்க்கை தான் பெருங்காற்று!
--------------------------------------------------------
பாலமுருகனின் கதைமாந்தர்கள் அடித்தட்டு எளியமக்கள், இராணுவம், காவல்துறை போன்ற அரசு வன்முறை உறுப்புகளாலும், ஆணாதிக்க வன்முறையாளர்களாலும் சீரழிக்கப்பட்ட பெண்கள், வீரப்பன், காஷ்மீர், பஞ்சாப் தீவிரவாதிகள் வேட்டைகள் என்ற பெயரில் நடைபெற்ற மோதல்களால் தங்கள் சொந்தங்களை, வாழ்க்கையை தொலைத்தவர்கள், மன்னராட்சியில் கணவனை இழந்த பழங்குடி அபலை, தமிழ் நாட்டில், எதிர்காலம் அற்ற ஈழ அகதிகளாக வாழ்பவர்கள்.பெண்களின் துயரங்கள் கூருணர்வுடன் விளக்கப்படுகின்றன. ஆலைக்கு நிலம் கொடுத்ததால் இடம்பெயரும் ஏழை விவசாயி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட கிடைக்க தடுமாறும் பழங்குடி கிராமம், சித்தாப்பாவின் நிலவெறிக்கு பழிதீர்த்த அப்பாவி இளைஞன் என அனைவரும் எளிய மனிதர்கள், பலவீனமானவர்களின் குரல்கள்..பெருங்காற்று ஆக, சூறாவளியாக ஓலமிடுகிறது.
எளிமையான எழுத்து நடை, கச்சிதமான சொற்பிரயோகம், வட்டாரத்தில் நிலவும் பண்பாடுகள், கலைகள் (ஒட்ட நாடகம் ) என வரலாறு புனைவுகளாக வெளிப்படுகிறது.
மக்கள் இலக்கியம்!
----------------------------------
கிளாரா ஜெட்கின் உடனான உரையாடலில் " கலை இலக்கியம் மக்களுக்குரியது...இலக்கியம் மக்களின் உணர்வெழுச்சிகளை, சிந்தனை ஓட்டங்களை, மன உறுதிகளை ஒன்றுபடுத்தி அவர்களை வாழ்வில் உயர்த்த வேண்டும் " என்றார், லெனின்.
தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளும் தீவிரத் தன்மை கொண்டவை தான்.
சந்தன வீரப்பன் வேட்டை என்ற பெயரால் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட, விதவைகளாக்கப்பட்ட பெண்களின் வேதனைகள், வெள்ளைக்கார சர்வேயர் ஸ்மித்தின் மனசாட்சியை உலுக்கும் கணவனை இழந்த பழங்குடிப் பெண்ணின் ஓலம், காஷ்மீரில் தொலைந்து போன குலாமை தேடி அலையும் மனைவி் மற்றும் தாயின் துயரம், பஞ்சாபில் இராணுவ வேட்டையில் மகனை இழந்து புத்தி பேதலித்து அலையும் வயதான தாயின் அவலம், எதிர்காலம் இல்லாத ஈழ அகதிகள் முகாமில் இறக்கும் மலரின் சோகம் என, சிறுகதை தொகுப்பு நெடுக பெண் இனத்தின் வேதனை, வலி தெரிகிறது.
பெருங்காற்று கலக குரல் :-
----------------------------------------------
வீரப்பன் வேட்டையில், காவல்துறை கொட்டடிகளில் பிடித்து, வரன்முறையற்ற வன்புணரச்சியால் சீரழிக்கப்பட்ட வள்ளி,செம்பியின் அவமானங்கள், வலிகள், புதியதொரு வாழ்க்கையிலும் பிடித்தாட்டும் சந்தேகம், வேதனை மிக்க வாழ்வு, வரலாறு தான் பெருங்காற்று. வள்ளியை வார்த்தைகளால் கொன்ற அம்மா, விலகிப் போகும் குழந்தைகள், வன்புணர்ச்சி வேட்கையோடு துரத்தி அனுபவித்து ஆணாதிக்க வெறியர்கள் செய்யும் கொலை, தனது மார்பகங்களை திறந்து காட்டி ஆணாதிக்கத்திற்கு எதிராகத் தாண்டவம் ஆடும் செம்பியின் கலகம் - தமிழ் சமூகத்தின் கூட்டு மனசாட்சியை உலுக்கி எடுக்கிறது.
பெண்கள் மீது சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் தொடுக்கப்படும் வன்முறை களின் வலிகளை, பெரும் பாரமாக இறக்கி வைத்து விட்டார், பாலமுருகன். நாம் என்ன செய்ய வேண்டும்?
மாக்சிம் கார்க்கி சொன்னார் :-
" கலை இலக்கியம் இன்றைய வாழ்வை மட்டும் சுட்டிக் காட்டினால் போதாது. நாளைக்கு அவன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சித்தரித்துக் காட்ட வேண்டும் "
பாலமுருகன் வெற்றி பெற்றுள்ளார். அவரது சிறுகதைகளான 'பெருங்காற்று' க்கு தமிழ் சிறுகதை உலகில் நீங்காத இடம் உண்டு.                                                                                                              வெளியீடு; நியு செஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை. விலை 120,